திட்டமிட்டு செயலாற்று!

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம்’ இது குடும்பத்தை வளப்படுத்தும் வாசகம் மட்டுமல்ல, வாழ்வை வளப்படுத்தும் வாசகமும் கூட ஒரு செயலுக்கான திட்டத்தை சரியாக தீட்டி முடித்தாலே பாதி செய்து முடிந்து விட்டதாகப் பொருள். வாழ்வு அதன் போக்கிலேயே அமைந்துவிட்டால், விரும்பும் வகையில் நடத்த திட்டத்தை அமைத்துக்கொள்ளும் முயற்சிக்கும் பெயர் திட்டமிடல்.
திட்டம் என்பது செயலின் ஒரு பகுதி. எந்தொரு செயலிலும் தெளிவு வேண்டும். உணவு தயாரிப்பது குறித்து திட்டமிடுகிறார். குடும்பத் தலைவி. வகுப்பில் கற்பிக்க வேண்டியது குறித்து ‘பாடத்திட்டம்’ தயாரிக்கிறார். ஆசிரியர் ஆண்டுதோறும் ‘பட்ஜெட்’ எனப்படும் வரவு’ செலவத் திட்டத்தையும், வளர்ச்சிப் பணிகளுக்காக ஐந்தாண்டுத் திட்டங்களையும் வகுக்கின்றது அரசாங்கம்.
திட்டமிடல் என்பது வெற்றிக்கான ஒரு சிறந்த முதலீடு எதிர்பாரா சவால்களை சந்திக்க தயார்படுத்திக் கொள்வது. கனவை நனவாக்குவதற்கான ஒரு தொடக்கம். திட்டமிடல் மூலம் உழைப்பு வீணாவது தவிர்க்கப்படும் முயற்சிக்கு உண்டான அதிகபட்ச பலன் கிடைக்கும். பேரிட்டோ என்ற அறிஞரின் கருத்துப்படி திட்டமிட்டு செய்யும் செயலில் 20% உழைப்பில் 80% காரியம் முடிந்து விடும். திட்டமிடாத 20% காரியம் மட்டுமே முடியும்.
வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு பணிந்து, பயந்து சரண்டைந்து விடாமல் அதனை எதிர்கொள்ளத் ‘திட்டம்’ துணைபுரியும் மூட நம்பிக்கையைப் பகுத்தறிவினாலும், அறியாமையை அறிவுத் துணிவினாலும், ‘எல்லாம் விதிவசம்’ என்ற தோல்வி மனப்பான்மையை முறைப்படுத்திய முயற்சிகளாலும் வெற்றி கொள்வதையே அது குறிக்கிறது.
செயல் சிறியதானாலும், பெரியதானாலும் அதற்கேற்ப ஒரு திட்டம் கட்டாயத் தேவை. திட்டம் வகுத்து செயல்படும் ஒருவர் திட்டமிடாதவரைக் காட்டிலும் விரைவாக அந்தப் பெட்டியில் அடுக்குவார். அது போல திட்டம் தீட்டி வேலை செய்கிறவர் திட்டமின்றி வேலை செய்கிறவரைக் காட்டிலும் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பார்.
செயலாற்ற நேரம் ஒதுக்குவது போல் திட்டமிடவும், நேரத்தை ஒதுக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதற்கு முன்பாக ‘பிளான்’ தயாரிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது தான் ‘பிளானை’ வேண்டியவர்களிடம் காண்பித்து அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மாற்றி வரையலாம். வீடு வெள்ளைத்தாளில் வரைபடமாக இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். ஆனால் திட்டமிடாமல் வீட்டைக்கட்டத் தொடங்கி, பார்க்க வரும் ஒவ்வொருவரும் ஒரு யோசனை சொல்ல அதற்கேற்ப வீட்டைக் கட்டுவதும் இடிப்பதும் மீண்டும் கட்டுவதுமாக இருந்தால் என்னாவது?
திட்டமிட என்ன செய்ய வேண்டும்? திட்டம் என்பது இருக்கும் இடத்தில் ஆரம்பித்து அடைய வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்லும் ‘ரூட் மேப்’ ஆகும். முதலில் குறிக்கோளைக் கட்டம் கட்டமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதன்மையான குறிக்கோள் உயிர் மூச்சுப் போல ஒவ்வொரு செயலிலும் இழையோடிக் கொண்டிருக்க வேண்டும். திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் அந்த தலைமைக் குறிக்கோளை அடையும் படிக்கற்களாக அமைய வேண்டும்.
குறிக்கோள் அடையக் கூடியதாகவும், அதே நேரத்தில் சுலபமாய் அடைய முடியாததாகவும் இருக்க வேண்டும். பிறகு குறிக்கோளை அடைவதற்கான காலவரம்பை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். திட்டம் தீட்ட முடிவிலிருந்து தொடங்க வேண்டும். அதாவது எந்த நாளில் வேலை நிறைவடைய வேண்டுமோ அந்த நாளிலிருந்து திட்டம் படிப்படியாக பின்னோக்கி செல்லவேண்டும். ஓராண்டிற்கு ஒரு மாதத்திற்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு நாளைக்கு எனத் திட்டமிட வேண்டும்.
