அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியும்

 நீங்கள் ஒரு உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அதனை எதிரிலிருப்பவர் சந்தேகப்படாதவாறு உங்களால் சொல்ல முடியுமா?
முடியும் என்று எண்ணுகிறோம். நாம் பொய் சொல்லும்போது அதனைக் கேட்பவர் உணரமாட்டார் என்று எண்ணியே சொல்கிறோம்.
ஆனால் எமது உள்ளுணர்வுகளை முகத்திரை போட்டு முழுமையாக மறைப்பது சாத்தியம்தானா?
அல்லது உங்கள் உடல் தனது மொழிகளால் நீங்கள் எதனையோ மறைப்பதை மற்றவர்களுக்குப் புட்டுக் காட்டிவிடுமா?
மறைக்க விரும்பும் உண்மையானது, முகம் முழுவதும் அப்பிக் கிடப்பதை எவராலும் மறைக்க முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உண்மை பொய் மாத்திரமல்ல, நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைக்க முயல்கிற எல்லா உணர்வுகளையும் உங்கள் விருப்பத்தை மீறி முகம் வெளிப்படுத்திவிடும். சந்தோசம், துக்கம், ஏக்கம், ஏளனம், பொறாமை போன்ற எந்த உணர்வும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஒருவனது உணர்வுகளை அவனது உடல் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வறிஞர்கள் பல வழிகளில் ஆய்வு செய்கின்றனர். நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகள் முதல் நாடகத் தன்மை வாய்ந்த ரி வீ நேரடி ஒலிபரப்புகள், மேடை நிகழ்ச்சிகள் போன்ற பலவும் அவர்களது ஆய்விற்கு உள்ளாகின்றன.
வார்த்தைகளுக்கு அப்பாலான உடலின் ஒவ்வொரு மொழியையும் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். நீங்கள் உரையாடும் போது மட்டுமல்ல எதுவும் பேசாதிருக்கும் போது கூட உங்கள் உடல் பேசும் மொழிகள் கவனத்தில் எடுக்கப்பட்டன.
ஒருவர் ஒரு முக்கிய பொய்யைச் சொல்லும்போது அதுவும் மற்றவர்களுக்கு தான் சொல்லும் பொய் பிடிபடாமலிருக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கும்போது அவரது வாய் மொழிக்கும், உடல்மொழிக்கும் இடையே பாரிய இடைவெளி; இருப்பதை அவதானிக்க முடியும் என்கிறார்கள்.
கலிபோனியா சான் பிரன்சிக்கோ அரச பல்கலைக்கழக உளவியலாளரான டேவிட் மட்சுமொடா (David Matsumoto) மற்ற எல்லா அங்கங்களையும் விட அதிகமான செய்திகளை முகம்தான் வெளிப்படுத்துகிறது என்கிறார்.
உதாரணத்திற்கு அவர் பிரபல விளையாட்டு வீரர் Alex Rodriguez வின் தொலைக்காட்சி நேர்முகத்தை எடுத்துக் காட்டுகிறார்.
‘நீங்கள் எப்பொழுதாவது ஆற்றலை ஊக்கப்படுத்தும் பொருட்களை உபயோகித்திருக்கிறீர்களா’ என்று கேட்டபோது ‘இல்லை’ என அவரது வாயிலிருந்து விடை உறுதியாக வந்தது.
ஆனால் அவ்வாறு கூறும்போது அவரது வாய் ஒருபுறம் கோணியதை அவதானிக்க முடிந்ததாம்.
சில மாதங்களின் பின் தான் ஸ்டிரொயிட் மருந்துகளை உட்கொண்டதை அவர் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.
ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எததகைய சமூகப் பின்னணியைச் சார்ந்தவராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அடிப்படை உணர்வுகளை ஒரே மாதிரித்தான் முகத்தால் வெளிப்படுத்துகிறார்களாம்.



ஏனெனில் அடிப்படை உணர்வுகள் நாம் கற்றுக் கொண்டவையல்ல, அனுபவத்தால் பெற்றும் கொண்டவையும் அல்ல.
அவை எம்மோடு கூடப் பிறந்தவை.
அடிப்படை உணர்வுகள் ஏழு என்கிறார்கள்.
மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், ஏக்கம், சஞ்சலம், பதற்றம் ஆகியனவே அவை.
உதாரணத்திற்கு மிக சந்தோசமான செய்தியைக் கேட்டவுடன் எமது முகம் விரிந்து மகிழ்ச்சியில் பூரிக்கிறதே. அது தன்னிச்சையாக எமது ஆழ்மனத்திலிருந்து உடனடியாக எழும் உணர்வின் பிரதிபலிப்பாகும் என்கிறார்.
அகத்தின் அழகை முகம் காட்டுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊடாடுபவரிடம் உங்களைப் பற்றிய நல்லெண்ண விதைகளை அது ஊன்றிவிடும்.



மாறாக அகத்தின் அழுக்கை அதுவும் மற்றவரிடம் இருந்து மறைக்க விரும்பும் அழுக்கை உங்கள் முகம் வெளிப்படுத்துவதானது திருடிய பொருளுடன் அகப்படுவது போலானது.
இதனைத் தடுக்க வழி ஏதும் உள்ளதா?
அகத்தை அழுக்கின்றி புனிதமாக வைத்திருப்பதுதான் ஒரே வழி என்று தோன்றுகிறது.

Referance: https://goo.gl/tVdwUK

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்