தோற்றம் பற்றிய அதிருப்தியும் சுயபிம்பத்தை உயர்த்தலும்

‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்.
கலந்தாலோசனையை முடித்துக் கொண்டு  வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.
தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்” என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.
“மூக்கு சற்று வளைவாக இருப்பதாக” அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.
தனது உடற்தோற்றம், அழகு, கவர்ச்சி போன்றவை பற்றிய அக்கறை பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.
  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம்.
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
  • தமது சருமம் மிருதுவாக இல்லை,
  • தனது குரல் கரகரக்கிறது.
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
  • தலைமுடி கொட்டுகிறது.
  • நகம் அசிங்கமாக இருக்கிறது.
இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.
இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.
ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றி மகிச்சியை கைப்பிடிக்க வேண்டும்.

மனத்தாக்கம் ஏற்படலாம்
தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.
  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது.
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.
அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அப்படியான மறைஎண்ணம் (Negative Thoughts) வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?
உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.
  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.
சிறப்புகளை மீள நினைத்தல் நன்று
உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.
எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.
தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.
உதாரணத்திற்கு
  • நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.
  • உங்களுக்கு விடை தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும்
  • விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.
“அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே” எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.
உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.
  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.
இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.
உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.
அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.

Referance: goo.gl/tVdwUK

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்