ஆய்வுக் கட்டுரைகள்- ஒவ்வொரு பூக்களுமே செல்கிறதே கவிஞர் இரா.இரவி
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் இதழில் உடைந்த நிலாக்கள் தொடர் எழுதிய காலம் தொன்று தொட்டு அவரது கவிதை வரிகள் ரசிகன் நான். இலக்கியத் தரமான வைர வரிகளைப் படிக்கும்போதே இந்த கவிஞருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று எனது உள்மனமும் சொல்லியது. இவர் ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்பதைவிட மிக சிறந்த தரம் வாய்ந்த நூலாசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களை அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாக்யராஜ். திரைப்படத்திற்கு பாடல் எழுதி தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றபோதும் இயல்பாக இருக்கும் சிறந்த பண்பாளர். செருக்கு இல்லாத சிந்தைக்குச் சொந்தக்காரர்.
ஒவ்வொரு பூக்களுமே... பாடலின் மூலம் உலகப் புகழ் அடைந்து இருக்கிறார் என்பது முற்றிலும் உண்மை. சீன மொழியில் இந்தப் பாடல் மொழி பெயர்க்கப்பட்டு இசையமைத்து பாடிவருகிறார்கள். பல்வேறு பள்ளிகளில் இந்தப் பாடல்தான் ஆரம்ப பாடலாக உள்ளது. இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு மனம் ஒன்றாமல் நமக்கு வெற்றி கிடைக்காது. என்னால் முடியாது என்று சொல்லும் எதிர்மறை மனமே மாறிவிடு. மலையாக இருந்தாலும் மோதிப் பார்க்கலாம். பனியாக இருந்தாலும் தொட்டுப் பார்க்கலாம் என மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது.
உடைந்து போகக் கூடாது.
பல தோல்வியாளர்களிடம் காரணம் கேட்டுப் பாருங்கள் உள்ளம் உடைந்துவிட்டது என்றுதான் சொல்வார்கள். என்றும் எப்போதும் உள்ளம் உடைந்து போகக்கூடாது. தோல்விக்கு துவளாத உள்ளம் வேண்டும். எப்படியும் சாதிப்பேன் என்ற உறுதி வேண்டும் என்று உணர்த்துகின்ற உணர்ச்சிமிக்க வரிகள் இது. உள்ளம் உடைந்துவிட்டால் வாழ்க்கை உடைந்துவிடும். உள்ளம் உடையாமல் காப்பதே உயர்ந்த தன்னம்பிக்கை.
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது. பலர் எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. என்ன வாழ்க்கை இது என்று புலம்பக் கேட்டிருக்கின்றோம். அவர்களது ரணங்களுக்கு மருந்தினை மயிலிறகால் மருந்துபோதும் வைரவரிகள் இவை. வாழ்க்கையை ரசிக்க வேண்டும். வெறுப்பு வரக்கூடாது என உணர்த்துகின்றன. வாழ்க்கையை நேசியுங்கள் எங்களை நீங்களே நேசியுங்கள் என உரைத்திடும் வரிகள்.
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் நெஞ்சுக்குள்ளும் காயம் உண்டு. உள்ளத்தில் காயம் இல்லாத ஒருவனும் இல்லை. நமக்கு மட்டும்தான் நெஞ்சுக்குள் காயம் என்று வருந்தாதே என ஆறுதல் தரும் வரிகள். இக்கரைக்கு அக்கரை பச்சை. வீட்டுக்குவீடு வாசப்படி என உணர்த்துகின்றன.
காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்துபோகும் மாயங்கள் உள்ளத்துக் காயத்தின் மருந்து காலம்தான். காலம் செல்லச் செல்ல காயங்கள் மாயமாக மறைந்துபோகும். மறந்துபோகும் கவலை வேண்டாம். கவலையை மறந்தால் காணாமல் போகும் என்பது முற்றிலும் உண்மை.
உளிதாங்கும் கற்கள்தானே
மண்மீது சிலையாகும்.
மண்மீது சிலையாகும்.
இன்று அழகிய சிலை என்று பாராட்டப்படும் சிலை அன்று உளியின் அடியில் வலிக்குப் பயந்து ஒதுங்கி இருந்தால் கல்லாகவே இருந்திருக்கும். இன்றைய கஷ்டமான உழைப்பு நாளைய வளமான வாழ்விற்கு அடித்தளம் என உணர்த்தும் வரிகள். தீக்காயம்பட்ட மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகி இசை தருகின்றது. கஷ்டம் துன்பம் கண்டு வாழ்க்கை வெறுத்துவிடாதே உழைத்து முன்னேறு என்று உணர்த்துகிறது. வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்.
