பத்தாயிரம் மணி நேரம் என்பது என்ன கணக்கு?


10000 மணி நேரக் கோட்பாடு


bill-gates-1983உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இவர்கள் எல்லோருமே வெற்றிப்பாதையில் நடைபோடுகிறார்களா, வாழ்வின் உச்சாணிக்கொம்பில் நிற்கிறார்களா? இல்லை. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மிகச்சாதாரணமாகத் தொடங்கி மிக உயர்ந்த இடத்தைத் தொட்டு விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?

தோல்வி மனப்பான்மை உள்ள பலர் 'அதிர்ஷ்டம்' என்று பதில் சொல்லலாம். சிலர், கடும் உழைப்பு என்று சொல்லலாம், சிலர் அவர்களது அறிவாற்றல் காரணம் என்று நினைக்கலாம். ஆனால், பிரபல ஆங்கில எழுத்தாளர் மால்கம் க்ளாட்வெல் (Malcolm Gladwell) பார்வையில் வெற்றிக்கான பாதை வேறு. வெற்றியாளர்களின் தனித்துவம் என்ன, குணாதிசயங்கள் என்னென்ன என்பது குறித்தே இதுவரை பல புத்தகங்கள் வந்திருக்க, வெற்றியாளர்களின் பின்புலம், அவர்களது கலாசாரம், சூழ்நிலை, பிறந்த வருடம்/மாதம் இவையும் வெற்றிக்கான காரணிகள் என்று தமது அவுட்லையர்ஸ் (Outliers) எனும் நூலில் அருமையாக விளக்குகிறார் திரு. க்ளாட்வெல்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் திரு.பில்கேட்ஸ், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் தலைவர் பில் ஜாய், பிரபல இசைக்குழுவான பீட்டில்ஸ் போன்றவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன? இவர்கள் அனைவரும் தமது துறையில் தலைசிறந்தவர்கள், புகழ் வாய்ந்தவர்கள். சரி! இந்த நிலையை இவர்கள் அடைந்ததற்கான காரணத்தில் ஒற்றுமை உள்ளதா? கண்டிப்பாக உள்ளது என்கிறார் திரு மால்கம் க்ளாட்வெல். அந்தக் காரணிதான் 10000 மணி நேரக் கோட்பாடு.

அது என்ன 10000 மணி நேரக் கோட்பாடு?

ஒருவர், முழு ஈடுபாட்டுடன் பத்தாயிரம் மணி நேரத்தை ஒரு குறிப்பிட்ட இலக்கில், குறிப்பிட்ட துறையில் செலவிட்டால், அதில் அவர்கள் சிறப்பானவர்களாக ஆவார்கள் என்பதுதான் இந்த விதி.

இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் அவர், மேற்குறிப்பிட்ட பில் ஜாய், பீட்டில்ஸ் குழுவினர் மற்றும் பில் கேட்ஸ் ஆகியவர்களைக் குறிப்பிடுகிறார்.

பத்தாயிரம் மணி நேரம் என்பது என்ன கணக்கு? ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணி நேரம் வீதம், பத்து வருடங்களுக்குக் கணக்கிட்டால் அது ஏறத்தாழ 10000 மணி நேரம். (அதாவது 3 X 365 X 10 = 10950).

(என்ன இது! நான் இந்தப் பணியில் முப்பது வருடமாக இருக்கிறேன்! ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் பணி செய்கிறேன், நான் ஒன்றும் முன்னேறவில்லையே என்று சிலர் முணுமுணுக்கலாம். நீங்கள் முப்பதாயிரம் மணி நேரம் என்ன, உங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிட்டாலும், உங்களுக்கே நீங்கள் செய்யும் பணியில் ஈடுபாடு இன்றி கடனே என்று வேலை செய்தால் எந்தக் காலத்திலும் நிபுணர் ஆக இயலாது.)

உங்களுக்கு ஒரு பணியில் ஆர்வமும் வேண்டும், அதில் முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் வேண்டும். இத்துடன் வேண்டியது நிரம்பப் பயிற்சி- அதைத்தான் சொல்கிறது 10000 மணி நேரக் கோட்பாடு.

கணிணி உலகில் இன்று வெற்றிக்கொடியை நாட்டியிருப்பவர்களாகிய பில் கேட்ஸ், பால் ஆலன், ஸ்டீவ் ஜாப்ஸ், வில்லியம் நெல்சன் ஜாய் (பில் ஜாய்)எல்லோரும் கிட்டத்தட்ட 1950களில் பிறந்தவர்கள். அவர்களது இளம் பருவத்தில்தான் கணிணி என்று ஒன்று பள்ளி/கல்லூரிகளில் பாடமானது. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கணிணி ஆய்வுக்கூடங்களைத் தொடங்கியிருந்தன. பில் ஜாய் பயின்ற மிச்சிகன் பல்கலைக்கழகம் 1970களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் கணிணி நிரல்களைச் செய்யக்கூடிய அளவு கணிணிக் கட்டமைப்புப் பெற்றிருந்தது. தனது ஆர்வம் காரணமாக வகுப்பு நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் கணிணியிலேலே செலவிட்ட பில் ஜாய், பலவிதமான மென்பொருள் நிரல்களைச் செய்துகொண்டிருந்தார். கணிணித்துறைப் பேராசிரியர் ஒருவருக்கு உதவியாளராகப் பின் பணியிலும் சேர்ந்த அவர், ஒரு நாளைக்கு கிட்டைத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் மேலாகக் கணிணிக்குள்ளேயே புதைந்திருந்தார் எனலாம். பலன்? உலகின் மிகச்சிறந்த மென்பொருள் உருவாக்கங்கள் பலவற்றை எழுதிய பெருமை அவரைச் சேரும். இணைத்தளத்தைப் பயன்படுத்த உதவும் பலவேறு நிரல்களை உருவாக்கியதால், 'Edison of the internet' என்ற பட்டப்பெயரும் அவருக்கு உண்டு. அவர் இளமையில் கணிணியில் செலவிட்ட நேரம்...... அவரே சொல்லுகிறார்...'கிட்டத்தட்ட 10000 மணி நேரம்'.

