நிதம் வருத்தம் சொல்லும் குழந்தையா? வெருட்டப்படுவது காரணமாகலாம்

முன்பள்ளிச் சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை அபிநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சில பிள்ளைகள் மிக உற்சாகமாக உடலசைத்து  முகத்தில் உணர்வுகள் தெறிக்கப் பாடினார்கள். சிலர் ஏனோதானோ எனப் பாடினார்கள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பாடியவர்ளும் இருந்தார்கள்.
2349077637
நிகழ்வு முடிந்து குழந்தைகள் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தூக்கச் சென்ற பெற்றோர்களது முகங்களிலிருந்து உணர்வுகளும் மாறுபட்டிருந்தன.
ஆவலோடு சென்று அணைந்துத் தூக்கியவர்கள் சிலர். முத்தமிட்டுக் கொஞ்சி வாழ்த்தினார்கள் மற்றவர்கள். ஏனாதானோ என அழைத்துச் சென்றவர்களும் இருந்தார்கள். முகத்தில் கோபம் கொப்பளிக்க ஆவேசத்தோடு அடிக்காத குறையாக இழுத்துச் சென்றவர்களும் இருக்கவே செய்தார்கள்.
Son Hugging Father
பெற்றோர்களது உணர்வுகளும் செயற்பாடுகளும் பிள்ளைகளை எவ்வாறு உள்ளுரப் பாதித்திருக்கும் என்பது எனது யோசனையாக இருந்தது.
  • அவை பெற்றோர்களினதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.
  • ஆசிரியர்களின்,
  • குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது,
  • பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனரது என யாராவது ஒரு சிலரின் செயற்பாடுகள் அவர்களை வெருட்டுவதாக அல்லது கொடுமைப்படுத்துவதாக இருக்கலாம்.
வெருட்டப்படுவதால் வரும் நோய் அறிகுறிகள்
கொடுமைப்படுத்தல் அச்சுறுத்துதல், வெருட்டுதல் போன்றவை அந்தப் பிஞ்சு உள்ளங்களை எவ்வாறு பாதிக்கும்.
article-0-09D64E52000005DC-323_468x350
பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி முறையிடத் தெரியாது. யாரிடம் முறையிடுவது எவ்வாறு முறையிடுவது போன்றவை அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். தங்களுக்கு நெருக்கமான தாய் தகப்பன், சகோதரங்கள், சகமாணவர்கள், ஆசிரியர் போன்றோர்களிலிருந்து வரும் அச்சுறுத்தலை இட்டு எங்கு முறையிடுவது என்பது புரியாது திகைப்பார்கள்.
இதனால் அவை உடல் நோயாக வெளிப்படலாம்.
அமெரிக்காவின் உயர்வகுப்பு மாணவர்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 20 சதவிகிதமானவர்கள் வெருட்டப்படுவதாக தெரிகிறது. ஓட்டிசம், உணவு ஒவ்வாமை, அங்கக் குறைபாடு பொன்ற பிரச்சனை உள்ள பிள்ளைகள் இதை எதிர்கொள்ள நேர்வது அதிகம் என்ற போதும் சாதாரண குழந்தைகளும் தப்ப முடிவதில்லை.
8626786_600x338
அடிக்கடியும், காரணம் விளங்காமலும் குழந்தைகளில் ஏற்படும் உடல் சார்ந்த அறிகுறிகள் பலவற்றிற்கும் அத்தகைய கொடுமைப்படுத்தல அல்லது வெருட்டல்கள் காரணமாக இருக்கலாம் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று. இத்தாலியிலுள்ள University of Padua ல் பேராசிரியர் Gianluca Gini தலைமையில் செய்யப்பட்ட ஆய்வானது Pediatrics  Sept. 16 இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டு;ளது.
பாடசாலைப் பிள்ளைகளில்
14 நாடுகளிலுள்ள 220,000 பாடசாலை செல்லும் பிள்ளைகளிடையே செய்யப்பட்ட 30 ஆய்வுகளின் தரவுகளை இது உள்ளடக்குகிறது. அச்சுறுத்தலுக்கு அல்லது கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக தங்களுக்கு சுகமில்லை எனச் சொல்லுவார்கள். அதாவது உண்மையில் எந்தவொரு நலக்குறைவும் இல்லாத போதும் வருத்தம் சொல்வார்கள் என்கிறது இந்த ஆய்வு.
bullying-kids
பொதுவாக அத்தகைய பிள்ளைகள் சொல்லும் அறிகுறிகள் என்ன?