குறிப்பாக பார்வையற்றவர்களின் இசைக் கச்சேரிகளில் முதல் பாடலாக இதைத்தான் பாடுகிறார்கள். மிகப் பிரபலமாகி நிலைத்து நிற்கும் பாடல் இது. பிடித்த பாடல் எது , என்று கேட்டால் பலரால் குறிப்பிடப்படும் பாடல். எனக்குத் தெரிந்த மிகப்பெரிய மனிதர்கள், வெற்றியாளர்கள், தொழில் அதிபர்கள் தங்களது செல்லிடப்பேசியில் அழைப்பு ஒலியாக இந்தப் பாடலைத்தான் வைத்துள்ளனர். வித்தக்க் கவிஞர் பா.விஜய் அவர்களும் இப்பாடலைத்தான் வைத்து உள்ளார். செல்லிடப் பேசியில் அதிகம் இடம்பெற்ற பாடல் இது. பழகுவதற்கு இனிய நண்பர், பந்தா எதுவும் இல்லாதவர். அவருடன் சில நிகழ்ச்சிகளுக்கும், வெளியிடங்களுக்கும் சென்று இருக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லாம் பரவசம் அடைந்து ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய கவிர் இவர்தான் என்று பூரிப்படைகிறார்கள். இவர் எழுதிய பாடலை சொல்லிவிட்டு பிறகுதான் கவிஞரின் பெயரைச் சொல்கின்றனர். உண்மையிலேயே இதுதான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். இத்தகைய பெருமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை ஒரே பாடலின் மூலம் இத்தனைப் புகழ் வேறு எந்தக் கவிஞருக்கும் கிடைத்ததில்லை.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்தப் பாடலை பாடத்திட்டத்தில் சேர்த்து இருக்கிறார்கள். திரைப்படப்பாடல் என்றால் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் இந்தக் காலகட்டத்தில் ஒரு திரைப்படப்பாடல் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது என்பது வாழும் காலத்திலேயே கவிஞனுக்கு சூட்டிய மகுடம் ஆகும். இந்தப் பாடலை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பாடல். மனநலம் குன்றியோர்க்கென உள்ள பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கேயும் இந்தப் பாடல் இசைக்கப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியோடு பாடினார்கள். இந்தப் பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு என்ன காரணம் என யோசித்து பார்தேன். இந்தப் பாடலில் மிகப்பெரிய இலக்கியக் கருத்துக்களோ. புரியாத வண்ணம் அமைந்ததுதான் காரணம். தனக்காக பாடப்பட்டது என இப்பாடல் கேட்கும் ஒவ்வொருவரும் நயமாக உணர்கிறார்கள்.
இந்தப் பாடலை இரண்டு வரிகளாக ஆராய்வோம். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
இந்த இரண்டு வரிகளில் ஈராயிரம் அர்த்தங்கள் உண்டு. முள்ளோடு மோதி வாழும் ரோஜா போராடவில்லையா மலர்ந்த மலரில் வண்டுகள் ருசிபார்க்கவில்லையா, மலர்ந்தும், உதிர்ந்தும் வாடுவதில்லையா, இப்படி எத்தனையோ போராட்டங்களுக்கு இடையே மலர்கள் சிரிக்கின்றபோது நீ ஏன் சோர்ந்து வாட வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
இந்த வரிகள் இரவு இரவாகவோ, இருட்டு இருட்டாகவே இருப்பதில்லை, நிச்சயம் பகல் வரும். அதுபோல துன்ப வாழ்க்கை துன்பமாகவே தொடர்ந்து விடாது. துன்ப இருள் நீக்கி இன்ப ஒளி வரும் என்று உணர்த்துகின்றது.
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்விலே
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்விலே
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
இலட்சிய வீரனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அறிவியல் புயல் அப்துல்கலாம் சொல்லுவார்கள். உன்னால் முடியும் வரை முயற்சிப்பது முயற்சி அல்ல... எண்ணிய செயல் முடியும்வரை முயற்சிப்பதே முயற்சி. அவ்வாறு கிடைப்பதே வெற்றி. அதுபோல வென்றே துருவேன் என்ற வெறியானது நெருப்புப் பொறி போன்று மனதில் இருக்க வேண்டும். அறிஞர் அண்ணா சொல்லுவார்கள் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். வலிகளைத் தாங்கிக் கொண்டால், வலிகளுக்காக வருந்தாத உள்ளம் கொண்டால் வாழ்க்கை வசப்படும் எனச் சொல்லிடும் வரிகள். எதையும் இயல்பாக எடுத்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் அறிவால் சிந்திக்க வேண்டும்.
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ்க்கை போராட்டம் உண்டு. உனக்கு மட்டும்தான் வாழ்க்கை போராட்டமாக உள்ளது என்று எண்ணி கண்ணீர் வடித்து காலம் கழிக்காதே என்று உணர்த்துகிறது. கண்ணீர் சிந்துவது கவலையை அதிகரிக்கும். கவலையைக் கிழித்து எழுந்து நடந்தால் உலகம் வசப்படும்.
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் வசமாகும்.
