சம்பாதிக்க நினைத்தால், வழியா இல்லை பூமியில்...


பொழுதுபோக்கைப் பணமாக்கலாம்!!!


 Man_sharing_computer'நீங்கள் நேசிக்கும் ஒரு செயலே உங்களது தொழிலாக அமையுமானால் நீங்கள் கொடுத்துவைத்தவர்' என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. உங்கள் பொழுதுபோக்குகளே (Hobbies) உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தருமானால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் உண்டா? உங்கள் பொழுதுபோக்குகள் உங்களுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் சம்பாதித்துத் தர முடியும் என்று பார்க்கலாமா?

நாம் அனைவருமே, நமது பொழுதுபோக்குகளை நேசிக்கிறோம். அவற்றில் ஈடுபடுகையில் மனம் மகிழ்கிறோம். நமது நேரம், பொருள் இவற்றைச் செலவு செய்ய நேர்ந்தாலும் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை. நம் பொழுதுபோக்குகள் நமது தனித்தன்மைமையை, நமது ஆக்கத்திறனை வெளிப்படுத்துகின்றன. எனவே, அவற்றில் ஈடுபடுகையில், நம் மனம் எதையோ சாதித்த திருப்தி அடைகிறது. உலகில் வெற்றியாளர்களாக, மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கும் பலர், இந்த இரகசியத்தை அறிந்தவர்களே!

எனவேதான், நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கையில், முதலில், உங்களுக்கு ஈடுபாடுள்ள துறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இணையத்தில் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கும் இதே அறிவுரைதான். இதற்கு முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருந்தபடி, நீங்கள் இணைத்தளம்/வலைப்பூ உருவாக்கி சம்பாதிக்கவேண்டுமென நினைத்தாலும், உங்கள் பொழுதுபோக்கு தொடர்பானதாக இருப்பின் பணத்திற்குப் பணமும் ஆயிற்று, உங்கள் மனத்திற்குப் பிடித்ததாகவும் இருக்கும்பொழுது ஆனந்தமும் பெருகும்.

பணம் சம்பாதிக்க உதவும் சில பொழுதுபோக்குகள்:

அஞ்சல்தலை சேகரிப்பு (Stamp Collection):

இணையம் மூலமாக அரிதான அஞ்சல்தலைகளை வாங்குவது, விற்பது போன்ற செயல்களுக்கான இடைத்தரகு வேலைகளை மேற்கொள்ளலாம். இதற்கான ஈவுத்தொகை (Commission) உங்களுக்குக் கிடைக்கும். உங்களிடம் உள்ள அஞ்சல்தலைகளை 'eBay' போன்ற தளங்களில் சென்று ஏலம் விட்டு சம்பாதிக்கலாம். அஞ்சல்தலை சேகரிப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள் விவாதம் செய்வதற்கான ஒரு இணைத்தளம் (Forum ) உருவாக்கலாம். இதற்கு சந்தாத்தொகை நிர்ணயிப்பதன் மூலமோ, இதில் விளம்பரங்கள் வெளியிடுவதன் மூலமோ பணம் சம்பாதிக்க இயலும்.

விளையாட்டுக்கள்:

நீங்கள் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் மிகுந்த ஈடுபாடுள்ளவரா? உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து ஒரு இணைத்தளத்தை உருவாக்கலாம். உலகில் எங்கெங்கெல்லாம் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதையெல்லாம் சேகரித்து வெளியிடலாம். உங்களுக்கு இந்த விளையாட்டுகளில் தேர்ச்சி இருப்பின், 'ஆன்லைன் கோச்சிங்' செய்யும் வாய்ப்பும் உண்டு. இது தொடர்பான விளம்பரங்களை உங்கள் இணைத்தளத்தில் வெளியிடுவதன்மூலமும் பணம் சம்பாதிக்கலாம்.

எழுதுவதில் ஆர்வமுடையவரா?

கதைகள் கட்டுரைகள் முதலியன எழுதுவதில் உங்களுக்கு விருப்பமுண்டா? 'Article Writing', 'Article Rewriting' அதாவது கட்டுரைகள் புதிதாக எழுதுவது அல்லது ஏற்கனவே உள்ளவற்றைக் கொஞ்சம் மாற்றி எழுதுவது - இத்திறமை மட்டும் இருந்தால் இணையத்தில் வேலை வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வளவு ஏன்! நம் ஈழநேசன் தளமே உங்களை எழுதச்சொல்லி ஊக்குவித்துக்கொண்டிருக்கிறதே!

அதுமட்டுமல்ல, கதைகள் மற்றும் நீண்ட கட்டுரைகள், தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்கள் இவற்றை எழுதுவீர்களானால் இணையத்தில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்யலாம். 'e-book' எழுதுதல் மற்றும் விற்பனை மட்டுமின்றி இவற்றுக்கான விமரிசனங்கள் எழுதுவதன் மூலம் கூட சில இணைத்தளங்களில் வருமானம் கிட்ட வழியிருக்கிறது. மற்றவர்களின் இணைத்தளங்களில் அவ்வப்பொழுது, நீங்கள் தேர்ச்சி பெற்ற துறைகளில் Guest Writer (அதாவது அவ்வப்பொழுது ஒரு சில கட்டுரைகள் எழுதுதல்), Product Review எனப்படும் இணைத்தளத்தில் விற்பனையாகும் தயாரிப்புகளை திறனாய்வு செய்து மதிப்புரை எழுதுதல் மூலமாகவும் சம்பாதிக்க வழியுண்டு.

இவை மட்டும்தான் என்றில்லை. உங்களுக்கு பூவேலை செய்யத்தெரியுமா, உள்ளூரில் அலைந்து திரிந்து விற்பனை செய்யவும், விளம்பரம் செய்யவும் முடியவில்லையா? உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாக்கி அதன் மூலம்கூட விற்பனை செய்யலாம். இல்லையெனில், இதற்கென இருக்கும் இணைத்தளங்களைப் பார்வையிட்டுக் கூட வாடிக்கையாளர்களைத் தேடலாம்.

சுற்றுலாப் பிரியரா நீங்கள்?

உங்கள் நாட்டை, குறைந்த பட்சம் உங்கள் ஊரைச் சுற்றிப்பார்த்திருக்கிறீர்களா? (பார்க்க விரும்புகிறீர்களா?) உங்கள் அனுபவங்களைக் கொண்டு, நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களைக் கொண்டு ஒரு தகவல் இணைத்தளத்தை உருவாக்குங்கள். அது மட்டுமல்ல, உங்கள் ஊரிலேயே மிக முக்கியமான இடங்கள் என்னென்ன, உங்கள் ஊரின் வரலாறு என்ன, தங்கும் வசதி எப்படி, போக்குவரத்து விவரங்கள் முதலிய தகவல்கள் தரும் தளத்தை உருவாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் அவற்றை விரிவுபடுத்துங்கள். சுற்றுலா வழிகாட்டியாக நீங்கள் பணியாற்ற விரும்பினாலும் இதன் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறலாம்.

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்றொரு திரைப்படப்பாடல் உண்டு. இணைத்தளத்திலும் அப்படித்தான். சம்பாதிக்க நினைத்தால் ஏராளமான வழிகள் புலப்படும். முயலுங்கள், வெல்லுங்கள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்