திருக்குறளில் அடங்கியுள்ள அரிய கருத்துக்கள்...

திருக்குறளில் முகாமைத்துவம்


PDF

முகாமைத்துவம் (Management), என்ற படிப்பு இன்றைய தலைமுறையினரிடம் பிரபலமானது. MBA பட்டம் பெற்றவர்களைச் சமூகம் மிகுந்த மரியாதையுடன் நோக்குகிறது. இது ஏதோ, 20ம் நூற்றாண்டில், மேனாட்டரிஞர்கள் கண்டறிந்த கல்வி முறை என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவன்று. திருக்குறளிலும், இன்னும் பல சங்க இலக்கியங்களிலும், கம்ப ராமாயணத்திலும் ஏராளமான முகாமைத்துவம் குறித்த தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இக்கட்டுரையில், இன்றைய முகாமைத்துவம் குறித்த கருத்துகள் திருவள்ளுவரால் எவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன என்று கண்டு இன்புறுவோம்.

முகாமைத்துவத்துவத்தின் கூறுகள் யாவை?

பொதுவாக ஐந்து பணிகளை முகாமைத்துவத்துவத்தின் முக்கியக்கூறுகள் (Important functions) என்பர். அவையாவன.


1. திட்டமிடுதல் (Planning)
என்ன பணியை, எப்பொழுது, யார், எங்கு , எதற்காகச் செய்ய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து, முடிவு செய்தல் மேலாளரின் கடமைகளின் முதன்மையானது.

2. ஒழுங்குபடுத்துதல் (Organising)
திட்டமிட்ட பணிகள் சரிவர நடக்கத்தேவையான வழிகளையும், அதற்குத் தேவையான ஆதாரங்கள் / சாதனங்களை(resources) ஆய்ந்து, பணியைச் செவ்வனே தொடங்க வகை செய்தல்.

3. பணியாளர்களை நியமித்தல் (Staffing)
திட்டமிட்ட பணிகள் நன்கு நடைபெறத் தேவையான அளவு திறனுள்ள பணியாளர்களிடம், செயல்களை ஒப்புவித்தல்

4. ஒருங்கிணைத்தல் (Co-ordinating)
ஒரு நிறுவனம், ஒரு பெரிய குறிக்கோளை (Objective) நோக்கி, முன்னேற முயலும்பொழுது, பணிபுரியும் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அதே வேளை, பலர் வேலை செய்யும் பெரிய ஒரு நிறுவனத்தில் முரண்பாடுகள் நேருவதும் இயல்பானதுதான். பல்வேறு பணியாளர்களையும், அவர்கள் பணிபுரிவதற்குத் தேவையான கருவிகள்/வளங்கள் முதலியவற்றை ஒருங்கிணைப்பது ஒரு மேலாளரின் தலையாய கடமையாகும்

5. கட்டுப்படுத்துதல் (Controlling)
தம் கீழ் பணி புரிபவர்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு, அவர்கள் தம் பணியைச் சரிவரச் செய்யாத பொழுதோ, அவர்களின் பணி நடவடிக்கை நிறுவனத்தின் குறிக்கோளில் இருந்து விலகிச்செல்லும்பொழுதோ, தவறான நோக்கங்களுடன், ஏமாற்ற/மோசடி செய்ய முயலும்பொழுதோ கண்டிப்பாக நடந்து கொள்வதும், அத்தகைய நிகழ்வுகள் நடவாவண்ணம் கண்காணிப்பதும் இன்றியமையாதது.

இத்தகைய கருத்துக்கள் எல்லாம் திருக்குறளில் எவ்வளவு பாங்காக விரவி நிற்கின்றன் என்பதைக் கீழே காணலாம்.

திட்டமிடுதல் என்பது எந்தச் செயலை, எங்கு, எப்பொழுது, யாரைக்கொண்டு , எப்படிச் செய்வது என்னும் கேள்விகளுக்கு விடை கூறுவதே ஆகும்.

இதையே வள்ளுவர்,
"பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்."

( ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன், அச்செயலுக்குத் தேவையான பொருள் (பணம்), தேவைப்படும் சாதனங்கள், செய்ய உகந்த சமயம் (அல்லது, செயலைச் செய்யத் தேவைப்படும் நேரம்) செயலைச் செய்வதற்கான வழிமுறைகள், செயலைச் செய்வதற்கான சரியான இடம் ஆகியவற்றை, தீர ஆய்ந்து செயலைத் தொடங்க வேண்டும் - வினை செயல்வகை - குறள் எண் 675) என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல,
"முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்"
- எனவும்
(ஒரு செயலின் முடிவினையும், அச்செயலைச் செய்யும்பொழுது ஏற்படக்கூடிய தடங்கல்களையும், அச்செயலை முடிப்பதனால் ஏற்படும் பயன்களையும் நன்கு அலசிப் பார்த்து அச்செயலினைச் செய்யவேண்டும்- வினை செயல்வகை - குறள் எண் 676)
திட்டமிடுதல் குறித்து அழகுற விளக்குகிறார்.

தற்காலத்தில் ஒரு செயலைத் தொடங்குமுன் நிபுணர்களின் கருத்தை அறிய முற்படுகிறோமல்லவா? அதைப்பற்றியும் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?

"செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்"

அதாவது ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன், முன்பே அச்செயலைச் செய்த அனுபவம் உள்ளவன் அல்லது அக்செயலைப் பற்றி நன்கு அறிந்தவனுடைய கருத்தினை முதலில் அறிந்துகொண்டு செயலைத் தொடங்குதல் வேண்டும் - வினை செயல்வகை - குறள் எண் 677.

இத்துடன் நிறுத்தவில்லை திருவள்ளுவர். இடனறிதல், வலியறிதல், காலமறிதல், தெரிந்து வினையாடல் என்று ஏகப்பட்ட அதிகாரங்களில், செயல்களைச் செய்யும் வகைகளைக்குறித்துத் தெளிவுற விளக்கியுள்ளார். இன்றைய 'மானேஜ்மெண்ட் குரு' வாக விளங்கும் பலர் பற்பல நூல்களில் எழுதியுள்ள கருத்துக்களை இரண்டே வரிகளில் அடக்கிய விந்தையை என்னென்பது?

'Staffing' அதாவது பணியாளர்களை நியமித்தல் "Human Resource Management' எனப்படும் 'மனித வள முகாமைத்துவம்' குறித்தும் பல குறள்கள் உள்ளன.ஒருவருடைய தகுதியும் திறமையுமறிந்து அவர்களுக்கு ஏற்ற பணியைத் தருவது HRD யின் ஒரு முக்கியக் கடமையாகும்.
அதனையே வள்ளுவர்
" அறந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று."


(செய்யும் முறையறிந்து, செயலாற்ற வல்லவனிடமே ஒரு செயலை ஒப்படைக்க வேண்டுமேயன்றி, வேண்டியவனென்பதால் ஒருவனிடம் பணியை ஒப்படைக்கக் கூடாது - தெரிந்து வினையாடல் - குறள் எண் -515)

" வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்"

(ஒருவன் ஒரு செயலுக்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்து பிறகே அவனை அப்பணியில் அமர்த்த வேண்டும் - தெரிந்து வினையாடல் - குறள் எண் -518)

என்றெல்லாம் வலியுறுத்துகிறார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணிப்பதும் முக்கியம், தவறு செய்தபொழுது கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட மிகவும் அவசியம் என்பதையும், கீழ்க்கண்ட குறள்கள் மூலம் விளக்குகிறார்.

" நாடொறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கொடாமை கோடா துலகு."

( செயலாற்றுபவன் நேர்மை தவறாமல் இருந்தால் உலகம் தன் நிலையில் மாற்றமடையாது. எனவே,** மன்னன் அவனைக் கண்காணித்தல் வேண்டும்.- தெரிந்து வினையாடல் - குறள் எண் -520)

" தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து"


(ஒருவன் குற்றம் செய்தால், அக்குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, மீண்டும் அக்குற்றத்தைப் புரியாதவாறு தண்டனை தருதல், **அரசன் கடமை வெருவந்த செய்யாமை - குறள் எண் - 561)
**வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், பணி என்பது, அரசனிடம் பணிபுரிவதே என்பதால் அநேகமாக முகாமைத்துவம் குறித்த குறள்கள் மன்னனையே சுட்டுகின்றன. ஆனால்,இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குத் தக்கவாறு தலைமை அதிகாரிகளென்று பொருள் கொள்வோமாக.