கண்ணில் என்ன நீரோட்டம்
உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ்க்கை போராட்டம் உண்டு. உனக்கு மட்டும்தான் வாழ்க்கை போராட்டமாக உள்ளது என்று எண்ணி கண்ணீர் வடித்து காலம் கழிக்காதே என்று உணர்த்துகிறது. கண்ணீர் சிந்துவது கவலையை அதிகரிக்கும். கவலையைக் கிழித்து எழுந்து நடந்தால் உலகம் வசப்படும்.
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் வசமாகும்.
மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்கிறார். கனவு காண்பதோடு நின்று விடாமல் அந்தக் கனவை நனவாக்க தினமும் முயற்சி செய்தால் இலட்சியம் நிறைவேறும் என விளக்கிடும் வரிகள்.
வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்.
கவிதை என்பது மிகவும் இனிமையான ஒன்று. எனவே வாழ்க்கையை கவிதையாகப் பாருங்கள். கவிதை எழுதிட சிந்திக்க வேண்டும். வானம் அளவிற்கு யோசித்து செயல்படுங்கள் எனச் சொல்லுகின்றன.
முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சுப் போல சுவாசிப்போம்.
முயற்சி செய் என பலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் மூச்சுப்போல சுவாசி என யாரும் சொன்னதில்லை. புதிய உவமை மூச்சு நின்றுவிட்டால் உயிர் போய்விடும்., முயற்சி நின்றுவிட்டால் வெற்றி போய்விடும் முயற்சி என்பது மூச்சைப்போல தொடர்ந்து இடைவிடாது நடைபெற வேண்டிய செயல் என்பதையும் விளக்குகின்றன.
இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு
நாம் கண்ட கனவுகள் அனைத்தையும் இலட்சியங்களையும் மறக்காமல் வைத்திருந்து அடைய வேண்டும் என்றும், செயல்படுத்த வேண்டும் என்றும் உணர்த்துகின்றன. கனவு நனவாகும். இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு முயற்சித்தல் வேண்டும்.
உன்னை செல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
அவன் என்ன ஜெயித்து விடுவானோ என அஞ்சி சாகாதே என்னை எவனாலும் வெல்ல முடியாது. தன்னம்பிக்கையோடு போராடு. வெற்றி நிச்சயம் என தன்னம்பிக்கை தரும் வைர வரிகள். ஊக்கம் தரும் உன்னத வரிகள்.
மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு போடு மரமாகும்.
சிறிய விதைக்குள்தான் விருட்சம் உள்ளது. எனவே மனதில் விதையை ஊன்றி சாதிக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற விதையை விதைத்தால் மரமாகி காய்காய்க்கும். கனி நல்கும்.
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்.
யாராவது நம்மை அவமானப்படுத்தினால் அதனால் ஏற்படும் வெறியும் வெற்றிக்கு வழி வகுக்கும். தோல்விக்கு கேலி செய்து அவமானப்படுத்தியவர்களின் முன்பு நாம் வென்றாக வேண்டும் என்ற உணர்வு உரமாக அமையும் என்பது முற்றிலும் உண்மை. அலட்சியம் செய்துவிட்டு இலட்சியத்தை நோக்கி நடைபோடு.
தோல்வி இன்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா
சோமநாதபுர படையெடுப்பு பற்றி கஜினி முகமது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். பதினேழுமுறை படையெடுத்தது. எடிசன் வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் விளக்கை கண்டுபிடிக்க எத்தனைமுறை அவர் தோற்றார் என்று. தொடர்ந்து முயற்சி செய்தார் என்பது.
அதுபோல தோல்வியை வரலாறாக எடுத்துக் கொண்டு அடுத்த தோல்வியை தவிர்க்கப் பார். துக்கப்படுவதால் மட்டும் பக்கம் வந்த தோல்வி தூர ஓடிவிடாது என்று உணர்த்துகிறார்.
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்.
முடிவு எடுக்கும் முன்யோசிக்கலாம். எடுத்தபின் யோசிப்பது மடமை. குழப்பமின்றி தெளிவாக இருக்க வேண்டும். சுனிதா வில்லியம்ஸ்க்கு வானம் வசப்பட்டது. வானம் செல்வேன் என்ற முடிவு இருந்த்து அந்த முடிவில் தெளிவு இருந்த்து. கல்பனா சாவ்லாவைப் போல நமக்கும் விபத்து நேருமோ என ஒருநிமிடம் அஞ்சி இருந்தாலும் இந்த சாதனையை அவரலால் நிகழ்த்தியிருக்க முடியாது. அவருக்கு வானம் வசப்பட்டது. அவரை உலகே பாராட்டி மகிழ்ந்தது.
பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளத்தில் உருவாகவேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பவர்கள் ஒவ்வொரு பூக்களுமே... பாடலைப் பாடி அதை திறம்பட மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் உங்கள் வேர்வைக்கு வேர் வைக்கும்.
Source:http://www.pavijay.net/ayvu_katturaikal.php?id=1
கருத்துகள்
கருத்துரையிடுக