பீட்டில்ஸ் குழு, துவக்கத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 1960களில் பள்ளிகளில் வாசிக்கும் ராக் பாண்ட் (Rock Band) இசைக்குழுவாக இருந்த அவர்களுக்கு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் என்ற ஊரில் (இரவு விடுதிகள் அதிகமுள்ள ஊராம் அது) இவர்களுக்கு இசைக்க வாய்ப்புக் கிடைத்தது. பல வேறு முகவர்கள் மூலமாகவும் இவர்கள் அடிக்கடி ஹாம்பர்க் செல்லத் தொடங்கினர். வாரத்தில் ஏழு நாட்களும் இரவு முழுவதும் இசைக்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து ஒரே ஊரில் அதுவும் இரவு முழுவதும் இசைப்பது என்றால் சும்மாவா? மக்களுக்கு சலித்து விடக்கூடாதே என்று எண்ணத்தில் புதிய புதிய பாடல்கள், பண்ணமைப்பு என்று இக்குழுவினர் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தனர். 1960ல் ஹாம்பர்க் சென்ற பொழுது 102 இரவுகளும் இரண்டாம் முறை 1962ல் சென்றபொழுது 92 இரவுகளும் இவர்கள் நிகழ்ச்சி நடந்தது. 1964 வரையுள்ள காலத்தில் இவர்கள் 1200 நிகழ்ச்சிகளை நடத்திவிட்டிருந்தனர். ஒரு நிகழ்ச்சி சராசரியாக எட்டு மணி நேரம் என்றால் மொத்தம் எத்தனை மணி நேரம் இவர்கள் இசையில் செலவிட்டிருக்கின்றனர். மீண்டும் அந்த மந்திரச் சொல்தான்.....கிட்டத்தட்ட 10000 மணி நேரம்.

இந்த விதி பில் கேட்ஸ் அவர்களுக்கும் பொருந்துகிறது. பால் ஆலனும் அவருமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களில் கணிணியில் செலவிட்டிருக்கிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த கணிணி ஒன்று விடிகாலை மூன்று மணியில் இருந்து காலை ஆறு மணிவரை, பணி எதுவும் இல்லாமல் இருப்பதை அறிந்துகொண்ட பில் கேட்ஸ், பல்கலைக்கழகத்தில் அனுமதியுடன் இரவு நேரத்தில் அங்கு சென்று பயன்படுத்திக்கொண்டே இருப்பாராம்.அவர் படித்த பள்ளியில் 1968ல் இருந்தே கணிணிப் பயன்பாடு இருந்திருக்கிறது. பின் ஹார்வர்ட் பல்கலைக்கழகப்படிப்பினைப் பாதியில் விட்ட அவர் கிட்டத்தட்ட ஏழுவருடங்கள் தான் தொடங்கிய சிறிய கணிணி நிறுவனத்தில் பல மணி நேரம் பணி புரிந்துகொண்டே இருந்திருக்கிறார். இன்று உலகின் மிகப்பெரிய கணிணி நிறுவனமான மைக்ரோசாஃப்டின் தலைவராவும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் திகழும் இவர், இத்துறையில் இளமையில் செலவிட்ட காலம்.........ஆம். மீண்டும் அதேதான்... கிட்டத்தட்ட 10000 மணி நேரம்.

ஏன்! நமது நாட்டின் மிகச்சிறந்த இசை மேதை எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி, இந்தித்திரைப்படப் பாடல்கள் பலவற்றின் குரலான லதா மங்கேஷ்கர், சதுரங்கத்தில் உலகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.... எந்தத் துறையைச் சேர்ந்த வெற்றியாளர்களை வேண்டுமானாலும் ஆராய்ந்து பாருங்கள். அவர்கள் தமது துறையில் ஜொலிக்குமுன் குறைந்தது 10000 மணி நேரங்கள் பயிற்சி செய்திருப்பார்கள்!

நீங்களும் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமா, உங்களுக்கு ஆர்வம் எத்துறையில் உள்ளதோ அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி தினமும் குறைந்தது மூன்று முதல் ஐந்து மணி நேரம் விடாமுயற்சி செய்யுங்கள். வானமும் வசமாகும்!!
!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்