திருக்குறளில் மனித வள முகாமைத்துவம்


சென்ற கட்டுரையில் முகாமைத்துவம் குறித்து, குறள் காட்டிய கருத்துக்களைக் கண்டோம். இந்தக் கட்டுரை, முகாமைத்துவத்துவத்தின் ஒரு கூறான மனித வள முகாமைத்துவம் ( Human Resource Management) குறளில் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது என்பதைக் காணப் போகிறோம்.

ரு நிறுவனத்திற்கு மிக முக்கியமான தேவை மனிதவளம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இன்றைய கூட்டுறவு (corporate) உலகம், மனித வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதே வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து, அத்துறைக்கு அதிக பட்ச முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். வள்ளுவர் கூறும் பல கருத்துக்கள் இன்றைய மனிதவள முகாமையாளர்களின் சித்தாந்தத்துடன் ஒத்து விளங்குகிறது. இதன் மூலம் அன்றைய தமிழகத்தில் நிர்வாகம் எவ்வளவு சிறப்பான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதையும், இன்றும் பொருந்தும் வகையில், வள்ளுவரின் வாய்மொழி எத்தனை அருமையான,சிறந்த கருத்துக்களை எடுத்துவிளக்கும் மேன்மையையும் நாம் உணர முடிகிறது.

மனித வள முகாமைத்துவத்துவத்தின் நான்கு தூண்களாக, பணிக்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சியளித்தல், தலைமைப்பண்பும் ஊக்குவித்தலும் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் கூறலாம். பணிக்குத் தகுதியான ஆட்களைத் தேர்ந்து எடுப்பது, முகாமையாளர்களின் மிகவும் இன்றியமையாத கடமை. சரியான ஊழியர் இல்லாத நிறுவனம் மற்ற எல்லா வளத்திலும் மேம்பட்டிருந்தாலும், வளர்ச்சியடைய இயலாது. அதே சமயம், ஒரு நிறுவனம், சிறந்த ஊழியர்கள் உடையதாக இருந்தால், மற்ற எல்லாத் தடைகளையும் எளிதில் தாண்டி வந்து வெற்றியடையும். எனவே, ஒரு பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்து நியமிப்பது ஒரு நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் கையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் செயல்பாடு எத்தனை திறமையுடையது என்பதைக் கொண்டே அந்நிறுவனத்தைக் குறித்து அறிந்துவிடலாம் (Evaluating the performance of personnel function - Nich Cowan)

எப்படி ஊழியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்? எத்தகைய பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்? எப்படிச் செய்யக்கூடாது? என்பதை வள்ளுவர் பல குறள்களில் சொல்லியிருக்கிறார். அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

ஒரு செயலைச் செய்யக்கூடியவரா இல்லையா என்பதை அவரின் தோற்றத்தினைக் கொண்டு முடிவு செய்யலாகாது. 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்று பழமொழியே இருக்கிறதல்லவா? எத்தகைய நிறுவனமாக இருப்பினும், பணியாளர்களுக்கு அடிப்படையான தகுதியாகக் கருதுவது நேர்மையையே ஆகும். பிறரிடம் அன்புடன் பழகுபவனாகவும், அறிவுடையவனாகவும், அச்சமின்மை, ஆசையின்மை ஆகிய தன்மையுடையவனாகவும் இருப்பவனையே தேர்ந்து எடுக்கவேண்டும். ஏனெனில் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவனிடம் நேர்மை குடியிருக்கும் என நம்பலாம்.

தேர்வின் பொழுது, அவர்களின் தகுதி, தன்மை, தரம் முதலானவற்றை சரிவரக் கணித்தல் அவசியம். குறையே இல்லாதவர் என்று யாரும் இல்லை. எத்தகைய குணம் அதிகமாக உள்ளது என்று ஆராய்ந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.தவறான ஆட்களைத் தேர்வு செய்துவிட்டால், அதனால் ஏற்படும் அழிவு, அளவிட முடியாததாகும். மேலும், தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டுதல் நிறுவனத்தின் தோல்விக்கே வழி வகுக்கும்.

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து."

(அதாவது, ஒருவர் தோற்றத்தைப் பார்த்து, அவரைச் சாதாரணமாக நினைத்து விடவோ, திறமையை மதிப்பிடவோ கூடாது. மிகப்பெரிய சக்கரங்களை உடைய தேரின் அச்சாணி சிறியதாக இருக்கலாம். ஆனால், அது இன்றேல், தேர், சரிந்து விடும் - வினைத்திட்பம் - குறள் 667)

" அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு."

(பிறரிடம் அன்பும், அறிவும், சரியான பணியைச் செய்யும் பொழுது தடை வரினும் அஞ்சாது தொடரும் ஆற்றலும், பிறர் பொருள் விழையாத நேர்மையும்
உடையவனா என்பதைத் தெளிவாக ஆராய்ந்து ஒருவனைத் தேர்வு செய்ய வேண்டும் - தெரிந்து வினையாடல்- குறள் - 513)

"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்".


(ஒருவரிடம் உள்ள நற்பண்பு, தவறான குணம் இரண்டையும் கண்டறிந்து, அவற்றுள் எது அதிகம் என்பதைக் கொண்டு ஒருவரைத் தள்ளவோ கொள்ளவோ வேண்டும் - தெரிந்து தெளிதல் - குறள் 504)

"தேரான் பிறரைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்."

(பிறரை சரியாக ஆராயாமல் நம்புதல், தாங்க இயலாத துன்பத்தைத் தந்துவிடும் - தெரிந்து தெளிதல் - குறள் -508)

" அறந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாலன்று."

( செய்யும் முறையறிந்து செய்யவல்லவனையே ஒரு பணியில் ஏவ வேண்டும். அப்படியில்லாமல், தனக்கு வேண்டியவன் என்பதால் ஒருவனிடம் செயலை ஒப்படைத்தல் நல்லதல்ல.- தெரிந்து வினையாடல்- குறள் - 515)

சரியான நபரைத் தேர்வு செய்தால் மட்டும் போதாது. அவர் தன்மையை அறிந்து அவருக்கேற்ற பணியைத் தருவதும் அவசியம். தகவல் தொடர்பில் சிறந்தவரிடம், விற்பனைத்துறையையும், கணக்கில் தேர்ச்சியுடையவரிடம், அலுவலகக்கணக்கு வழக்கு நிர்வாகத்தையும் கொடுக்காமல், மாற்றிக் கொடுத்தால் என்ன பயன்? எனவேதான் குறள் இப்படிச்சொல்கிறது.
" இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண் விடல்."

(இத்தகைய தன்மையுடைய செயலை, இந்தக் காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டபின், அப்பணியில் அவனை ஏவுதல் வேண்டும் - தெரிந்து வினையாடல்- குறள் - 517)

ஒரு அலுவலகத்தில் பணி புரிபவர்கள், அப்பணி தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான செயலைச் சரியான நேரத்தில் செய்வது மிகவும் முக்கியமல்லவா? அப்பணி குறித்த அறிவு இல்லையெனில், (எப்போது எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு) தாமதம் ஏற்படும். தாமதம் வெற்றிக்குத் தடையல்லவா?
"செய்வானை நாடி வினை நாடிக் காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்".

(செயல் புரிபவன் செயலின் தன்மை, செய்யத் தகுந்த காலம் இவற்றை அறிந்து செயலைத் தொடங்கவேண்டும் (அதாவது அச்செயல் குறித்த தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் ) --தெரிந்து வினையாடல்- குறள் - 516)

ஊக்குவித்தலும் சிறந்த தலைமையும் மனித வள மேம்பாட்டின் முக்கியமான அம்சங்கள். தவறான செய்கைகளுக்காகத் தண்டித்தல், சிறப்பான பணிக்குப் பரிசளித்தல் இந்த இரண்டு முறைகளிலும் பணியாளர்களை ஊக்குவிக்க வல்லன. தண்டனை என்பது, திருத்துவதற்கே.தண்டனை மிகக் கடுமையாக இருப்பின் பணியாட்கள் நிலைக்க மாட்டார்கள். எனவேதான்,
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டுபவர்".

