மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு
‘இதிலை இருக்கிற அவ்வளவு வருத்தமும் எனக்கு இருக்கு’ என்றவள் தனது கைப்பையைத் திறந்தாள். நீண்ட தூரம் பயணித்து வந்திருந்த பெண் அவள்.
அவளது கைப் பையிலிருந்து வெளிவந்தது பொக்கிசம் போல பொத்தி வைத்திருந்த ஒரு பொருள்.
வேறொன்றும் இல்லை. சென்ற வார வீரகேசரியின் ஒரு பக்கம். ‘கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்;?’ என்ற கட்டுரை அதில் இருந்தது.
‘கைகால்களில் எரிவு, மேல் எரிவு, நெஞ்சு எரிவு, வயிற்றெரிவு எரியாத இடமே இல்லை’ என்றாள். மேலும் விசாரித்தபோது ஏற்கனவே பலரிடம் மருந்து எடுத்திருந்தமை தெரியவந்தது.
தலைக்கான சீரீ ஸ்கான், வயிற்றரை ஸ்கான், இரைப்பையில் குழாய் விட்டுப் பார்க்கும் endoscopy பரிசோதனை தைரொயிட் பரிசோதனை, குருதியில் B12 பரிசோதனை என ஏராளமான பரிசோதனைகள் செய்து பல மருந்துகளும் உட்கொள்கிறாள்.
‘நோய்கள் குறைஞ்சு கூடுகிறதே ஒழிய மாறுகிறபாடாக் காணவில்லை’ எனச் சலித்துக் கொண்டாள் கணவன் இறந்து பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கத் தனியே வாழும் பெண். ஓன்று போக மற்றொரு பிரச்சனை மாறி மாறிப் பிறந்து கொண்டே இருக்கிறது.
மற்றவர் நடு வயதுக்காரன். மிக மெலிந்த உடலும் சோர்ந்த முகமுமான அவரை மனைவி அழைத்து வந்திருந்தாள். ‘எதுவுமே ஏலுதில்லை என்று வீட்டோடு கிடக்கிறார். கடைக்குப் போறதில்லை. நான்தான் கடையையும் பார்த்து வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டிக் கிடக்கு. சீனி டயபட்டிஸ், ரீபி (TB) என்று எந்த ஒரு சீரியசான பிரச்சனையும் கிடையாது என்று டொக்டர் சொன்னவர்’
ஏதாவது கான்சராக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு. ஆனால் நல்ல காலம் அவ்வாறு இருக்கவில்லை. ‘ ஒண்டுமே ஏலாமல் கிடக்கு. படுத்துக் கிடக்க வேணும் போலை கிடக்கு. படுத்தாலும் நித்திரை வருகுதில்லை. ஞாபகம் மறதியும் கூடிப்போச்சு’ என அனுங்கினார்.
‘மகளுக்கு கலியாணம் வருகுது. இந்த மனிசன் இடிச்ச புளி மாதிரி மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்குது’ எனக் கணவனை திட்டினாள் மற்றொரு பெண். பிடிக்காத கலியாணம் அல்ல. இவர்களாக மனம் பிடித்து ஏற்பாடு செய்ததுதான். ஆனால் அதிலையும் இவருக்கு சந்தோசத்தைக் காண முடியாதிருக்கிறது. எதுவுமே இவருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.
மனச் சோர்வு
மேற் கூறிய இவை எல்லாமே மனச்சோர்வின் அறிகுறிகள்தான். மருத்துவத்தில் depressive disorder என்பார்கள். ஆண் பெண் இருபாலாரிலும் ஏற்படும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. இருந்தபோதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு தாம் மனச்சோர்வு நோயினால்தான் பாதிக்கப்பட்டிருக்pறோம் என்பது புரிவதில்லை.
கைகால் உழைவு, மேல் எரிவு, வயிற்று எரிவு, சோர்வு, இயலாமை, தூக்கக் குறைபாடு அல்லது அதிகரித்த தூக்கம், பசியின்மை அல்லது கூடுதலான பசி, முதுகுவலி, உடல் வலிகள், தலைக்கனம், மறதி, என உடலில் பல்வேறு துன்பங்களுடன் மருத்துவர்களிடம் வருவார்கள். தீர விசாரிக்காவிடில் மருத்துவர்களும் ஏமாற நேரிடும்.