  • தலையிடி,
  • வயிற்றுவலி,
  • முதுகுவலி,
  • கழுத்து வலி,
  • தோள் மூட்டு உளைவு,
  • சுவாசிப்பதில் சிரமம்,
  • தசைப்பிடிப்புகள்,
  • ஓங்காளம்,
  • வாந்தி,
  • வயிற்றோட்டம்
போன்றவையே பொதுவான அறிகுறிகளாகும்.
இது மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வு என்றபோதும் இது போன்ற அறிகுறிகளுடன் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களிடம் அழைத்து வருகிறார்கள்.
தலையிடி என்றால் மூளைக்குள் கட்டி என்றும், தலைப்பாரம் என்றால் சைனஸ் பிரச்சனையா என்றும் வயிற்று வலி என்றால் அப்பென்டிசைடிஸா அல்லது வேறு ஏதாவது ஆபத்தான நோயாக இருக்குமா எனப் பயந்தடித்து பிள்ளைகளை இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
எப்பொழுதாவது ஒரு தடவை அத்தகைய அறிகுறிகள் வந்தால் அது உண்மையான நோயாக இருக்கலாம். ஆனால் அடிக்கடியும், காரணம் புலப்படாதபோது வந்தால் அது பிள்ளையின் மனதில் மறைந்துள்ள ஏதாவது ஒரு அச்சம் காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
‘காலையிலை வயித்துக் குத்தெண்டு வயித்தைப் பிடிச்சுக் கொண்டு படுத்துக் கிடந்தான். இப்ப இஞ்சை வரக்குள்ளை சுகமாக் கிடக்காம்’ என்று சில அம்மாக்கள் சொல்லுவார்கள்.
ஆம்! சில பெற்றோர்கள் இது நோயல்ல என ஓரளவு ஊகித்துக் கொண்டாலும் அதை தெளிவு படுத்துவதற்காக மருத்துவரிடம் வருவது உண்டு.
‘கள்ளம் செய்யிறான்’ என்று சொல்லி அவர்களை நக்கல் அடிக்கக் கூடாது. இவை பெரும்பாலும் தாங்களாகவே வேண்டுமெனத் திட்டமிட்டுச் செய்வதில்லை. மனதில் உறைந்திருக்கும் கிலேசம் நோயாக வெளிப்பட்டிருக்கும். அதை விளக்க அவர்களுக்கு தெரிவதில்லை.
‘பள்ளிக் கூடத்திலை ஆராலை உங்களுக்கு கரைச்சல்’ எனப் பேச்சோடு பேச்சாகக் கேட்டுப் பார்த்தால் அச்சுறுத்தல் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகக் கூடும்.
அச்சுறுதலும் கொடுமைப்படுத்தலும் பல வகைப்படலாம்
அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும்போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.
bullying
விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள். ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும்போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.
கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
  • அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
  • அடித்தல்,
  • இழுத்தல்,
  • பட்டப் பெயர் வைத்து இழித்தல,
  • அச்சுறுதல்,
  • வெருட்டிப் பணம் கறத்தல்
  • அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
  • குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
  • இன்றைய காலத்தில்  குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.
200181253-001
‘பள்ளிப் பிள்ளைகள்தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது.
ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோரின் கடமை
கொடுமை தாங்காத நிலை ஏற்பட்டு குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. அல்லது கண்டல்கள் காயங்கள் என நிலமை மோசமாகும் வரை பொறுத்;திருக்கக் கூடாது.
அக்கறையுள்ள பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களே உசார்ப்படுத்திவிடும். பிள்ளை பதற்றமாக இருக்கக் கூடும்,
வழமைபோல உணவு எடுகாதிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம் தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் அவதானிக்க வேண்டும்.
Bullying_main_0425
வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே ஏசவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.
எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.
‘பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல’ என தெளிவுபடுத்த வேண்டும்.
இவ் விடயத்தில் ‘கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்’ என நம்பிக்கை அளியுங்கள். பாடசாலை ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.
சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பாடசாலை சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.
இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பி;கையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு செய்து குழந்தையிடமிருந்த அச்சத்தை விரட்டினால் அடிக்கடி தலையிடியும் வயிற்று வலியும் அணுகாது உங்கள் குழந்தைக்கு.
பாடசாலைக்கு கட் அடித்தல் இனி அதற்கு இல்லை. இல்லவே இல்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Referance: https://goo.gl/aX4rPq

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்