(வெற்றியையும் செல்வத்தையும் வேண்டும் தலைவன் அதிகம் தண்டிப்பது போலக் காட்டி, அளவுடன் தண்டிக்க வேண்டும் - வெருவந்த செய்யாமை - குறள் 562)
என்று கூறுகிறார் வள்ளுவர். மேலும்
" சிறப்பரிய ஒற்றின் கண் செய்க"
(அதாவது, உயிரைப் பணயம் வைத்து ஒற்றறிந்து வருபவர்களுக்கு, தகுந்த முறையில் பரிசளிக்க வேண்டும் - ஒற்றாடல் - குறள்-590) என்றும் பரிசளித்தல் குறித்துச் சொல்கிறார்.


திருக்குறள் காட்டும் வாழ்வுநெறி


நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கிற பொழுது ஒரே மாதிரிதான் பிறக்கிறோம். ஆனால் இறக்கையில் நாம் அனைவரும் ஒரே போல் இருப்பதில்லை. நம்மில் சிலர் வெற்றியின் உச்சாணிக்கொம்பில் நிற்கின்றனர். சிலரோ, பிறந்தோம், வாழ்ந்தோம் மறைந்தோம் என்ற ரீதியில் வாழ்பவர்கள். இன்னும் சிலர், எத்தனை உயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அதல பாதாளத்தில் வீழ்ந்துவிடுகின்றனர். இவை எல்லாம் ஏன்? கிடைத்தற்கரிய இம்மனித வாழ்வை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அடங்கி இருக்கிறது. வெற்றி என்பது வெறும் பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமில்லை. நாம் எவ்வளவு மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறோம் என்பதையும், எவ்வளவு நிம்மதியாக நம்மால் வாழ்க்கை நடத்த முடிகிறது என்பதையும், நாம் இறந்த பிறகும் நம்மைப் பிறர் புகழும்படி நற்செயல்கள் புரிந்துள்ளோமா என்பதையும் பொறுத்து உள்ளது.


guideஎப்படி வாழவேண்டும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்ற வாழ்க்கை நெறிகளை, எளிமையாகவும் வலிமையாகவும் காட்டும் அற நூல்களில் முதலிடம் பெறக்கூடியது தமிழ்மறையாம் திருக்குறள். வாழ்வில் வெற்றி காணவும், நன்முறையில் பிறர் போற்றவும் வழிகாட்டும் இந்த அறநூலில் இல்லாதது எதுவுமே இல்லை. நேர்வழியில் நாம் வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் கூறும் நெறிகள் என்னென்ன எனக் கொஞ்சம் பார்க்கலாம்.

நம்மில் பலரும் பொதுவாக அலுத்துக்கொள்ளும் விஷயம் நாம் நினைக்கும் செயலைச் செய்து முடிக்க நேரமில்லை என்பது. எனக்கு மட்டும் நேரமிருந்தால் அதைப் பண்ணுவேன், இதைப்பண்ணுவேன் என வாய்ச்சொல் வீரம் காட்டும் நம்மை, சாதிக்க விடாமல் தடுப்பது எது? நேரமின்மையின் மேல் தூக்கி எல்லாப் பழியையும் நாம் போட்டு விடுகிறோம். ஆனால் உண்மையில் பார்த்தால், கிடைக்கும் 24 மணி நேரத்தை நாம் சரிவரப் பயன்படுத்துவதே இல்லை என்பதே உண்மை. நேரத்தை நாம் பல வழிகளில் வீணாக்கிவிட்டு, தேவையான செயலைச் செய்ய முடியாமல் திணறுகிறோம். பொதுவாக நேரம் எந்தெந்த வகைகளில் வீணடிக்கப் படுகிறது தெரியுமா?

1. எச்செயலையும் உடனே தொடங்காமல் பல்வேறு காரணங்களுக்காகத் தள்ளிப் போடுவது (Procastination)
2. கவனமின்மையால், செய்ய வேண்டிய செயல்களையோ, பொருட்களை வைத்த இடத்தையோ மறந்துவிட்டுத் தேடுவது. இதில் வீணாகும் நேரத்திற்குக் கணக்கேயில்லை.(Forgetting)
3. சோம்பல் (Laziness)
4. அளவுக்கு அதிகமான தூக்கம் (Over-Sleep)

இதைக் கடுமையாகச் சாடுகிறார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல, நேரத்தின் மகிமையையும், காலமறிந்து செய்யும் செயல்களின் பலனையும் பல்வேறு குறள்களின் மூலம் மனதில் நிற்கும்படி எடுத்துக் கூறுகிறார். பொச்சாவாமை என்ற அதிகாரத்தின் வாயிலாக, மறதியினால் ஏற்படும் துன்பங்களையும், மடியின்மை என்ற அதிகாரத்தில் உள்ள குறள்களின் வழி, சோம்பலின் கேடுகளையும் விளக்கியுள்ள இவர், இன்னும் பற்பல குறள்களின் வாயிலாக, அளவான தூக்கம், தள்ளிப்போடாமல் செயல்களைப் புரிதல் அனைத்தையும் வலியுறுத்துகிறார்.

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக்கலன்'.

என்ற குறள் முதலில் குறிப்பிட்ட நான்கு தீய வழக்கக்கங்களையும் கெட்டழிபவர் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறது திருக்குறள்.


'குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு'

(பொருள்: சோம்பலின் காரணமாக முயற்சியைக் கைவிட்டவர்களது (இவர்கள் இறந்தவர்க்கு ஒப்பாவர் என்பதால் மாண்ட என்ற கடுமையான சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ) குடியானது அழிவதோடு, குற்றங்களும் பெருகும் - மடி இன்மை- குறள் எண்- 604)


'மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.'

(அறிவினை இழந்து சோம்பலைக் கைக்கொண்டு வாழும் பேதைகள் பிறந்த குடியானது, அத்தகைய பேதைகள் இறப்பதற்குமுன்பே அழிந்துவிடும்.-
மடி இன்மை- குறள் எண்- 603)

மேற்கூறிய இரண்டு குறள்களிலுமே சோம்பலினால் ஏற்படும் தீமையினை அறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர். சோம்பலினை உடையவர்கள் முயற்சி ஏதும் மேற்கொள்ள மாட்டார்கள் ஆதலின் அவர்களை இறந்தவர்களுக்கு ஒப்பிடும் வள்ளுவர், முயற்சி இல்லாதவர்கள் பொருளைச் சம்பாதிக்கவும் இயலாது ஆதலின் குடும்பம் வறுமையுற்று அழியும் எனவும், வறுமையின் காரணமாக திருடுதல் முதலிய குற்றங்களைச் செய்யவும் தொடங்குவர் எனவும் குறிப்பால் உணர்த்துகிறார். சோம்பலுடையவர்கள் அறிவிலிகள் என்பதாலேயே மடிமடிக்கொண்டொழுகும் பேதை எனவும் இகழ்ந்துரைக்கிறார்.

அதேபோல் மறதியால் ஏற்படும் தீமைகளினை பொச்சாவாமை என்ற அதிகாரத்தில் வரும் குறள்கள் விளக்குகின்றன.
'பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு'
-என்றும்
(பொருள்: ஒருவருடைய அறிவை, நாள்தோறும் விடாமல் தொடரும் வறுமையானது அழித்துவிடுவதைப் போல, மறதியானது ஒருவருடைய புகழை அழிக்க வல்லது - பொச்சாவாமை - குறள் எண் - 532)
'அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.'
- என்றும்
(பொருள்: மனதில் உறுதியின்றி, எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குபவர்கள் எத்தனை வலிய அரண்களை உடையவராயிருந்தாலும் அதனால் பயனில்லை. அதுபோல மறதியுடையவர்க்கு எந்த நன்மையும் கிடையாது - குறள் எண் - 534) மறதியால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டுகிறார்.