முக்கிய அறிகுறிகள் மூன்று
பல்வேறு அறிகுறிகள் இருந்தாலும் அடிப்படையான மூன்று முக்கிய விடயங்கள் இருக்கிறதா என மருத்துவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள்.
- மனநிலை மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும். எந்நேரமும் மிகவும் கவலையோடு இருப்பார். உற்சாகம் அறவே இருக்காது. எதிர்காலம் இருண்டு போனதான உணர்வு ஏற்படக் கூடும்.
- எதிலும் மகிழ்ச்சி இருக்காது. ஆர்வம் அற்றுவிடும். எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம் நிகழ்ந்தாலும் அதிலும் மகிழாது விடுபட்டவர் போல இருப்பார். வழமையாக நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ந்திருக்கும் வழக்கமுள்ள அவர் இப்பொழுது அவற்றில் சந்தோசம் அடையமாட்டார். தனிமையை நாட வைக்கும். பாலுறவு பாகற்காயாக் கசந்து ஈடுபடுவது அரிதாகும். இயலாமற் போவதும் உண்டு.
- மிகுந்த சோர்வாக இருப்பார். அல்லது களைத்தது போல இருப்பார். உடல் தளர்ந்து இயங்க முடியாதது போல உணர்வார்.
இந்த மூன்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகள், அதுவும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து இருந்தால்தான் அதை மனச்சோர்வு என மருத்துவர்கள் கணிப்பார்கள்.
ஏனெனில் திடீரென ஏற்படும் நெருங்கியவரது மரணம், பிரிவு, பொருளாதார இழப்பு போன்ற இழப்புகளும் சோகங்களும் இத்தகைய மனநிலையை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் அவை நாளோட்டத்தில் மறந்து மறைந்துவிடும். வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
ஆனால் மனச்சோர்வு அவ்வாறு எளிதில் மாறாது. நீண்ட நாட்களுக்குத் தொடரும்
மேலே கூறிய முக்கிய அறிகுறிகளுக்கு அப்பால் வேறு பல சிறிய அறிகுறிகளும் மனச்சோர்வு நோயாளிகளிடம் ஏற்படலாம்.
ஏனைய அறிகுறிகள்
தூக்கக் குழப்பம் முக்கிய அறிகுறியாகும்.
- பொதுவாகச் சோர்வாக இருப்பதால் படுக்க வேண்டும் போல இருக்கும்.
- ஆனால் தொழில் மற்றும் குடும்பக் கடமைகள் காரணமாக அந்நேரம் படுக்க முடியாதிருப்பதால் உற்சாகம் குறையும்.
- படுத்தாலும் ஆழ்ந்த உறக்கம் கிட்டாது. அதிகாலையில் முழிப்பு வந்துவிடும்.
- ஆனாலும் எழுந்திருக்க முடியாத சோர்வு படுக்கையில் கிடக்கச் சொல்லும்.
- சிலர் நித்திரை வராவிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அல்லது எழுந்து நடப்பார்கள். வேறு படுக்கையில் கிடந்து பார்ப்பார்கள்.
- காலையில் எழுந்திருக்க மனம் வராது. மேலும் படுத்திருக்க வேண்டும் போலவும் இருக்கலாம்.
- ஆனால் ஒரு சிலருக்கு தூக்கம் அதிகமாவதும் உண்டு.
பொதுவாகச் சிந்தனையை ஒருமுகப்படுத்தவோ எதிலும் கருத்தூன்றிச் செயற்படவோ முடியாதிருக்கலாம். இதனால் திடமான முடிவுகள் எடுக்க முடியாது திணறும் நிலை ஏற்படும். வழமைபோலத் தனது தொழிலில் ஈடுபடுவதைப் பாதிக்கும். வேலை இழப்பு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மறதியும் சேர்ந்து வருவதுண்டு.
