முதுமொழிக் காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு
மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் பாடப்பெற்றது. பத்து அதிகாரங்களையும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து குறட்டழிசைகளையும் கொண்டது.அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறுவது.
கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.
பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.
தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.
செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை.
அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை.
நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து.
தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.
பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்.
செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.
ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.
ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.
ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.
ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.
சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.
ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.
சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.
ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.
ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர்.
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்.
மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்.
பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்.
அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்.
ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்.
நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்.
தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்.
தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்.
வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்.
சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது.
இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது
நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.
விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது.
செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.
பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.
ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.
அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.
இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.
தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்.
மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று.
மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.
பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்.
வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று.
தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று.
அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று.
தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று.
மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை.
செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை.
மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை.
தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.
ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை.
ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை.
புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.
இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை.
இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்.
கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.
காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.
மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.
பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.
பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.
பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.
மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.
பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது.
மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது.
குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.
ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது.
முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்பம் எளிது.
உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது.
பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது.
பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது.
நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது.
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்.
தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்.
பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்.
தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்.
மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்.
தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்.
மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்.
மதியாதார்முன் வெகுளும்வெகுட்சி வறுமையுறும்.
தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்.
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்.
ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்.
பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்.
வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்.
இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்.
துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்.
குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான்.
நூல்
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை |
கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை.
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் |
பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை |
தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்.
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை |
செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை.
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை |
இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று |
அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை.
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று |
நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று |
தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று |
பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்.
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று |
செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப |
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்.
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப |
ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்.
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப |
ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்.
14. கற்றது உடைமை காட்சியின் அறிப |
ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்.
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப |
ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்.
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப |
சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்.
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப |
ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்.
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப |
சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்.
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப |
ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்.
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப |
ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர்.
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார் |
கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்.
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார் |
மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்.
23. பெருமை உடையதன் அருமை பழியார் |
பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்.
24. அருமை யுடையதன் பெருமை பழியார் |
அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்.
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார் |
ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்.
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார் |
நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்.
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார் |
தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்.
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் |
தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்.
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார் |
வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்.
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார். |
சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது.
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது |
இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது |
நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது.
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது |
விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது.
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது |
செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது |
பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது.
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது |
ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது.
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது |
அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது |
இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது.
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது. |
தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது.
5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன் |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்.
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று |
மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று.
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று |
மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று.
44. சோராக் கையன் சொன்மலை யல்லன் |
பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்.
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன் |
வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்.
46. நேராமற் கற்றது கல்வி யன்று |
கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று.
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று |
தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று.
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று |
அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று.
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று |
தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று.
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று. |
மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை |
ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை.
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை |
செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை.
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை |
மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை.
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை |
மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை.
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை |
தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை.
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை |
ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை.
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை |
ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை.
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை |
புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை |
இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை.
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை |
இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை.
7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய் |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய் |
பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்.
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய் |
கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்.
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய் |
காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்.
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய் |
எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்.
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய் |
மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்.
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய் |
பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய் |
பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்.
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய் |
பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய். |
மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது |
பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது.
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது |
மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது.
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது |
குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது.
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது |
ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது.
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது |
முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்பம் எளிது.
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது |
உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது.
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது |
பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது.
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது |
பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது.
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது |
நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது.
9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று |
மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்.
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று |
தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்.
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று |
பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்.
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று |
தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்.
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று |
மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்.
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று |
தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்.
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று |
மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்.
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று |
மதியாதார்முன் வெகுளும்வெகுட்சி வறுமையுறும்.
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. |
தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான் |
ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான் |
ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்.
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் |
ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்.
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான் |
பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்.
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் |
வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான் |
அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்.
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான் |
இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்.
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான் |
துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்.
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான் |
குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான். |
காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான்.
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று.
கருத்துகள்
கருத்துரையிடுக