மறதியும் கவனமின்மையும் பெரிய அழிவுகளைத் தரவல்லவை. செய்ய வேண்டிய செயல்களைச் சரியான சமயத்தில் செய்வதையும், பிறருக்குக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவதையும் கெடுத்துவிடக்கூடியது மறதி ஆதலின், புகழைக் கொல்லும் என்று கூறுகிறது திருக்குறள். மறதியுடையவர்கள் எந்த நன்மையையும் அடைய இயலாது என்றும் சுட்டுவதன்வாயிலாக மறதியின்மையின் அவசியத்தினை விளக்குகிறார்.

எத்தகைய செயலினையும் செய்யத் தொடங்குவதற்கோ, தொடங்கியபின் இடையிலோ கால தாமதம் செய்வது மிகுந்த தீமையை விளைவிக்கும் என்பதை விவரிக்க வருகையில்

'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.'

என்னும் குறளில் ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்தபின் அதைச் செயல்படுத்தக் காலம் தாழ்த்துவது தீமையை ஏற்படுத்தும் என்றும்

'தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.'

என்னும் குறளில் செயலில் ஈடுபடுகையில், செயலின் தன்மை உங்களைத் தாமதம் செய்ய அனுமதிக்குமானால் தாமதிக்கலாம். விரைந்து செய்யும் செயல்களை விரைந்து செய்து முடிக்கவேண்டும் என்றும் கூறுகிறார். இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால், தூங்கக் கூட அனுமதிக்காத செயலானால் தூக்கத்தையும் விலக்கவேண்டும் என்று கொள்ளலாம். மிக அவசரமாக செய்தி கொண்டு செல்லவேண்டிய ஒற்றனோ, போர்முனையில் காவல் செய்யும் வீரனோ, தூங்கிவிட்டால் என்ன செய்வது?

'போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்,

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழிழந்தான்'

என்று இதைத்தான் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனாரும் கூறுகிறார்.

எனவே, இந்நான்கு கெட்ட பழக்கங்களையும் விலக்கினால், 'முயற்சி திருவினைக்கும்' என்ற தெய்வப்புலவரின் வாக்கு மெய்யாகும் என்பதில் ஐயமேயில்லை.


தோல்வியைத் தவிர்க்க....


ஒருவரின் வெற்றிக்குத் தேவையான குணங்கள் என சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். அதே போல் ஒருவர் தோல்வியடைவதற்கும் அவருடைய சில குணங்களே காரணமாகின்றன. ஒருவருடைய அறிவுக்கூர்மையும், கடின உழைப்பும் மட்டும் அவரது வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. அவருடைய மற்ற குணநலன்களே பெரும்பாலும் வெற்றிக்கோ தோல்விக்கோ வித்திடுகின்றன. எப்படி வெற்றிக்கான குணங்களை வளர்த்துக்

கொள்வது முக்கியமோ, அதே போல் தோல்விக்கான குணங்களைக் கிள்ளியெறிவதும் முக்கியம். என்னென்ன குணங்கள் ஒருவருடைய தோல்விக்கு வித்திடுகின்றன என்று தெரிந்துகொள்வோமா?

avoid-failureஎவரையும் எளிதில் நம்பிவிடுதல் அல்லது பிறர் மீது நம்பிக்கையின்மை:
எந்த ஒரு தொழிலையும் ஒருவர் தான் மட்டுமே செய்ய இயலாது. இந்த உலகம் முழுமையும் எல்லாச் செயல்களுக்கும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை நாம் அறிவோம். அதனால்தான் மனிதனை ஒரு சமூக விலங்கு என்கிறோம். அப்படியிருக்க ஒருவர் மீதும் நம்பிக்கை வைக்காவிடில் காரியம் எப்படி நடக்கும்? அதே நேரம், எல்லோரையும் எல்லாவற்றையும் நம்பிவிடுவதும் பெரும் அபாயத்துக்கு இட்டுச்சென்றுவிடும்தானே? அதைத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.'

என்கிறார். (குறள் எண்-510-தெரிந்து செயல்வகை) அதாவது, ஒருவரை ஆராயாது நம்புதலும், அவ்வாறு ஆராய்ந்து நம்பியவனைப் பின் சந்தேகப்படுதலும் மிக்க துன்பத்தைத் தரும் என்பது இதன் பொருள். மேலும் அவர்
' தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.'

என்றும் சொல்கிறார். (குறள் எண்-509-தெரிந்து செயல்வகை) அதாவது அயலார் எவரையும் ஆராயாது நம்புதல் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து நம்பியபின் அப்பொருளை நம்ப வேண்டும். என் நண்பர் ஒருவர் சொல்வார் 'வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்புகையில் பூட்டை ஓரிருமுறை இழுத்துப்பார்த்தால் அது புத்திசாலித்தனம். இழுத்து இழுத்து சரிபார்த்தவாறே நின்றுகொண்டிருப்பது கிறுக்குத்தனம்' என்று. ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று சில நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்துகொண்டு அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எடுத்த எடுப்பிலேயே நம்பிவிடுவதும், எவ்வளவு பழகியவராயிருந்தாலும் சந்தேகப்படுவதும் வளர்ச்சியடைய உதவாது. வீழ்ச்சியடையவே காரணமாகிவிடும்.

பேராசை:
'பேராசை பெருநட்டம்' என்பது பழமொழி.

'அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை' என்கிறது திருக்குறள். முதலில் பேராசைப்பட்டு பிறருக்குத் துன்பம் விளைவித்து அல்லது பிறரை ஏமாற்றி சேர்த்த செல்வமானது, அப்படிச் செய்தவரை அழவைத்து, அதாவது துன்பமடையச் செய்து அவனை விட்டு நீங்கும் என்கிறது தெய்வப் புலவர் வாக்கு.

பொறாமை:

பிறரைக்கண்டு பொறாமைப்படுகின்றவர், தான் செய்யும் செயலில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். அவர்களது அறிவு, ஆற்றல் எல்லாமே பிறரைக் கெடுக்கவே பயன்படுத்தப்படுமே அன்றி தன்னுடைய முன்னேற்றத்திற்குச் செலவிடப்படமாட்டாது. அவர்களது தோல்வி பிறரால் ஏற்படக்கூடியத் தேவையில்லை. அவர்களே அவர்களது தோல்விக்குக் காரணமாகிவிடுவார்கள். வள்ளுவர் பொறாமைக்குணத்தின் தீமையை ஒரு அதிகாரம் முழுவதும் வலியுறுத்துகிறார்.
'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.'
(அழுக்காறாமை- குறள் எண்- 167) என்ற குறளில், பொறாமை உடையவனிடம் உள்ள திருமகள் அவனை விட்டு ஒதுீங்கி தனது தமக்கையை அவனுக்குக் காட்டிவிடுவாள் என்கிறார் திருவள்ளுவர். அதாவது, அவனது செல்வம் அவனை விட்டு நீங்கி வறுமை அவனை வந்து அடையும் என்பது அவர் குறிப்பு. அது மட்டுமல்ல
'அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.'

(அழுக்காறாமை- குறள் எண்- 168) பொறாமை என்ற பாவி யாரிடம் தங்குகிறானோ, அவனிடம் உள்ள செல்வத்தைக் கெடுத்து தீமையில் தள்ளிவிடுவான் என்று பொறாமையின் தீமையை வலியுறுத்திக்கூறுகிறார் அவர். பொறாமையின்மை என்ற ஒரு பண்பு ஒருவர் பெறக்கூடிய செல்வங்களில் சிறந்தது எனவும் கூறுகிறார் அவர்.
'விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.'

(அழுக்காறாமை- குறள் எண்- 168) என்ற குறள் இதை விளக்குகிறது.

பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல்:
பிறரை ஏமாற்றி வஞ்சித்துப் பெறும் வெற்றி எதுவாக இருப்பினும், அது நீண்ட நாள் நிலைக்காது. இதைத்தான் வள்ளுவர்
'களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.'
(குறள் எண் 284 - கள்ளாமை)
என்கிறார். பிறர் பொருளை வஞ்சித்து ஏமாற்றி தனதாக்கிக்கொள்ள ஒருவர் விரும்பினால் அந்த விருப்பம் நிறைவேறிய பின் அப்பொருளாலேயே மிகுந்த தீமை உண்டாகும் என்பதே இதன் பொருள்.

