ஞானக்குறள் - ஔவையார்

ஒவ்வொருவரும் பெறவேண்டிய பேறுகள் நான்கு என்பது ஒருவகைக் கோட்பாடு. அறம், பொருள், இன்பம், வீடு என்பன அந்த நான்கு பேறுகள். இவற்றுள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பேறுகளைப் பெற்றுத் துய்க்கும் வழிகள் பற்றித் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தெரிவிக்கிறது. வீடுபேறு நெறி பற்றித் தெரிவிக்கும் தனிநூல் ஔவையின் குறள். இந்நூலை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டது. திருக்குறளைப் போலவே இந்த நூலும் மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்கள் கொண்ட 31 அதிகாரங்கள் இதில் உள்ளன. இதற்கு அவ்வையார் குறள் என்றும் பெயர் உண்டு. 

திருக்குறள் கூறும் தவம், துறவு முதலானவை மக்கள் வாழ்வியலோடு தொடர்புடையவை, ஔவை குறள் கூறும் தவம் தன்னலம் பேணுவது ஆகும். 



1. வீட்டுனெறிப்பால்

ஞானக்குறள் - 1.மோட்சம் செல்லும் வழி


ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
1

ஒருவனிடம் ஆதியாய் நின்று அவனை ஆட்டிப் படைப்பது அவனிடமுள்ள அறிவு. அந்த அறிவுதான் அவனுக்கு முதலெழுத்து (தலையெழுத்து). நூலைப் பயிலும்போதெல்லாம் நூலின் கருத்துக்களை அவன் அறிவு தன்பால் இழுத்துச் சென்று நூலின் பயனாக ஆக்கிக்கொள்ளும். (நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் – திருக்குறள் 373) 


பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
2

சத்தி பரமாக உள்ளது. ஐம்பெரும் பூதங்கள் இந்தச் சத்திக்குள் உள்ளன. இவை தரம் மாறுவதால் பிறப்பு தோன்றுகிறது. சத்தாக இருக்கும் சத்தியைச் சக்தி என்கிறோம். நிலம், நீர், தீ, காற்று, விண் என்பவை ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் இராசயணக் கலவை மாற்றத்தால் புதுப்புதுப் பிறப்புக்கள் தோன்றுகின்றன. 


ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு.
3

காதில் கேட்கும் ஓசை, உடம்பைத் தொடும் பரிசம், கண்ணில் தெரியும் உருவம், வாயில் தெரியும் சுவை, மூக்கில் தெரியும் நாற்றம் ஆகியவை நமக்கு ஆசையை மூட்டுகின்றன. சேற்றில் ஆழ்த்துகின்றன. 


தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.
4

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் எண்ண உருவத்தால் தோன்றும் விளைவுகள். 


நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.
5

நிலம், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐந்து தோற்றங்களும் நிலத்தில் உள்ளன. நீர், தீ, காற்று, விண் என்னும் நான்கு தோற்றங்களும் நீரில் உள்ளன. தீ, காற்று, விண் என்னும் மூன்று தோற்றங்களும் தீயில் உள்ளன. காற்று, விண் என்னும் இரண்டு தோற்றங்களும் காற்றில் உள்ளன. விண்ணில் ’விண்’ என்னும் உயிர்த்தோற்றம் உள்ளது. 


மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.
6

மாயன், பிரமன், உருத்திரன், கேசன், சிவன் என்பன ஐந்து மூர்த்திகள். 


மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.
7

மால், அயன், அங்கி, இரவி, மதி, உமை, ஏல் என்பன ஆறு சக்திகள். 


தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு.
8

தொக்கு என்னும் தோல், உதிரம் என்னும் இரத்தம், ஊன் என்னும் உடம்புக்கறி, மூளை, நிணம் என்னும் கொழுப்பு, எலும்பு, பாலுணர்வு ஊற்றாகிய சுக்கிலம் என்பன ஏழு தாதுக்கள். 


மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
9

மண் நீர் தீ மதி (குளுமை) காற்று இரவி விண் மூர்த்தி என்பன எட்டு எச்சங்கள் 


இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.
10

இவையெல்லாம் ஒன்றுகூடி உடம்பாக உருவாகி விந்தைக் கொண்டுள்ளது. 


ஞானக்குறள் - 2. உடம்பின் பயன்


உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம்பினி லுத்தமனைக் காண்.
11

உடம்பினை நாம் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் எல்லாமே நம் உடம்பில் இருக்கும் உத்தமனைக் காண்பதே. உத்தமன் – ஒப்புயர்வற்ற இறைவன். 


உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே
யுணர்க உணர்வு டையார்.
12

அந்த உத்தமனை உணர்வால்தான் காணமுடியும். அந்த உணர்வுதான் உடம்பின் பயன். எனவே உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும். 


ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார்.
13

ஒப்புயர்வற்ற ஒரு பயன் உடம்பைப் பெற்றிருக்கும் பயனே. அது தரும் பயனாக விளங்கும் சங்கரனைச் சார்வோமாக. நம்மிடம் இருக்கும் சங்கரனிடம் நாம் உணர்ந்து சேர்ந்துகொள்வதே. 


பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.
14

பிறந்துள்ளோம். பேறு பெறவேண்டும். அதுதான் பிறப்பின் பயன். துறப்பதுதான் பிறப்பின் பயன். தூய நெறியில் வாழ்ந்த பின்னர் துறக்க வேண்டும். துறப்பது, எதனை? ஐம்புல ஆசையை. 


உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னிய தேயாம்.
15

துறவு உடம்பால் மட்டுந்தான். உணர்வால் துறக்க இயலாது. உடம்பிலுள்ள உணர்வால் எண்ணிப்பார்த்தே இதனைச் சொல்கிறேன். 


மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
16

மனத்தில் மாசு இல்லா நிலையை அடைந்த உடம்பே ஈசனாகத் தோன்றும். 


ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு.
17

உடம்பு நேசம் என்னும் பற்றால் ஆனது. அது மெய்ப்பாட்டு ஓசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும். 


உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.
18

உயிருக்கு உறுதி எல்லாமே உடம்பும் அதன் பயனுமே. உயிர் சோரும் அயிர் பீறிட்டுக்கொண்டு வந்தால் ஆதியாகிய இறைவனை விரும்பித் தேடிக்கொள். உடலோ மனமோ சோர்ந்தால் இறைவனைப் பற்றிக்கொள். 


உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.
19

உடம்புக்குள்ளும், அதற்குத் துணைநிற்கும் வெளிப்புறத்திலும் ஈசனை உறுதியாகப் பற்றித் தேடிக்கொள்வதே உடம்பினால் பெறக்கூடிய பயன். எல்லாப் பயனும் இதுவே. 


அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
20

சோற்றால் உருவாகியிருக்கும் உடம்பின் பயனெல்லாம் அதன் முன்னோனாகிய உயிரைக் காட்டுவதே. உயிரோட்டத்தைக் காட்டுவதே உடல். உயிர் என்பது சக்தியாகிய ஆற்றல்.. 


ஞானக்குறள் - 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை


கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு.
21

தன் பட்டறிவால் படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். பிறர் கூறுவனவற்றைக் காதால் கேட்கலாம். வெளியில் உள்ள பொருள்களைக் கண்ணாரக் காணலாம். உடம்பால் நாம் பெற்றிருக்கும் பயன் இந்த உற்றுணர்வுகளே. 


வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி னாய வொளி.
22

வெள்ளியின் மேல் தங்க முலாம் பூசியது போன்றது, செயல் தாக்கங்களால் நாம் பெறும் பட்டறிவு ஒளி. 


சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.
23

தானே சென்று, தானே ஐம்புலன்களாலும் நுகர்ந்து, பதிவாக்கி-வெளிப்படுத்தித் திரிந்துகொண்டிருக்கும் உள்ளுடம்பு என்றும் கெடாமல் நிலைத்திருக்கும். | பட்டறிவு நிலையானது | பிறர் தந்த அறிவு மாறக்கூடியது. 


வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.
24

வருகின்ற பயனை உண்டு அதனால் மகிழ்ந்ததாகி நிற்கின்ற ஒரு பயனை உடம்பானது காட்டும். | பயனைத் துய்ப்பது உடம்பு, உயிர் அன்று. 


அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.
25

நுட்பமாக ஆராய்ந்து பார்ப்போமானால், உடம்போடு நமக்கு உள்ள பழமையான தொடர்புதான் துன்பம் தரும் நம் பிறப்பை அகலச் செய்யும். 


நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.
26

உயிரானது முந்தைய பிறவியில் செய்த நல்வினை, தீவினை இரண்டையும் இப்பிறவியில் பெற்றிருக்கும் உடம்புதான் துய்த்துக்கொண்டு திரியும். அத்துடன் அடுத்த பிறவிக்கும் விதை போட்டுக்கொண்டிருக்கும். 


உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும்.
27

உள்ளுடம்பில் வாழ்வன ஒன்பது பொருள்கள். இந்த ஒன்பதும் அதனைப் பெற்றிருக்கும் ஏழைக்குக் கள்ள உடம்பாக இருக்கும் | ஏழை - துய்க்கத் தெரியாத ஏழை ஒருவன் | கள்ள உடம்பு – கண்ணுக்கும் மனத்துக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இயங்கும் உடம்பு. 


பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.
28

உடம்புக்குள்ளே இருக்கும் உள்ளுடம்பு பொய்மைகள் எல்லாவற்றையும் உணவாக எடுத்துக்கொண்டிருக்கும் விதை. 


வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது.
29

காற்றாலான உடம்பின் பயன் உடலுக்குள் காற்று இருக்கும் வரையில் வாழ்வதுதான். 


ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.
30

உடலில் ஒன்பது வாயில்கள். இவற்றை ஒருசேர அடைத்துவிட்டால் அதுவே அரன். அரன் என்னும் சிவன் அன்பு என்னும் அதில் ஒன்றிக் கிடப்பவன். | அன்பு அதில் | ஒன்பது வாயில் – கண் 2, காது 2, மூக்குத்துளை 2, வாய். எருவாய் (மலவாய்), கருவாய் (கரு சேரும் வாய்). 


ஞானக்குறள் - 4. நாடி தாரணை


எழுபத் தீராயிர நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல்.
31

துடிக்கும் நாடி நரம்புகள் உடலில் 72 ஆயிரம் (72,000) உள்ளன. அவற்றுள் முழுமையான பத்து நாடித்துடிப்புக்கள் முதன்மையானவை. 


நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.
32

நரம்பாக இருக்கும் இந்த நாடித் துடிப்புகளுக்கெல்லாம் உரமூட்டும் நாடித்துடிப்பு ஒன்று உண்டு. | மூலாதாரம். 


உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.
33

உந்து சக்தி இருக்கும் மூலாதாரத்தை மையமாகக் கொண்டு மேலும் கீழும் கட்டுக்கோப்பாக அவை பிரிந்து செல்லும் | உந்தி – மூலாதாரம் – ஆண், பெண் உணர்வுகளை உந்தும் அடிவயிற்று மையம். | பந்தித்தல் – உறவு கொள்ளுதல் | பரிந்து – ஆவலோடு. 


காலொடு கையி னடுவிடத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து.
34

உடலின் கால், கை, நடுப்பகுதிகளில் தாமரைபூவின் தண்டில் நூல் இழைகள் நுழைந்து இருப்பது போல அந்த நாடி-நரம்புகள் உடலில் நுழைந்து ஓடும். | நீரின் உயரத்துக்கு ஏற்பத் தாமரையின் நூலிழை ஈடுகொடுப்பது போல உடல் வளைவுக்கு ஏற்ப அவை வளைந்து கொடுக்கும். 


ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு.
35

சூரிய வெளிச்சம் பாய்வது போல உடம்பை மாறுபடுத்திக்கொண்டு நாடித்துடிப்புகள் பரந்து செல்லும். 


மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு.
36

நாடித் துடிப்பு உடம்பெங்கிலும் எலும்போடு இசைவாக ஒட்டிக்கொண்டிருக்கும் நரம்பில் நிகழும். இது பொய்மை இல்லாத உண்மை. 


உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை.
37

உயிரூற்று உந்தும் மூலாதார முதலில் ஓங்காரத்தின் உட்பொருள் சுழல்வது போல் சுழன்று நிற்பது நாடிநிலை ஆகும். 


நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து.
38

நாடிகளின் ஊடே புகுந்து போகும் நம் உணர்வு-ஒளி நமக்கு விரைவாக வீடு பேற்றினைத் தரும். 


நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு.
39

நாடித் துடிப்பின் வழக்கம் இது என்பதை அறிந்துகொண்டு, அடக்கமாக வளரும் ஒளியைக் காண்பது அறிவுடைமை ஆகும். 


அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.
40

அறிந்து, அடங்கி நிற்கும் நாடித் துடிப்பு ஒவ்வொன்றிலும் செறிவாக அடக்கமாக நிற்பதுதான் சிவம் | சிவப் பேறு. 


ஞானக்குறள் - 5. வாயுதாரணை


மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண்.
41

மூச்சை இழுக்கும் சக்தி மூலாதாரத்தில் தோன்றும். மூச்சை இழுக்கும்போது எட்டு (இருநான்கு) அளவீட்டு மாத்திரை காலம் இழுக்க வேண்டும். காற்று நுரையீரலில் (கால்வெளி) தங்கும் காலம் பன்னிரண்டு அளவீட்டுக்கால மாத்திரையாக இருக்க வேண்டும். 


இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள்.
42

இடைக்கலை என்பது மூக்கின் இடப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல். பிங்கலை என்பது மூக்கின் வலப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல் இரேசகம் என்பது மறு-துளை வழியாக மூச்சை வெளிவிடுதல். இவற்றை முறையாக அடைத்து இழுத்து வெளிவிட்டால் சிவன்-அருள் வந்தடையும். 


அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற்
பொங்குமாம் பூரகத்தி னுள்.
43

பெருவிரலும் சுண்டுவிரலும் செயல்படுவது அங்குலி. அங்குலியால் மூக்கின் ஒரு துளையை மூடி மூச்சை விட்டு இழுத்தால் உள்ளிழுக்கும் காற்று பூரித்துப் பொங்கும். (முதலில் உள்ளிருக்கும் காற்றை முற்றிலுமாக வெளிவிட்டுவிட்டு, பின்னர் வெளிக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்) 


எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற துணர்வு.
44

எண்ணல் இல்லாமல் ஊழிக்காலம் மூச்சை வெளியேற்றினால், மூச்சு தானே உள்ளே சென்று உடல் உணர்வு பெறும். 


மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே பதி.
45

உடலிலுள்ள மயிர்க்கால் வழியெங்கிலும் கூட காற்று உள்நுழைந்து வெளியேறும். குளிர்காற்று உடம்பைத் தாக்கும்மோது உடம்பிலிருந்து சூடு-காற்று வெளியேறும். இந்தக் காற்றை வெளியேறாவண்ணம் உள்ளே இருக்குமாறு பதித்துக்கொள். மூச்சுப்பயிற்சியால் உடம்புக் காற்றைச் சீராக்கிக்கொள். 


இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற்
றராசுமுனை நாக்கதுவே யாம்.
46

மூச்சு விடுவது போலப் பூரித்து நிற்கின்ற தராசுமுனை நாக்கு. நாக்கு வழியாக மூச்சுக்காற்றை வாங்கிப் பயிற்சி செய்துகொள். 


கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற்
றும்பிபோ னிற்குந் தொடர்ந்து.
47

மூச்சை உள் வாங்கும்போது உள் நுழையும் சிவனை (சீவன் = சிவன்) நினைத்துப் பார்த்தால் அது துதிக்கை கொண்ட யானை போல நின்று தொடரும். 


இரேச கபூரக கும்பக மாற்றிற்
றராசு போனிற்குந் தலை.
48

மூச்சை வாங்கி, நிறுத்தி, வெளிவிட்டு முறைப்படி பயிற்சி செய்தால், தலை நடுக்கம் இல்லாமல் தராசுமுள் போல நிலைகொள்ளும். 


வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி
லாயுட் பெருக்க முண்டாம்.
49

இப்படி மூச்சுக்காற்றின் போக்கைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்தால், வாழ்நாள் பெருகும். 


போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந்
தாழ்கின்ற வாயு வடக்கு.
50

வெளியேறும் மூச்சு சிவன் போன்றது. உள்வாங்கும் மூச்சு சீவன். எனவே உள்வாங்கும் மூச்சை அடக்குவதற்குப் பயிற்சி செய். போகின்ற வாயு = வெளியேறும் மூச்சு | தாழ்கின்ற வாயு = உள்வாங்கும் மூச்சு. 


ஞானக்குறள் - 6. அங்கிதாரணை


அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற்
பந்தப் பிறப் பறுக்கலாம்.
51

முடிவில் அங்கியை எரியும் தீயைப் போல நோக்கினால் நம்மோடு பின்னிக் கிடக்கும் பிறவியை அறுத்துவிடலாம். 


உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற்
கள்ள மல மறுக்கலாம்.
52

அங்கி உடம்புக்குள்ளும் உடம்புக்கு வெளியிலும் ஊறுமாறு நுரையீரலில் நிறுத்திப் பயிற்சி செய்தால், உடம்புக்கு உள்ளே சேரும் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளலாம். 


எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற்
கரியுங்கன லுருவ மாம்.
53

நம் உடல் எரிவது போன்று பாவனைப் பயிற்சி செய்தால் நம் உடம்பு உயிருடன் இருந்துகொண்டே எரிந்த கரியாக மாறும். 


உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து.
54

உள்ளத்தில் இருக்கும் அங்கி உடலோடு ஒன்றுபட்டு நுரையீரலில் ஊறினால் உடலில் இருக்கும் அங்கி வெண்ணிறச் சுடருடன் எரியும். 


உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி
லந்தி யழலுருவ மாம்.
55

அங்கியைத் தொப்புகுக்கு உள்ளே பாயும்படிச் செய்தால் அந்தி நேரம் போல அங்கி செந்நிறம் கொள்ளும். 


ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற்
பொய்யைந்தும் போகும் புறம்.
56

பொறி ஐந்தும், புலன் ஐந்துமாக இருக்கும் உடலுக்குள்ளே உணர்வுகளை நோக்கினால் பொய்மை உணர்வுகள் ஐந்தும் நீங்கிவிடும். 


ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி
லும்ப ரொளியாய் விடும்.
57

உடலிலுள்ள 51 கூறுகளை கொழுந்து விட்டு எரியும் அழல் போல நோக்கினால் வானுலக ஓளி வெளிப்படும். 


தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறை முடிக்கலாம்.
58

மனவெழுச்சிச் சுடரை துளங்கி எரிய விடாமல் பார்த்துக்கொண்டால் நமக்கு வேண்டிய குறைகளை நிறைவாக்கிக் கொள்ளலாம். 


உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து.
59

மனவெழுச்சி அங்கி மனக் கொழுவாகிய கருமையத்தில் ஊறினால், மெல்ல மெல்ல வீடுபேறாக அது மாறும். 


ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு.
60

ஒளியுடன் திகழும் சுடரை உணர்வினில் பொருத்திப் பார்த்தால் மன-மாலையாகிய செந்நிற விளக்கு வெள்ளியாக மாறி ஒளிரும். 


ஞானக்குறள் - 7. அமுததாரணை


அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம்.
61

தூய காற்றானது அண்ணாக்கை அடைந்து வெளிவருமாறு பயிற்சி செய்தால், தேவர்களுக்கே அரசன் ஆகலாம். 


ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.
62

16 கலைகளில் நிறைந்திருக்கும் அமிழ்தக் காற்றை உட்கொண்டால் உடம்பும் உயிரும் நிறைவுற்றதாகப் பொலிவு பெறும். 


ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்காலமில்லை புரிந்து.
63

“ஓம்” என்னும் ஒலியுடன் அமிழ்தக் காற்றை உண்டால் சாகாமல் வாழலாம். 


ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.
64

துரியம் என்னும் கலசத்தில் நினைவை நிலைநிறுத்தினால் உணவு இல்லாமல் வாழமுடியும். 


ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
65

நினைவாக ஊறும் அமிழ்தத்தை உணவாக்கிக்கொண்டு பார்த்தால், பிறவியை அறுக்க முடியும். 


ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம்.
66

ஞானம் என்னும் விளக்கில் ஒளி ஏற்றி அமிழ்தம் உண்டால் “சிவயோகி” ஆகலாம். 


மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.
67

நாச்சுவையாகிய மேலை அமிழ்தத்தை விளங்காமல் அடக்கி காற்றமிழ்தத்தை உண்டால் எமனை ஏமாற்றலாம். 


காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து.
68

மூச்சுக் காற்று என்னும் அனல்-சூடு கலந்த அமிழ்தத்தை உண்டால் அதுதான் “ஞானம்”. 


எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.
69

எல்லை இல்லா இந்த இனிய அமிழ்தை உண்ட நிலையில் இருந்தால் அதுதான் ஆதியில் தோன்றிய முதல் மூச்சொளி ஆகும். 


நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்.
70

பிறை நிலா மண்டபமாகிய ஆக்கினையில் அமிழ்தம் உண்டால் அந்தரத்தில் உலாவலாம். 


ஞானக்குறள் - 8. அர்ச்சனை


மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
71

காலை, மதியம், மாலை என்னும் மூன்று மண்டல காலங்களிலும் அரனை அரவணைத்து உடன் வைத்துக்கொள்ளுதல் என்பது சிவனுக்கு அருச்சனைப் பூசை செய்யும் முறையாகும். 


ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து
பூசனைசெய் துள்ளே புணர்.
72

இருக்கையில் அமர்ந்துகொண்டு சிவனை அருச்சனை செய்து, சிவனுக்குப் பூ போட்டுப் பூசை செய்து அவனைப் புணரவேண்டும். 


உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.
73

உள்ளம் இருக்கையா, உணர்வு சிவலிங்கமா இருத்திக்கொண்டு அருச்சிக்கும் முறைமையைத் தெளிவுடையோர் பின்பற்றுவர். 


ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.
74

மூலாதாரத்தில் சிவனுருவம் இருப்பினை உணர்ந்து மனம மாறுபாடு இல்லாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும். 


பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு.
75

புணர்ச்சியின்போது ஆணுறுப்பு பூரிப்பது போலவும், பெண்ணுறுப்பு பாரித்து விரிவது போலவும் சிவனுரு இலிங்கத்தை அருச்சிக்க வேண்டும். 


விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு.
76

விளக்கினைத் தூண்டுவது போல சிந்தையைத் தூண்டிக்கொண்டு பெய்ப்பொருளை மனம் அங்குமிங்கும் ஆடாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும். 


பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
77

தன் உடலாகிய பிண்டத்துக்குள்ளே பெயராமல் இருக்கும் இறைவனைக் கண்டு அருச்சிக்க வேண்டும். 


மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு.
78

மந்திரங்கள் எல்லாவற்றையும் மயக்கம் இல்லாமல் உள்ளத்தில் நினைத்துப் பார்த்து தன் அகக் கண் முன்னே நிற்கும் அரன் என்னும் சிவனை அருச்சிப்பதே முறைமை. 


பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.
79

பேராத கருத்தோடு பிண்டத்துக்கொள்ளே இறைவன் இருப்பை நினைத்துக்கொண்டே பூ போடும் ஆராதனை செய்ய வேண்டும். 


உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு.
80

மனத்துக்குள்ளே சுடர் விட்டு எரியும் சிவ-விளக்கை பொருத்திப் பார்த்துக்கொண்டே மென்மையோடு அருச்சிக்க வேண்டும். 


ஞானக்குறள் - 9. உள்ளுணர்வு


எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.
81

எண்ணமுடியாத ஊழிக் காலம் தவம் செய்து ஈசன் தனக்குள் இருக்கிறான் என்பதை உணர்வு கண்டுகொண்டது. 


பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.
82

பல ஊழிக் காலம் அந்த அரனோடு பழகி, அருச்சித்து, நல்ல உணர்வுகளை நலமாக இருப்புக் கொள்ளும் பேற்றினைப் பெற்றுள்ளேன். 


எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.
83

நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அரிய தவத்தால்தான் இந்த உணர்வு கைகூடும். 


முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.
84

முற்பிறவியில் முயன்று பெற்ற தவத்தால் இப்பிறவியில் இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன். 


காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.
85

உடம்பாகிய உருப்பொருள் உணர்ந்ததன் பயன்தான் ஓயாத இந்த உணர்வு கைவரப் பெற்றுள்ளேன். 


பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.
86

முந்தைய பிறவியின் பயனால் இந்தப் பிறவியில் தவம் செய்து இந்த உணர்வினைப் பெற்றுள்ளேன். 


பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.
87

இடம் பெயராமல் செய்த தவத்தின் பயன்தான் மறுபிறப்பு இல்லாத பேறு. ஆராய்ந்து உணர்ந்தால் இது புலப்படும். 


ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.
88

ஞான உணர்வை உடல் பெற்றுள்ளது. மோன உணர்வே அதன் பயன். 


ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.
89

ஆதியோடு கலந்து ஒன்றாகும் அறிவினைப் பெறுவதுதான் முறையாகச் செய்யும் தவத்தின் பேறு. 


காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.
90

நாம் போகும் சுடுகாடும் சிவன் இருக்கும் மலையும் கருத்தில் கொண்டு தவம் செய்தால் உணர்வின் பயனைப் பெறலாம். 


ஞானக்குறள் - 10. பத்தியுடைமை


பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலமது.
91

பத்தியோடு உள்ளத்தில் ஆர்வம் கொண்டு அரனை நோக்கினால் அது முத்திக்கு வேர். 


பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால்.
92

பலமுறை சிவன் மீது நேசம் வைத்துச் சிவ நினைவோடு பாடுதல், ஆடுதல் பத்தி. 


அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை.
93

சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி. 


பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத் தேடு.
94

பூ போட்டுப் பூசனை செய்து, புகழ்ந்து பாடி, மனம் நிறைவோடு, நேசம் கொண்டு ஈசனைத் தேடு. 


கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி.
95

மனக்கண்ணால் பார்த்து, உள்ளத்தில் ஊறும் காதலால் உற்று நோக்கினால், ஈசன் ஒளி நம்மை உண்டு ஆள்கொள்ளும். 


நல்லானப் பூசித்து நாதனென வுருகில்
நில்லதோ வீச னிலை.
96

நல்லவனுக்குப் பூசை செய்து ‘நாதன்’ என எண்ணி உள்ளம் உருகினால், ஈசன் நம்மிடம் நிலைகொள்வான். 


அடியார்க் கடியராயன் புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல்.
97

அடியவர்களுக்கு அடியவராய் அவர்மீது அன்பு கொண்டு உருகி, உள்ளம் படிந்து, அவரோடு உள்ளம் ஒன்றியிருக்கும்படிப் பார்த்துக்கொள். 


ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீ நினைந்துகொள
98

எல்லா உயிர்களையும் ஈசன் எனக் கருதி, நேசத்தோடு பழகவேண்டும். 


மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று.
99

உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் வேர்க்கும்படி விதிர்விதிர்த்து பொய்ம்மைக் கோலம் ஆகும்படி ஈசனைப் போற்று. 


செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல்.
100

உள்ள உறுதியோடும் அடக்கத்தோடும் செவ்விய முறையில் அரனை அறிந்துகொள்ள வேண்டும். 


ஞானக்குறள் - 11. அருள் பெறுதல்


அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.
101

இறையருள் இருந்தாலன்றி நெஞ்சில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம். 


இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளும் சிவசிந்தை யால்.
102

இறைவன் அருளால் மனத்திருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும். 


வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள்.
103

வாய்மையோடு பொய்யா மனத்தோடு வாழ்ந்தால் ஈசன் அருள் மாசற்ற தாய் உள்ளத்தோடு கிட்டும். 


ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம்.
104

ஒப்பிய உள்ளத்தோடு நிற்கின்ற சிவன் அருளைப் பெற்றுவிட்டால் அந்த நெஞ்சு ஆனந்த மயமாகும். 


உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னுமருள் பெற்றக் கால்.
105

இறையருளே நிலைபெற்ற அருள். அதனைப் பெற்றுவிட்டால் நினைத்ததைப் புகழத்தக்க வகையில் செய்து முடிக்கலாம். 


எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லையருள் பெற்றக் கால்.
106

ஈசனின் பழமையான அருளைப் பெற்றுவிட்டால் எல்லாப் பொருளையும் இனிதே நிறைவேற்றலாம். 


சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும்.
107

சிவனருள் சிந்தையில் நிற்கும். அதனைப் பெற்றுவிட்டால் கட்டுப்பாடுகளும், ஆசையும் அறுந்துவிடும். 


மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால்.
108

ஈசன் அருளைப் பெற்றுவிட்டால் மாசற்ற கோட்பாடு வானத்து மதியம் போல குளுமையாக ஒளி வீசும். 


ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான ஒளி.
109

ஆ ஆ என்று ஓதி அருனினைப் பெற்றவரிடம் அல்லது ஞான வெளிச்சம் தங்கி நிற்காது. 


ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும்.
110

தடையின்றிச் சிவனருள் பெற்றுவிட்டால் பேச்சொன்றும் இல்லாமல் இன்பம் விளையும். 


2. திருவருட்பால்

ஞானக்குறள் - 12. நினைப்புறுதல்




கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை.
111

குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
112

ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொரு ளேயாம்.
113

சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு.
114

அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து.
115

நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில்
முற்றுமவ னொளியே யாம்.
116

ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு.
117

இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம்.
118

மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவ மாம்.
119

வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற் கரிதாஞ் சிவம்.
120

ஞானக்குறள் - 13. தெரிந்து தெளிதல்


தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம்.
121

உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம்.
122

ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்.
123

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம்.
124

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம்.
125

ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி.
126

தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம்.
127

எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள்
நல்லுலக நாத னடி.
128

உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.
129

உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம்.
130

ஞானக்குறள் - 14. கலை ஞானம்


3சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது.
131

3அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு.
132

3அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு.
133

3ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம்.
134

3தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து.
135

3கூடகமான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து.
136

3வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.
137

3பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து.
138

3இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.
139

சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு.
140

ஞானக்குறள் - 15.உருவொன்றி நிற்றல்


எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.
141

பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.
142

கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு.
143

பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு
மழுத்தினா லீச னிலை.
144

தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது.
145

வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளே நிற்கு முணர்வு.
146

அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை.
147

மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு.
148

நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்குந் தானா மவன்.
149

ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.

150


ஞானக்குறள் - 16. முத்தி காண்டல்


மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது.
151

வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில்.
152

உருவ மொன்றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம்.
153

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது.
154

பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
155

அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம்.
156

துணிமுகத் துக்காதி யாத்துன் னறிவின்றி
அணிதா ரிரண்டு விரல்.
157

மயிர்முனை யிற்பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண் டங்காதி நிலை.
158

தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு.
159

உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு.

160

ஞானக்குறள் - 17. உருபாதீதம்


கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு.
161

பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு.
162

உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.
163

கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு.
164

அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு.
165

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.
166

குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.
167

பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.
168

பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றி யிரு.
169

ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.

170

ஞானக்குறள் - 18. பிறப்பறுதல்


தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
171

அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.
172

சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து.
173

உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம்.
174

நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது.
175

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம்.
176

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
177

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம்.
178

விகாரங்கெட மாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு.
179

சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு.

