நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்
எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டொக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார்.
அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் வைத்திருக்கிறார். சீனியின் அளவைப் பார்த்து திருப்தியடைந்துவிடுவார்.
அவரது HbA1C அளவானது 8.5 ல் இருந்தது. HbA1C என்பது ஒருவரது சீனியின் அளவு சென்ற மூன்று மாதங்களாக எந்ந நிலையில் இருந்தது என்பதைக் கணிக்கும் முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். இது 6.5 என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.
நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநீரகம் பாதிப்புறவதை பலரும் அறிவார்கள். அதேபோல தங்கள் பார்வைத் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை.
நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம்.
நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு
கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஒளியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve) ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன.
உடவிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் பொருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவீர்கள்.அதுபோலவே விழித்திரைக் குருதிக் குழாய்களையும் பாதிக்கும்.
நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
அமெரிக்காவில் நீரிழிவு உள்ளவர்களில் 40 முதல் 45 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
எங்கள் நாட்டிலும் இதற்குக் குறையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தபோதும் இங்குள்ள பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் கண் மருத்துவரை அணுகுவதில் அக்கறை காட்டாது இருப்பதால் தாக்கத்தின் வீச்சு வெளிப்படையாகத் தெரியாது இருக்கிறது.
எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்
பாதிப்புற்ற விழித்திரை இரத்தக் குழாய்களிருந்து இரத்தம் கசியலாம்.. இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவற்றதாக்கும்.
இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியுலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கச் செய்யும்.
இதை macula edema என்பார்கள். கூரிய பார்வைக்கு அவசியமான மக்கியுலாவில் இவ்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும்.
நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைபடலாம். அடைபட்டவற்றை ஈடுசெய்வதற்காக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy என்பார்கள்.
அறிகுறிகள்
ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சற்று மங்கலாகலாகும்.
இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தானகவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும்.
எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம்.
இப்படி இருப்பது
நீரிழிவு விழித்திரை பாதிப்பு இருந்தால் இவ்வாறுதான் தெரியும்
சிகிச்சை
சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உப்புத் திரவத்தை மாற்றீடு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள்
நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள்
கற்றரக்ட்
கற்றரக்ட் என்பது கண்வில்லை வெண்மையடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் எவருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும்
குளுக்கோமா
குள்ககோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure) அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்புறுவதாகும். இதுவும் யாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்படத்தக்கது
இறுதியாக
இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை; மேலும் மோசமடைவதைத் தடு.ப்பதாகவே இருக்கும். எனவேதான் காலக்கிரமத்தில் கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
“எனக்கு கண் நல்லாத் தெரியுது” என்று கூறியவருக்கும் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரம்ப நிலை என்பதால் பாரிய சிகிச்சைகள் தேவைப்படவில்லை.
நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் குருதியின் சீனி அளவை கணிப்பதுடன் திருப்தியடைந்து விடக் கூடாது. கொஞ்சம்தானே அதிகமாக இருக்கு என அசட்டையாக இருக்கவும் கூடாது. ஏனெனில் நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு என்பது வெறும் குருதிச் சீனியின் அளவு அல்ல. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவானது சிறுநீரகம், நரம்புகள், இரத்தக் குழாய்கள், இருதயம், கண் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகனையும் சதாகாலமும் பாதித்துக் கொண்டே இருக்கிறது.
தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை நேரகாலத்துடன் கண்டறிந்தால் அவை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையில் நீரிழிவைக கண்டுபிடிப்பதும் அதனை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Referance: https://goo.gl/tHR9AQ
கருத்துகள்
கருத்துரையிடுக