மூதுரை - ஔவையார்

வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. 


கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.


ஆடாத உடம்பும், பவளம் போன்று அழகிய செம்மேனியும் கொண்ட ஆனைமுகன் திருவடிகளில் பூக்கொண்டு சார்த்தி எப்போதும் சார்ந்திருப்பவர்க்கு வாயிலிருந்து நல்ல வாக்கு வரும். நல்ல மனம் உண்டாகும். மாமலராள் அருள்-பார்வை உண்டாகும். மலர் = தாமரை, வெண்டாமரை மேல் இருப்பவள் கலைமகள், செந்தாமரை மேல் இருப்பவள் கலைமகள, பொன்-தாமரை (பொற்றாமரை) மேல் இருப்பவள் மலைமகள், மூவரின் அருட்பார்வையையும் பெறலாம். 

நூல்



நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
1


தென்னைமரம் தன் கால்களில் நீரை உண்டுவிட்டுத் தலையால் இளநீரைத் தரும். அதுபோல ஒருவர் செய்த உதவி நன்றியாகத் தானே வந்து சேறும். என்று தருவார் என்று காத்திருக்கக் கூடாது. 

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
2


நெஞ்சில் ஈரம் உள்ள நல்லவர்க்கு உதவி செய்தால் அது அவர்களின் நெஞ்சில் கல்லில் பொளித்து எழுதிய எழுத்துப் போல அழியாமல் நிலைத்திருக்கும். நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உதவினால் அவர்கள் அதனைத் தண்ணீரில் எழுதும் எழுத்து எழுதும்போதே மறைந்துவிடுவது போல அப்போதே மறந்துவிடுவார்கள். 

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
3


வறுமை வந்துவிட்டால் எதையும் செய்யும் இளமைப் பருவமே துன்பப்படும். அளவில்லாத இன்பம் தரும் பொருள்களும் துன்பம் தரும் பொருள்களாக மாறிவிடும். சூடும் நாள் இல்லாதபோது பூத்துக் கிடக்கும் மலரால் என்ன பயன்? அதுபோல அனுபவிக்கும் ஆண் இல்லாத பெண்ணின் அழகால் என்ன பயன்? 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
4


காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலகமாட்டார்கள். நன்னட்பு இல்லாதவர் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெள்ளை நிறம் கொண்ட சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையுற்றுக் கெட்டுப்போனாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வர். 

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.
5


எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும்.

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.
6


கல்லால் ஆன தூணின் மேல் அது தாங்கமுடியாத அளவு பெரிய பாரத்தை ஏற்றினால் கற்றூணானது பிளந்து நொறுங்கிப் போகுமே அல்லாமல் வளைந்து கொடுக்காது. அரசனுக்காக உயிரையே தரும் பண்புள்ளவர்கள் அரசனின் பகைவரை எதிர்கொள்ளும்போது பணிந்துபோவார்களா? கற்றூண் போன்றவர்கள் அல்லவா? 

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
7


நீரில் பூத்திருக்கும் ஆம்பல் பூ நீர்மட்டத்திலேயே இருக்கும். (நீர் உயர்ந்தால் உயரும். நீர் தாழ்ந்தால் தாழும்.) அதுபோல ஒருவரது அறிவு அவர் கற்ற நூலினது அளவாக இருக்கும். அதுபோல முந்தைய பிறவியில் எந்த அளவு நற்பணி செய்து தவப்பயன் பெற்றிருக்கிறார்களோ அந்த அளவு இந்தப் பிறவியில் செல்வத்தின் அளவு இருக்கும். குணம் பெற்றெடுத்த தாய் தந்தையரைப் பொருத்தே இருக்கும். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
8


நல்லவர்களைக் காண்பதுவும் நல்லது. நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும். எனவே அதனைக் காதால் கேட்பதும் நல்லது. நல்லவர்களின் நற்குணங்களை பிறருக்கு எடுத்துச் சொல்வதும் நல்லது. நல்லவர்களோடு சேர்ந்திருப்பதும் நல்லது. 

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
9


தீயவர்களைக் கண்ணில் காண்பதுவும் தீது. யாவரும் விரும்பும் தன்மை இல்லாத தீயவர்களின் சொல்லைக் காதால் கேட்பதுவும் தீது. தீயவர் ஒருவரின் குணத்தை வேறொருவரிடம் சொல்வதும் தீது. தீயவரோடு நட்புக் கொண்டிருப்பதும் தீது. 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
10


நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான். 