கோபம், கடுமையான பேச்சு:

எதற்கெடுத்தாலும் கோபப்படுதலும், பிறரைக்கடுமையாகப் பேசுதலும் ஒருவனுக்கு அழிவைத்தான் உண்டாக்கும். ஆயிரம் நல்ல உதவிகளை, கோபத்தில் சொல்லும் ஒரு சொல் மறக்கச்செய்துவிடும்.
'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' என்பது வள்ளுவர் வாக்கு. (வெகுளாமை - குறள் எண்-305) ஒருவன் தான் நன்கு வாழவேண்டும், தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அவன் கோபமடையாமல் இருக்கவேண்டும். அப்படி அவன் சினத்தின் வசப்படுவானாயின், அந்தச் சினமே அவன் அழிவுக்குக் காரணமாகிவிடும். அது மட்டுமல்ல,

'ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.'
(குறள் எண்-128 - அடக்கமுடைமை) என்ற குறளின் மூலம் ஒருவன் கடுமையான சொற்களைப் பேசுவதனால் ஏற்படும் தீமையானது அவனுடைய மற்றெல்லா நன்மைகளையும் சேர்த்துக் கெடுத்துவிடக்கூடியது என்று கடுமையாகப் பேசுவதன் தீமையை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது பொதுமறை.

முயற்சியின்மை மற்றும் சோம்பல்:

'பொயியின்மை யாருக்கும் பழியென்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.'
என்ற குறளும் (குறள் எண் - 618 - ஆள்வினையுடைமை)

'மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.'
என்ற குறளும் (குறள் எண் - 608 - மடியின்மை)

ஒரு செயலைச் செய்யத்தொடங்கியபின், அதை விடாமுயற்சியுடன் தொடராமல் கைவிடும் தன்மைதான் ஒருவருக்குக் கேவலமேயன்றி, ஒருவர் உடல் ஊனம் அன்று என்று கூறும் வள்ளுவர், ஒருவனுடைய குடும்பத்தில் சோம்பல் என்ற வியாதி புகுமானால், அக்குடும்பமே துன்பத்தை அடைந்து, அடிமையாகும் என்று முயற்சியின்மை மற்றும் சோம்பலினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறார்.

அளவுக்கு மீறிய அச்சம் அல்லது அளவு மீறிய துணிச்சல்:
எந்த முயற்சியை மேற்கொள்ளப் பயப்படுபவரும், எதைப்பற்றியும் யோசிக்காமல் அளவுக்கு மீறிய துணிச்சலுடன் ஆழமறியாமல் காலை விடுபவரும் கண்டிப்பாக வெற்றி காண இயலாது. இதையே வள்ளுவர்
'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்று குறிப்பிடுகிறார்.

இவை மட்டுமல்ல, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை இவை இரண்டுமே மிகுந்த கேட்டை விளைவிக்கக் கூடியவை. அவ்வாறே, பிறரிடம் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்வது, பொய் பேசுவது போன்ற தோல்விக்கு வித்திடும் இத்தகைய குணங்களை நம்மிடம் இருந்து அகற்றினால், வெற்றி மாளிகையின் கதவுகள் நமக்காகத் திறந்து வழிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

வாய்மையே வெல்லும்


truth_growsமுன்னொரு காலத்தில் ஒரு பேரரசர் இருந்தார். செங்கோல் வழுவாமல் நல்லாட்சி நடத்திவந்த அவர், வயதாகிவிட்ட காரணத்தினால், தனக்கு அடுத்தபடியாக ஆட்சி நடத்த ஒரு நல்ல மன்னனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். தனது பிள்ளைகளையோ, தன்னிடம் பணிபுரிபவர்களையோ தேர்ந்தெடுக்க அவர் விரும்பவில்லை. வேறு ஒரு வித்தியாசமான வழியில் தனது வாரிசைத் தேர்ந்தெடுக்க விரும்பிய அவர், நாட்டில் உள்ள இளைஞர்களை எல்லாம் அழைத்து ஒரு போட்டி வைத்தார்.

"பிள்ளைகளே! நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அதிசயமான விதையைக்கொடுக்கப்போகிறேன். அந்த விதையை நீங்கள் நட்டு நன்றாக வளர்த்து ஒரு வருடம் கழித்து என்னிடம் கொண்டுவரவேண்டும். அந்த விதையில் இருந்து என்ன வளர்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அவர்களில் ஒருவரை நான் என் வாரிசாகத் தேர்ந்தெடுப்பேன்" என்று கூறினார்.

இளைஞர்களுக்கு ஒரே திகைப்பு. ஒவ்வொருவரும் தானே அடுத்த சக்கரவர்த்தியாக வேண்டும் என்று விரும்பினர். அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட விதையை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி அதைக் கவனமாக விதைத்து, நீரூற்றி வளர்த்தனர். நாட்கள் நகர்ந்தன. அரசர் அவர்கள் அனைவரையும் தங்கள் செடியை எடுத்துக்கொண்டு வரும்படி அறிவித்தார்.

இளைஞர்கள் அனைவரும் தத்தமது செடி உள்ள தொட்டிகளுடன் அரண்மனைக்கு விரைந்தனர். ஒருவன் தொட்டியில் மலர்கள் பூத்துக்குலுங்கின. இன்னொன்றில் கனிகள் இருந்தன. ஒவ்வொருவரும் ஆரோக்கியமும் அழகும் நிறைந்த செடிகளுடன் வரிசையில் நிற்கத் தொடங்கினர். ஆனால், ஏழைவிவசாயியின் மகனான அறிவொளி என்ற இளைஞனின் தொட்டி மட்டும் காலியாக இருந்தது. அதில் செடி எதுவும் இல்லை.

அவனும் சக்கரவர்த்தி கொடுத்த விதையை நல்ல மண்ணில் ஊன்றி, நாள்தோறும் நீரூற்றிப் பாதுகாத்துவந்தான்தான். ஆனாலும் அவன் தொட்டியில் எதுவும் வளரவில்லை. விதையை வீணாக்கியதற்கு சக்கரவர்த்தி என்ன தண்டனை கொடுப்பாரோ என்ற கவலையுடன் அவனும் வரிசையில் நின்றான். மற்ற இளைஞர்களில் சிலர் அவனது காலித்தொட்டியைப் பார்த்துப் பரிகசித்தனர். சிலரோ, அவனைப் பரிதாபப்பார்வை பார்த்தனர்.

அரசர் அரசவைக்கு வந்தார். ஒவ்வொருவரையும் அவர்கள் வளர்த்த செடியை வந்து காட்டுமாறு பணித்தார். எல்லோரும் பெருமிதத்துடன் தங்களது செடியை அரசரிடம் காட்டிவிட்டு வந்தனர். அறிவொளியின் முறையும் வந்தது. அறிவொளி பணிவுடன் அரசர் முன் சென்றான். "அரசே! என்னை கருணைகூர்ந்து மன்னிக்கவேண்டும். நான் எத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டும் அந்த விதை முளைக்கவில்லை. தாங்கள் தந்த அதிசய விதையை நான் வீணாக்கிவிட்டதற்காக வருந்துகிறேன்." என்றான். அரசர் அவனை முறைத்துப் பார்த்தார். "நீ இங்கேயே நில். உன்னை என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்" என்று கடுமையான குரலில் சொன்னார். அறிவொளி பதட்டமும், பயமுமாக அங்கேயே நின்றான்.

எல்லா இளைஞர்களும் தமது செடிகளைக்காட்டி முடித்தவுடன் அரசர் அறிவொளியை அருகில் வருமாறு அழைத்தார். "சபையோர்களே! இங்கு கூடியிருக்கும் அனைத்து வாலிபர்களிடமும் ஒரு வருடத்திற்கு முன்பு நான் ஒரு விதையைக் கொடுத்தேன். அதை வளர்த்து என்னிடம் கொண்டு வந்து காண்பிக்குமாறு கூறினேன். இந்த ஒரு இளைஞனைத்தவிர அனைவரும் தாங்கள் வளர்த்த செடியினைக்கொண்டுவந்து காட்டினார்கள். இவன் ஒருவன் மட்டும் அது முளைக்கவேயில்லை என்று காலித்தொட்டியைக் கொண்டு வந்திருக்கிறான்.