180

ஞானக்குறள் - 19.தூயவொளி காண்டல்


தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக் காற்றூய வொளி.
181

தெளிவாய தேசவிளக் கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம்.
182

மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும்.
183

பளிங்கு வலம்புரி பானிகர்த்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி.
184

சங்கு நிறம்போற் றவளவொளி காணில்
அங்கையி னெல்லியே யாகும்.
185

துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து.
186

மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே யாம்.
187

உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி.
188

பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி.
189

ஆதியொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதி யவனுருவு மாம்.

190

ஞானக்குறள் - 20. சதாசிவம்



பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
191

விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
192

ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம்.
193

வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்.
194

எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
195

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.
196

மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்குஞ் சிவம்.
197

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம்.
198

தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன்.
199

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
200


ஞானக்குறள் - 21. குருவழி


தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன்.
201

சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம்.
202

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம்.
203

தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.
204

நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற் றிருக்குஞ் சிவம்.
205

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
206

நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப்பிரி யாது சிவம்.
207

ஒன்றிலொன் றில்லாத மனமுடை யாருடல்
என்றுமொன் றாது சிவம்.
208

நாட்டமில் லாவிடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
209

பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
210

ஞானக்குறள் - 22. அங்கியில் பஞ்சு


அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில்
சங்கிக்க வேண்டாஞ் சிவம்.
211

மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம்.
212

நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்சலென் னாது சிவம்.
213

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன்.
214

தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான்.
215

அசபை யறிந்துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு.
216

இமையாத நாட்டத் திருந்துணர் வாருக்
கமையாத வானந்த மாம்.
217

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
218

மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும்.
219

சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து.
220

ஞானக்குறள் - 23. மெய்யகம்


மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி.
221

2கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு.
222

2உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங்
கண்டுகொள் காதல் மிகும்.
223

2உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன்.
224

2தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு.
225

2வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்.
226

2கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி.
227

2 ஆநந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.
228

2மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம்.
229

விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி.
230

ஞானக்குறள் - 24. கண்ணாடி


கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி.
231

3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை உடம்பு.
232

3நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.
233

3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு.
234

3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு.
235

3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன்.
236

3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு.
237

3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்
முற்று மழியா துடம்பு.
238

3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு.
239

சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.

240

ஞானக்குறள் - 25. சூனிய காலமறிதல்


நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணை யானாகு முடம்பு.
241

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்.
242

புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு.
243

அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டும் உடம்பு.
244

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு.
245

அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
246

தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை யுடம்பு.
247

தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு.
248

ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு.
249

பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு.

250

ஞானக்குறள் - 26. சிவயோக நிலை


அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்.
251

உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு.
252

மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து.
253

இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.
254

கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.
255

முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி.
256

ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல்.
257

வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று.
258

தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய்.
259

ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப்
பேதியா தோது பிணை.
260

3. தன்பால்

ஞானக்குறள் - 27. ஞான நிலை


தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை.
261

தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே
நிற்பது பேரொளி நில்.
262

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பிணை.
263

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது.
264

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.
265

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.
266

பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம்.
267

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக் கிலொன் றேயுள.
268

பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரநந்தி யாம்.

269

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.

270

ஞானக்குறள் - 28. ஞானம் பிரியாமை


பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம்.
271

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு.
272

வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும்.
273

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை.
274

குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு.
275

சுந்திரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம்.
276

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
277

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.
278

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.
279

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத் தனன்குரு பார்.
280

ஞானக்குறள் - 29. மெய்நெறி


செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.
281

பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.
282

இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.
283

குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன்.
284

காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு.
285

மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்.
286

எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
287

அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
288

அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக யுணர்.
289

அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி.
290


ஞானக்குறள் - 30. துரிய தரிசனம்


வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள.
291

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன்.
292

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண்.
293

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல்.
294

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான்.
295

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
296

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான்.
297

அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.

298

ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள்.
299

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.

300

ஞானக்குறள் - 31. உயர்ஞான தரிசனம்


கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா.
301

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம்.
302

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில்.
303

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி.
304

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்துபே ராது செயல்.
305

இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான்.
306

அரசறி யாம லவன்பே ருறைந்துத்
தரைதனை யாண்ட சமன்.
307

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். 
308

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப் பாமென்று கொள். 
309

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கில் பரமவை வீடு. 
310

Source:https://goo.gl/dWvdVA

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்