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
11


நெல்லில் முளைப்பது அரிசியில் இருக்கும் பண்டுதான் (பரவிக்கிடக்கும் பழமை-மரபுக் கூறுதான்). என்றாலும் அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் உமி நீங்கிய அரிசி முளைக்காது. அதுபோல ஏற்றுக்கொண்ட ஒரு செயலைச் செய்வதற்கு எவ்வளவுதான் பேராற்றல் உடையவராக இருந்தாலும், செயலுக்கு உதவும் கருவி முதலானவற்றைச் செய்தளிப்போர் இல்லாமல் செயலை நிறைவேற்ற முடியாது. 

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.
12


தாழம்பூ பெரிய மடலாகப் பூத்திருக்கும். (அதன் மணத்தை எல்லாரும் விரும்புவதில்லை) மகிழம்பூ அளவில் சிறியது. இதன் மணம் நெடுந்தொலைவு வீசும். இதன் மணத்தை எல்லாரும் விரும்புவர். அதுபோல எவரையும் உடல் அளவைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. மேலும் ஒன்று. கடல் மிகப் பெரியது. அதன் நீர் குளிப்பதற்குக் கூடப் பயன்படாது. அதன் அருகில் தோண்டிய சிறு ஊற்றில் (ஊறலில்) வரும் நீர் பருகுவதற்குக் கூடப் பயன்படும். 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.
13


கவையாகப் பிரிந்து, கொம்புகளாக விரிந்து, காடுகளில் நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. பலரும் கூடியிருக்கும் மன்றத்தில் “படித்துச் சொல்” என்று நீட்டிய ஓலையை வாய்விட்டுப் படிக்காமலும், அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் குறிப்பினை அறிந்துகொள்ள மாட்டாமலும் நிற்பவன்தான் நல்ல மரம். கவை = கிளை, கொம்பு = கிளையில் வளரும் சிறுசிறு கொம்புகள். 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
14


காட்டிலே மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழிதன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்துகொண்டு, தன் பொலிவு இல்லாத சிறகுகளை விரித்துஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத ஒருவன் கற்றறிந்தவன் பாட்டைக் கேட்டுப் பழகிக்கொண்டு பாடுவது. (கற்றவன் பாடலுக்கு உரிய ஆழ்ந்த பொருளைச் சொல்ல முடியும். கல்லாதவன் சொல்லமுடியுமா) 

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.
15


மருத்துவன் வேங்கை வரிப்புலிக்கு மருத்துவம் பார்த்தான். குணம் பெற்ற புலி அதன் இயல்பால் அந்த மருத்துவனை அடித்துத் தின்றுவிட்டது. நன்னடத்தைப் பாங்குகளை அறியாத அற்பப் புத்து உடைய ஒருவனுக்கு உதவி செய்தால் அந்த மருத்துவன் அடைந்த நிலைதான் கிட்டும். கல்லின் மேல் விழுந்த மண்பாண்டம் போல, செய்த உதவி சின்னாப் பின்னம் ஆகிவிடும். 

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
16


தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும். 

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
17


நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார். 

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
18


பொன்னால் செய்த குடம் உடைந்துவிட்டால் பொன்னாகவே இருந்து மீண்டும் உதவும். அதுபோலச் சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் சீரியராகவே விளங்கி மீண்டும் உதவுவர். மண்ணால் செய்த குடம் உடைந்தால் மீண்டும் மண் ஆகுமா? ஆகாமல் உதவாத, மக்காத ஓடாக அல்லவா மாறிவிடும். அதுபோலச் சீரியர் அல்லாதவர் உடைந்துபோனால் மீண்டும் உதவமாட்டார். 