திட்டங்களை அடுக்கடுக்காக வைத்துக் கொள்வதால் செயல்பாடுகள் திட்டத்திலிருந்து விலகிச் சென்றால் கண்டறிந்து சரிசெய்வது எளிதாக இருக்கும். ஆயிரம் பேர் உள்ள கூட்டத்தில் ஒருவரை கண்டுபிடிப்பது சற்று கடினம். ஆனால் ஐம்பது பேரில் கண்டுபிடிப்பது எளிது. அதுபோல ஆண்டுத் திட்டத்தில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத கோணல் மாணல்களை ‘ஒருநாள் திட்டத்தில்’ கண்டறிவது எளிது.
திட்டங்கள் காலவரையோடு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் செய்ய வேண்டியது, ஆறு மாதத்தில் செய்ய வேண்டியது,, ஒரு வருடத்தில் முடிக்க வேண்டியது என்று கால எல்லையோடு வரையறையில்லாத திட்டங்கள் வெறும் கற்பனைகள். பேரார்வம் காரணமாக ஆறுமாத வேலையை ஆறேவாரத்தில் முடிக்க திட்டமிட்டால் அது தோல்வியாக முடியும். செயல் திறனைக் கணக்கிட்டால் வெறும் திட்டத்தை மட்டும் வகுத்துக்கொள்வதால் பயன் ஏதும் விளையாது.
செயலில் ஏற்படக்கூடிய தடைகள், இயற்கையாக உண்டாகும் இடர்பாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். எதிர்பாராதது நடந்தால் என்ன செய்வது என்று சிந்தித்தால் அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க வேண்டும். திட்டத்தில் 5 முதல் 10 சதவீத் வரை கால தாமதம் அல்லது பொருள் இழப்பு ஏற்படலாம். தவறில்லை. ஆனால் அது 25 அல்லது 30 சதவீதம் என்று அதிகரித்தால் திட்டத்தில் குறை இருக்கிறது என்று பொருள். உரிய வகையில் காரணங்களை கண்டறிந்து அக்குறைகளைக் களைய வேண்டும்.
திட்டமிட்டு செயல்படும்போது தேவையில்லாத அவசரமோ, தாமதமோ கூடாது. அவசர அவசரமாக நடந்து சென்றால் நல்ல பாதையில் கூட தடுக்கி விழ நேரிடும். அவசரமாக பாட்டிலில் தண்ணீர் ஊற்றும்போது பெரும்பகுதி தண்ணீர் வெளியேதான் சிந்தும். பதற்றத்துடன் பத்து நிமிடங்களில் செய்யும் வேலையை திட்டமிட்டபடி பதறாமல் செய்தால் மூன்றே நிமிடங்களில் ஒழுங்காகச் செய்து விடலாம்.
அளவுக்கு அதிகமான தாமதமும் கூடாது. தாமதிக்க அந்த செயல் மீதுள்ள ஆவல் குறைந்து ஒரு சோர்வு ஏற்பட்டு செயலாற்ற மனமில்லாமல் போய்விடும். சிலர் ‘ஜாக்கிரதையாக இருக்கிறேன்’ என்ற பெயரில திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். செயலில் இறங்க மாட்டார்கள். மிகுந்த அவசரம், வீண் தாமதமும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.
செயல்வடிவம் பெறாத திட்டங்கள் பயனற்றவை. செயல்படுத்தாத திட்டங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மனம் அப்படியே பழகிவிடும். எனவே, திட்டமிட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். தாமதித்துக் கொண்டே இருந்தால் இல்லாத சந்தேகமும் பயமும் கவ்விக் கொண்டு காரியத்தை முடக்கி விடும். வீடு கட்டிய போது தோன்றாத அச்சம், பயம், வீட்டைக் கட்டி முடித்த பிறகு நிதானமாக எண்ணிப் பார்த்தால் தோன்றும். திருமணத்தை நடத்தி முடித்த பெற்றோர் ஆறமர உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் ‘எப்படி நடத்தி முடித்தோம்’ என்று அவர்களுக்கே மலைப்பாக இருக்கும்.
எந்த செயலாக இருந்தாலும் சரி, அதில் வெற்றி பெறவிரும்பினால் வரையறுக்கப்பட்ட தெளிவான திட்டத்துடன் செயலாற்ற வேண்டும். திட்டம் வகுத்து செயல்பட்டால் அந்தக் காரியம் வெற்றியடைந்தே தீரும். ஒருகால் தோல்வியே நேர்ந்தாலும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அவையெல்லாம் நல்ல அனுபவங்களாக, படிப்பினைகளாக அமைந்து அடுத்த கட்டத்தில் வெற்றியைத் தேடித்தரும்.
ஆற்றில் விழுந்த இலைச்சருகு நீரோடு செல்வதைத் தவிர வேறு வழியிலை. தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க இறைவன் வழங்கியுள்ள வாயுப்புகளுள் ஒன்று திட்டமிட்டு செயலாற்றுதல்.
எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சிறியதுதான். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய கதவையும் சுலபமாகத் திறக்கலாம். அதுபோல திட்டமிடல் வெற்றி வாயில்களைத் திறக்கும் சாவிகள். உங்கள் கல்வி, வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி குறித்து சிந்தியுங்கள்! திட்டமிடுங்கள்! நம்பிக்கையோடு உழையுங்கள்! வெற்றி உங்களுடையதாக இருக்கும்.

Reference: http://goo.gl/PES0MW

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்