எனவே இவனுக்கு நான் ஒரு தண்டனை வழங்கப்போகிறேன்" என்று கூறி இடைவெளி விட்டார் அரசர். அந்த இளைஞனுக்கு என்ன தண்டனை விதிக்கப்போகிறார் என்றறியும் துடிப்பு அவையோர்களிடம் உண்டானது. "எனக்குப் பின் இந்த அரசைக்காக்கும் கடுமையான பொறுப்பை இந்த இளைஞனிடம் ஒப்படைக்கிறேன். அதாவது இவனை எனது வாரிசு என அறிவிக்கிறேன்." என்ற அரசர் திகைத்து நின்ற அறிவொளியை அணைத்துக்கொண்டார். மற்ற இளைஞர்களிடமும் அவையோர்களிடமும் சலசலப்பு. 'இது என்ன விந்தை! செடியை வளர்க்காத இவனுக்கா அரசபதவி?' என்ற கேள்விக்குறி அனைவரின் முகத்திலும் இருந்தது.

"உங்கள் வியப்பு எனக்குப் புரிகிறது. ஒரு வருடம் முன்பு நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதை வேகவைத்த விதை. அது முளைக்கவே முளைக்காது. நீங்கள் அனைவரும் அது முளைக்கவில்லை என்றதும் ஏதோ ஒரு விதையை விதைத்து அச்செடியைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினீர்கள். அறிவொளி ஒருவனுக்குத்தான் தனக்குத் தந்த விதை முளைக்கவில்லை என்றாலும், அதை என்னிடம் சொல்லும் தைரியமும் நேர்மையும் இருந்தது. துணிவு என்பது என்ன தெரியுமா? தனது தவறைத் தானே ஒப்புக்கொள்வதுதான். அத்தகைய துணிவும், நேர்மையும் உள்ள அறிவொளியை எனது வாரிசாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார் அரசர். மற்ற இளைஞர்கள் தலை குனிந்தார்கள்.

மகாத்மா காந்தி பார்ப்பதற்கு ஒன்றும் பெரிய வசீகரத்தோற்றம் உடையவரில்லை. பெரும் பேச்சாற்றல் உடையவர் இல்லை. கையால் எந்த ஆயுதத்தியும் பயன்படுத்தியதில்லை. ஆனால், ஆங்கில அரசு அவரைக்கண்டு பயந்தது. இந்திய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அது எதனால்? அவரது துணிவும் நேர்மையுமல்லவா அவரை மகாத்மா ஆக்கியது? நாம் ஒரு சின்னத் தப்பு செய்து விட்டால் கூட பழியினை யார்மீது போடலாம் என்று அலைகின்றோம். அவரோ தான் செய்த தான் செய்த தவறுகளை எல்லாம் தனது நூலில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

"உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்"


என்ற திருக்குறளுக்குப் பொருத்தமானவர் அவரை விட யாரும் உண்டா?
(பொருள் மனத்தால் கூட பொய் சொல்லுவதை நினைக்காதவன் உலகில் உள்ள மக்கள் மனத்தில் நிலையான இடம் பிடிப்பான் - வாய்மை- குறள் எண் 294)


பிறர் நம்மிடம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டுமெனில் நாம் முதலில் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமல்லவா? நாம் எப்பொழுதும் பொய், புரட்டு, ஏமாற்று வேலை என்றிருந்தால் நம்மை யார் நம்புவார்கள்? நாம் என்னதான் தான தருமங்கள் செய்தாலும், உண்மை பேசவில்லை என்றால், நம் மீது என்ன மரியாதை பிறருக்கு ஏற்படும்? பிற நல்ல செயல்கள் எதுவும் செய்யாவிடிலும் ஒருவர் பொய் சொல்ல மாட்டார் என்ற நற்சான்றிதழ் பெற்றுவிட்டால் அதவிட என்ன பெருமை வேண்டும்? இதைத்தான் வள்ளுவர்

"மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை."
என்கிறார்.

அதாவது மனத்தால் கூட பொய் சொல்லாத ஒருவன், தானமும் தவமும் செய்பவரை விட மேலானவன் என்பது அவர் கருத்து. (வாய்மை - குறள் எண் - 295)

பொய் சொல்வதற்கு நினைவாற்றல் வேண்டும். சாமார்த்தியம் வேண்டும். ஆனால் உண்மை பேசுவது எளிதல்லவா? ஆனால், நாம் ஏன் உண்மை பேசுவதில்லை? விளைவுகளை எதிர்கொள்ளும் துணிச்சல் இன்மைதானே!

ஆனால், உண்மையைப் பேசும் துணிவே எல்லா எதிர்விளைவுகளையும் தாங்கிக்கொள்ளும் சக்தியைத் தரும். முடிவில் வெற்றியையும் தரும். "3 இடியட்ஸ்" படத்தில் ராஜுவிற்கு வேலை கிடைத்ததைப் போல.

வாய்மையே வெல்லும் என நம்புவோம். அதைக்கடைப்பிடிப்போம்


.

கற்க கசடற...

PDF

BOOK'கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார் கொன்றை வேந்தன் ஆசிரியர். 'Knowledge is Power' என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. பல செய்திகளை ஒன்று அல்லது இரண்டு அதிகாரங்களில் அடக்கிய திருவள்ளுவர் கல்வியின் பெருமையைப் பல அதிகாரங்களில் விளக்குகிறார்.

கல்வி என்பது ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. தொட்டிலில் கிடக்கும் காலம் முதல் சுடுகாடு சென்றடையும் வரை நாம் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கற்பது என்பது ஒரு தொடர்ச்சியான, முடிவே அற்ற ஒரு செயல். எனவேதான் வள்ளுவர் அதன் இன்றியமையாமையை பல்வேறு அதிகாரங்களில் விளக்குகிறார்.


பொருட்பாலில் இரண்டாவது மூன்றாவது இடங்களைப்பிடிக்கின்றன கல்வியும், கல்லாமையும். கல்வி கற்பதன் சுவையை, இன்பத்தை, பயன்களை 'கல்வி' அதிகாரத்தில் விளைக்கும் வள்ளுவர், கல்லாமையின் இழிவையும் அடுத்த அதிகாரத்திலேயே சுட்டுவது சிறப்பு.

படிப்பது என்றால் எப்படி? சும்மா கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வில் எழுதிவிட்டு, அடுத்த நாளே அதை மறந்துவிடும் கல்வியை அவர் விரும்பவில்லை.
"கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."

என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறார். கற்க வேண்டியவற்றைக் குற்றமின்றி, சந்தேகமின்றி ஆழ்ந்து கற்கவேண்டும். பின் கற்றவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான் கல்விக்கு திருவள்ளுவர் அளிக்கும் விளக்கம்.

கல்வியறிவுடையவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் என்ன வேறுபாடு?
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்."

என்று ஒரே போடாகப்போட்டுவிடுகிறார் அடுத்தாற்போல். கண்கள் இருப்பதன் பயனே கல்வி கற்பதுதான். அப்படியிருந்தும் கல்வி கற்காதவர்கள் முகத்தில் உள்ள கண்கள் புண்களுக்குச் சமம் என்பவர், கல்வியதிகாரத்தின் கடைசிக்குறளில்
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்ற யவை."

என்பதன் மூலம் கல்விதான் ஒருவர் அடையக்கூடிய செல்வங்களில் சிறந்தது. மற்ற எல்லாச் செல்வங்களும், கல்விச்செல்வம் இல்லாவிடில் பயனற்றவை என்பதைச் சுட்டுகிறார். திருடரால் திருட இயலாதது, தீயால் வேகாதது, கொடுத்தால் குறையாதது என்ற சிறப்புகள் எல்லாம் கல்விச்செல்வத்துக்கு மட்டுமே உரித்தானவை அன்றோ?

வள்ளுவர் கருத்துப்படி கல்லாதவர், கற்றவர் இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன தெரியுமா?
"விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்."