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.
19


ஆழமான கடலில் அளவற்ற நீர் இருக்கிறது. படி ஒன்றை அதில் அமுக்கி அமுக்கி மொண்டாலும் நாலு படி நீரை அந்தப் படியால் முகந்துகொள்ள முடியாது. அதுபோலத்தான் துய்க்கும் வாழ்க்கை அளவும் இருக்கும். அது விதியின் பயன். விதியின் அளவு. ஏராளமான செல்வம் இருந்தாலும் அத்தனையும் அனுபவிக்க முடியுமா? நல்ல கணவன் இருந்தாலும் அனுபவிக்க முடியுமா? 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
20


உடன் பிறந்தவர் மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சர்க்கரை-நோய் போன்ற சில வியாதிகள் நாம் பிறக்கும்போதே நம்முடன் சேர்ந்தே பிறந்து நம்மைக் கொல்கின்றன. நம்முடன் பிறக்காமல், பெரிய மலையில் எங்கோ பிறந்து வளர்ந்த மூலிகை, இடையிலே நம்மை வந்து தாக்கும் பிணியைப் போக்குகின்றன. இந்த மருந்து போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள். 

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
21


மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும். 

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
22


எந்தச் செயலும் ஒருவன் தலையில் எழுதியவாறே (nucleus-egg) நிகழும். மரபணுக்களின் பதிவில் உள்ளவாறே நிகழும். எண்ணிய செயல் நடக்கவில்லையே என்று வருந்திக்கொண்டிருக்கும் மடத்தனமான நெஞ்சமே! எண்ணிப்பார். நீ நீனைத்தபடி எல்லாச் செயலும் நடந்துவிடுமா? கற்பக மரம் விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள். ஒருவன் பிள்ளையார் பெற்றது போல் மாம்பழம் பெறவேண்டும் என்று எண்ணிக்கொண்டு கற்பக மரத்தடியில் அமர்ந்தான். ஆனால் அந்தக் கற்பக மரம் (தின்றதும் சாவும்) எட்டிப்பழத்தைக் கொடுத்தது. என்ன காரணம்? அவன் முன் பிறவியில் செய்த வினையின் பயன். 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.
23


பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீர் ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும். 

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
24


அன்னம் தாமரை பூக்கும் குளத்துக்குப் போய்ச் சேரும். அது போலக் கற்றாரைக் கற்றார் விரும்பி ஒன்றுசேர்வர். பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் முதுகாட்டிற்கு விரும்பிச் சென்று காக்கை பிணத்தை உண்ணும். அதுபோலக் கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்பிச் சென்று சேர்ந்துகொள்வார்கள். கற்பு = கற்றல். 

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
25



நாகப் பாம்பு தனக்குள் நஞ்சு இருப்பதைத் தெரிந்துகொண்டு, தன்னை மறைத்துக்கொண்டு வாழும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இருப்பவர்கள் வேளிப்படையாகப் பேசமாட்டார்கள். தண்ணீர்ப் பாம்புக்கு விடம் இல்லை. எனவே அது வெளிப்படையாக நீரில் மிதந்து திரியும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர் வெளிப்படையாகப் பெசுவர். நஞ்சு = விடம், கரவி = நெஞ்சில் வஞ்சகம். 

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
26


மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. 

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
27


படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம். அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம். வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம். கூற்றம் = சாகடிக்கும் தெய்வம். 

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?
28


மென்மையான சந்தனக் கட்டை தேய்ந்துபோன காலத்திலும் மணம் குறைவதில்லை. இது இயல்பு. வேம்பு, ஆத்தி, பனை – பூக்களைத் தாரில் அணியும் மூவேந்தர் தம் வருவாய் குன்றிச் செல்வத்தில் குறைந்த நிலை எய்தினாலும், பெருமிதம், கொடை மனப்பாங்கில் குறைவுபட மாட்டார்கள். இது இவர்கள் இயல்பு. கேட்டால் = கெடுதியால். 

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
29


செல்வப் பேற்றைத் திருமகள் என்னும் பெண்தெய்வமாக எண்ணி வழிபடுவர். அவள் ஒருவனிடம் வந்தால், சுற்றத்தார் எல்லாம் விரும்பிச் சூழ்ந்துகொண்டு அவனிடம் வருவர். வானளாவிய செல்வம் பெருகும். உடலில் நல்ல அழகு தோன்றும். உயர்ந்த குலத்தவர் என்று போற்றப்படுவான். திருமகள் அவனிடமிருந்து பிரிந்து செல்லும்போது இவை அனைத்தும் அவனிடமிருந்து போய்விடும். 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
30


அறிவுடையோர் யார்? சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார். மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். 

மூதுரை முற்றிற்று.

Source: https://goo.gl/w9fv3C

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்