தன்னம்பிக்கை குறையும். ஆற்றாமை மிகும். எதுவும் தன்னால் செய்ய முடியாது என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். உதவியற்று நட்டாற்றில் தான் கைவிடப்பட்டதாகத் தோன்றும்.
மாறாக சிலருக்கு குற்றவுணர்வு எற்படுவதுண்டு, தானே தவறிழைத்தவன், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத, செய்ய முடியாத பாவி எனத் தன்னைத்தானே பிழை சொல்லி துன்பப்படுவதும் உண்டு..
உணவு விடயத்தில்;
- பொதுவாக நாட்டமின்மை ஏற்படும்.
- பசிக்காது, பசித்தாலும் உண்ண மனம் வராது.
- இவை காரணமாக உடல் மெலியும் வலு குறையும்.
- உளச்சோர்வுடன் உடற் சோர்வும் இணையலாம்.
- மாறாக ஒரு சிலரில் அதீத பசி எற்படுவதுண்டு.
- தமது இயலாமையை உடற் பலயீனம் எனக் கருதி அதிகம் உண்பவர்களும் உண்டு.
- தமது மனஉணர்வைப் புரிந்து கொள்ளாமல் எதையாவது வாயில் அடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இதனால் எடை அதிகரிக்கலாம்.
காரணம் புரியாது நீண்ட நாட்களாகத் தொடரும் உடல் உழைவு, கைகால் பிடிப்பு, தசைக் குறண்டல், தலையிடி போன்ற தெளிவற்ற அறிகுறிகளுடனும் மனச்சோர்வு நோயாளர்கள் மருத்துவரை நாடுவதும் உண்டு.
மிக ஆபத்தானது தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதாhகும். வாழ்வின் மீதான பற்றின்மையும் குற்றவுணர்வு போன்றவையும் தற்கொலை எண்ணங்களுக்கு வித்திடுவதுண்டு. உடல் எரிவு என்ற பிரச்சனையுடன் வந்த அந்தப் பெண் ‘ நான் ஏன் உயிரோடை இருக்கோணும் என்ற யோசினை வருகுது’ என்று சொன்னவுடன் நான் உசாரானேன். நோயினால் வரும் உணர்வு அது, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை அவளுக்கு விளக்கி தீவிரசிகிச்சையை ஆரம்பித்தேன்.
இருந்தபோதும் நேரிடையாகக் கேட்கும்போது தற்கொலை எண்ணங்களை பல நோயாளிகள் மறுத்துவிடுவதுண்டு. அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையேயான உணர்வுகளை வைத்து மருத்துவர்கள் நோயை இனங்காண நேரும்.
தமது உடல் நோய்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது போல தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்களுடன் பகிரும் வழக்கம் எமது சமூகத்தில் இல்லை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.
மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமே தங்களது பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,
இறுதியாக
- மனச்சோர்வு என்பது தலையிடி பிரஸர் நீரிழிவு போல மற்றொரு நோய்தான்.
- சீனி, கொலஸ்டரோல் உப்பு போன்ற இரசாயனங்களால் எவ்வாறு நோய்கள் ஏற்படுகிறதோ அதே போல மூளையில் உள்ள சில இரசாயன மாற்றங்களால் தோன்றுவதுதான் மனச் சோர்வு நோய்.
- தானே தேடிக் கொண்டது என வெட்கப்பட வேண்டிய வியாதி அல்ல.
இதற்கான நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. சிறப்பான மருந்துகள் உள்ளன. பூரண குணம் கிடைக்கும்.
ஆயினும்
- இதற்கான சிகிச்சையை குணம் கண்டவுடன் நிறுத்தக் கூடாது.
- பொதுவாக குணம் கணட பின்னரும் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்தால்தான் மீளவும் வராது தடுக்க முடியும்.
- எனவே தாங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது.
- பொதுவாக மருத்துவர்கள் மனச்சோர்விற்கான மருந்துகளைத் திடீரென நிறுத்துவதில்லை. படிப்படியாகக் குறைத்தே நிறுத்துவார்கள்.
- எனவே மருத்துவர் சொல்லும் வரை தொடர வேண்டும்.
Referance: https://goo.gl/GH9icS
கருத்துகள்
கருத்துரையிடுக