கல்வி கற்றவர்களை மனிதர்களுக்கும், கல்லாதவர்களை விலங்குகளுக்கும் ஒப்பிட்டுச் சாடுகிறார் வள்ளுவர்.
அத்துடன் நிற்கவில்லை அவர். கல்வி என்பது நூல்களைக் கற்பதுதான் என்று இல்லை. முறையாகக் கல்வி கற்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?
அதற்கும் வழி சொல்லிவிடுகிறார்.
"கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை."

கல்வியைக் கற்கவில்லையென்றாலும் பரவாயில்லை. பெரியவர்கள், சான்றோர்கள் பேச்சைக் கேளுங்கள். அது உங்களுடைய துன்பமான காலகட்டங்களில் துணைபுரியும் என்று அறிவுரை கூறுகிறார். படிப்பின் ஒரு பகுதி, பிற பெரியோர்கள், அறிஞர்களின் வாய்மொழியைக் கேட்டறிதல் கூடத்தானே? எல்லாவற்றையும் நாமே செய்து அனுபவித்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் ஒரு ஆயுள் போதாதல்லவா? இன்றும் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல துறை அறிஞர்களை அழைத்துப் பேசச்சொல்வது அவர்களிடம் இருந்து நாம் கேட்டறிய வேண்டிய பல பொக்கிஷங்கள் இருப்பதால்தான். எனவே, கல்வி, கல்லாமைக்கு அடுத்து அவர் 'கேள்வி' அதிகாரத்தை அமைத்திருக்கிறார்.

படித்தால் மட்டும் போதுமா? படிப்பறிவை, பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவது முக்கியம் அல்லவா? படித்தவர் எல்லாம் புத்திசாலியுமில்லை. படிக்காதவர் எல்லாம் முட்டாள்களுமில்லை. "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பது பழமொழி. இங்கு ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

நான்கு நண்பர்கள் காட்டுக்குள் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அதில் மூவர் கல்வியறிவு பெற்றவர்கள், மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்கள். ஒருவன் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாத பாமரன். காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் அவர்கள் ஒரு சிங்கத்தின் எலும்புக்கூட்டைக் கண்டார்கள். பாமரனுக்கு தங்கள் அறிவின் சக்தியைக் காட்டவேண்டும் என்று படித்த நண்பர்கள் நினைத்தார்கள். உடனே முதலாமவன் தனது சக்தியைப் பயன்படுத்தி அது ஒரு சிங்கத்தின் எலும்புக்கூட்டை ஒருங்கிணைத்தான். அடுத்தவன் அதன் உடலை தனது மந்திரங்கள் மூலம் உண்டாக்கினான். மூன்றாமவன் தான் அதற்கு உயிர் கொடுக்கப் போவதாகச் சொல்லி மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

படிப்பறிவில்லாதவன் சொன்னான், "நண்பர்களே! நீங்கள் செய்வது தவறு. சிங்கத்துக்கு நீங்கள் உயிர் கொடுத்தால், முதலில் நீங்கள்தான் சிங்கத்துக்குப் பலியாவீர்கள்". மற்ற நண்பர்கள் சிரித்தார்கள். "உன்னால் இந்த மாதிரி பெரிய காரியங்கள் எதுவும் செய்ய இயலாது என்பதால், எதையாவது சொல்லி எங்களைத் தடுக்காதே! கல்வியின் சக்தியை நீ அறியவில்லை." என்று கேலி செய்தார்கள். பாமரன் இரண்டொரு முறை எடுத்துச்சொல்லிப்பார்த்தும் அவர்கள் தங்கள் எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை. பாமரன் உடனடியாக அந்த இடத்தைவிட்டு அகன்று ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டான்.

மூன்றாமவன் தனது மந்திர ஆற்றலைப் பயன்படுத்தியதும் சிங்கம் உயிர் பெற்றது. மிகுந்த பசியுடன் இருந்த அது மூன்று படித்த நண்பர்களையும் பாய்ந்து அடித்துக் கொன்று தின்றுவிட்டது. சாகும்பொழுது மூன்று நண்பர்களும் பாமரன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கூறிய அறிவுரையைக் கேட்காமல் இருந்ததற்காக நொந்துகொண்டே உயிரை விட்டார்கள்.

இந்த மாதிரியான ஏட்டறிவு மட்டும் உள்ளவர்களைக் கற்றவர் என்று ஒப்புக்கொள்ளவில்லை வள்ளுவர்.
"அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். "
என்பது அவர் வாக்கு.
நிகழப்போவதை அறிய வல்லவர்களே அறிவுடையவர்கள், அதை அறிய இயலாதவர்கள் கல்லாதவர்களே என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலேயே
"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்."
என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார்.

மனிதர்களுக்கு 'எதற்கு அஞ்ச வேண்டும், எதற்கு அஞ்சக்கூடாது' என்ற தெளிவு வேண்டும். அத்தெளிவு உடையவர்களே அறிவாளிகள். நான் எதற்கும் அஞ்சமாட்டேன் என்று வீரம் பேசித்திரிவது மடத்தனம் என்பது அவர் எண்ணம். அது மட்டுமல்ல. கல்வியின் பயன் என்ன? அறிவை வளர்த்துக்கொள்வது. யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது நம்மை அறிவுடையவர்கள் ஆக்காது. எனவேதான்
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என்றும் தமது கருத்தைத் தெளிவாக்கி விடுகிறார் அவர்.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப்புடைத்து."

ஒருவர் தமது ஒரு பிறவியில் கற்ற கல்வி அவரது ஏழ்பிறப்புக்கும் உதவி செய்யுமாம். எனவே நாமும் "கசடறக் கற்போம், கற்றதை வாழ்வில் கடைப்பிடிப்போம்."


தகவல் தொடர்பில் உடல் மொழியின் பங்கு


தகவல் தொடர்பு(Communication) என்பது ஒருவர் தமது கருத்துக்களை, தமது தேவைகளை பிறருக்கு அறிவிப்பது ஆகும். ஆராய்ச்சிகள் பல, விலங்குகள், பறவைகள், ஏன், மரம் செடி கொடிகள் கூட தகவல்களைத் தமக்குள் பரிமாறிக்கொள்கின்றன என்று கூறுகின்றன. ஆனால், மனித இனமானது பேசவும் எழுதவும் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் தொடர்பின் உயரிய நிலையில் உள்ளது. இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுகையில் நமது அடிப்படைத் தகவல் தொடர்பு சாதனம் உடல் மொழியே(Body Language) ஆகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டினரும் பேசும் மொழி மாறுபடலாம். ஆனால் உடல் மொழி பொதுவாக மனித இனம் முழுவதற்குமே பொதுவானது. பசிக்கிறது என்பதற்கு வயிற்றைச் சுட்டிக்காட்டினாலும், போதும் என்பதற்குக் கையை உயர்த்திக்காட்டினாலும் எல்லாருமே புரிந்துகொள்ளலாம்தானே.


body-languageநாம் பேசவும் எழுதவும் பல மொழிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருவருடன் நேரில் பேசுகையில், தகவல் தொடர்பினைச் செயல்படுத்துவதில் நாம் பேசும் வார்த்தைகளின் பங்கு, அதாவது பேசும் மொழியின் பங்கு எவ்வளவு தெரியுமா? வெறும் ஏழே சதவீதம்தான். ஏறத்தாழ முப்பத்து எட்டு சதவீதம் பங்கு நாம் பேசும் தொனிக்கு (அதாவது குரலில் ஏற்படும் மாறுபாட்டிற்கு-Vocal). ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது வருத்தமாகவோ கோபமாகவோ இருக்கிறாரா என்பதை அவர் குரலை தொலைபேசியில் கேட்டால் கூட நம்மால் உணர முடியுமல்லவா?
தகவல் தொடர்பில் மீதம் ஐம்பத்து ஐந்து சதப் பங்கினை வகிப்பது நமது உடல் மொழி ஆகும். ஒருவர் முகத்தினை, அவர் அமர்ந்திருக்கும் விதத்தை, வைத்து அவரது மனநிலையை நாம் கணிக்கிறோம்தானே? அதிலும் உடல்மொழியில், குறிப்பாகக் கண்பார்வையின் பங்கு மிக அதிகம். ஒருவர் கண்ணைப் பார்த்தே அவரது உணர்வைப் புரிந்துகொள்ளலாம் என்பார்கள். அதைப் பார்த்துப் புரிந்துகொள்ள எதிராளிக்குக் கண் அவசியமல்லவா? இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் தகவல் தொடர்பில் பெரும்பங்கினை, அதாவது தொண்ணூற்று மூன்று சதவீதப் பணியினை, உடல்மொழி மற்றும் குரல்தான் வகிக்கிறது. எனவே,அத்தகைய உடல் மொழியை நாம் புரிந்துகொள்வதும், நமது உடல் மொழியினை நேர்மறையானதாகவும், செம்மையானதாகவும் மாற்றிக்கொள்வதும் தகவல் தொடர்பில் நாம் வெற்றிபெற அவசியமாகிறது.
இதைத் திருவள்ளுவர் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்துள்ளார் என்பதை 'குறிப்பறிதல்' (பொருட்பால்) என்ற அதிகாரமும், அதில் உள்ள குறள்களும் தெரிவிக்கின்றன.

'குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்'
(குறள்- 705) என்ற குறளில், பிறரது முகத்தைக் கண்டு அவரது உள்ளக் குறிப்பினை அறிய இயலாதவருக்குக் கண் என்ற ஒரு உறுப்பு இருந்து என்ன பயன் என்று கேட்கும் திருவள்ளுவர், தமது அடுத்த குறட்பாவில்
'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்'
. (குறள் -706) என்று உடல் மொழியில் முக்கியப் பங்கு வகிக்கும் முகத்தினைப் பற்றிக் கூறுகிறார். (பொருள்- தன்னை அடுத்திருக்கும் பொருளை, பக்கத்தில் இருக்கும் பொருளைக் காட்டும் கண்ணாடி போல், மனம் நினைப்பதை வெளிக்காட்டக்கூடியது முகமாகும்)

மேலும் ஒருவனது மனநிலையை, அவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறானா, வெறுப்புடன் இருக்கிறானா என்பதைக் காட்டும் அளவுகோல் முகமே என்பதை
'முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.'

என்ற தமது 707ம் குறளில் கூறுகிறார் அவர்.

உடல் மொழியில் கண்ணின் பங்கே மிக அதிகம் என்பதையும் கீழ்க்கண்ட குறள்கள் மூலம் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.

'பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்'

(குறள் 709; பொருள் - ஒருவன் நமக்குப் பகைவனா நண்பனா என்பதை, கண்ணின் தன்மை அறிந்தவர்களுக்கு எதிராளியின் கண்ணே கூறிவிடும்)
'நுண்ணியம் என்பார் அளக்குக்கோல் காணுங்கோல்
கண்ணல்லது இல்லை பிற'

(குறள் 710; பொருள் - கூரிய அறிவு படைத்தவர்கள், பிறரைக்குறித்து, பிறர் மனநிலை குறித்து அளவிடப் பயன் படுத்துவது கண்ணைத்தவிர வேறொன்று இல்லை)

உடல்மொழியின் சில கூறுகள்:
ஒருவரது அருகாமை அல்லது தொலைவு(Proximity), அவர் நிற்கும் விதம், கைகள் மற்றும் கால்களை அவர் வைத்திருக்கும் விதம்(Posture), முக பாவனைகள்(Facial Expressions), அவர் பார்வை(Eye contact) இவை எல்லாம் உடல் மொழியின் சில கூறுகள் ஆகும்.

ஒருவர் தமக்கு முன் பின் அறிமுகமற்றவரின் அருகில் நிற்கும்பொழுது அல்லது தமக்குப் பிடிக்காதவர் ஒருவருடைய அருகில் உள்ள இடைவெளியானது தமது நண்பர் அல்லது உறவினரது அருகில் இருக்கின்ற பொழுது உண்டாகும் இடைவெளியை விட அதிகமாக இருக்கும். மனத்தின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த இடைவெளி குறைவதுண்டு. இந்த இடைவெளி மிக நெருங்கிய உறவாகிய தாய்-மகன்/மகள், கணவன்- மனைவி இவைகளில் மிகமிகக் குறைவாக இருக்கும். அதே போல் உயரதிகாரியின் அருகில் அவரின் கீழ் பணிபுரிபவர் நிற்பதற்கும், தமது சக ஊழியர் அருகில் நிற்பதற்கும் மிகுந்த வேறுபாடு காணப்படும். இந்த அருகாமை அல்லது தொலைவு இருவருக்கிடையே உள்ள அன்பின் நெருக்கத்தையோ, அல்லது ஒருவரது பதவி, அந்தஸ்து வேறுபாடுகளையோ சுட்ட வல்லது.

நிற்கும்/அமரும் விதம்: ஒருவர் நம் பேச்சை ஆர்வத்துடன் கேட்கிறாரா என்பதை அவர் நிற்கும் அல்லது அமரும் விதத்தில் இருந்தும், அவர் கைகளை வைத்திருக்கும் நிலையில் இருந்தும் அறிய இயலும். ஒருவர் முன்னோக்கியோ, பக்க வாட்டிலோ சாய்ந்து அமர்ந்துகொண்டு, நமது கண்களைக் கவனிப்பாராயின் அவர் நமது பேச்சை இரசிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம். அவர் பின்புறம் சாய்ந்துகொண்டும், பார்வையை வேறு எங்கோ நிலைக்கவைத்தும், அல்லது அமர்ந்திருக்கும் நிலையை அல்லது நிற்கும்பொழுது கால்களை அடிக்கடி மாற்றிக்கொண்டும் நின்றால் அவர் நமது பேச்சினால் கவரப் படவில்லை, சலிப்படைந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதே போல், கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்பாக நிற்பாரானால் நமது கருத்தினை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

முக பாவனைகள்: ஒருவர் முகத்தில் இருக்கும் புன்னகை, புருவத்தை வைத்திருக்கும் விதம், உதடுகளை மூடியிருக்கும் தன்மை இவை அவரது மனநிலையைத் தெளிவாகக்கூற வல்லவை. புன்னகையைப் பார்த்தே அது மகிழ்ச்சியில் உண்டான புன்னகையா, கேலிப்புன்னகையா அல்லது துயரத்தாலோ வெறுப்பாலோ உண்டான புன்னகையா என்று இனம் பிரித்துவிட இயலும். அதே போல் புருவங்கள் நெறிவது சினத்தின் அடையாளமாகவும், புருவங்களை உயர்த்துவது வியப்பின் அடையாளமாகவும், முகத்தைச் சுளிப்பது அருவருப்பின் அடையாளமாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

கண்கள்: கண்களை முகத்தின் வாயில் என்று சொல்வதுண்டு. ஒருவர் கண்ணை மட்டும் பார்த்தே அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று அறிய இயலும். அதனால்தான் யாராவது பொய் சொல்கிறார் என்று தோன்றுகையில் 'கண்ணைப்பார்த்துப் பேசு' என்கிறோம். ஒருவர் மற்றவர் கண்களைச் சந்திப்பதில் இருந்தே அவரது தன்னம்பிக்கை, நேர்மை இவற்றை உணர முடியும். ஒருவர் பேசுகையில் மற்றவர் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எதிர்மறையாகக் கருதப் படுகிறது. பொய், விருப்பமின்மை, பதட்டம் இவற்றை அவை சுட்டுகின்றன. கேட்பவர் பேசுபவரின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆர்வமின்மை, சலிப்பு, பேசுபவர் மீது உள்ள கோபம் அல்லது வெறுப்பு முதலியவற்றைக் காட்டுகிறது.

இவ்வாறு உடல்மொழி உணர்த்தும் ஃபீட்பேக்கைத் தெரிந்து கொள்வோமானால், எதிராளியின் மன நிலையைப் புரிந்துகொண்டு தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும். இதுவே நாம் தகவல் தொடர்பில் வெற்றி பெறச் சிறந்த வழி. தகவல் தொடர்பில் வெற்றி பெறுபவர் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மேம்பாடு காண்பதும் உறுதி!!!



நன்றி: பாலகார்த்திகா & http://eelanation.com/tamil-ilakiyam

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்