குழந்தைகளுக்கு நம்பிக்கை தருவோம்!
குடம்பை தனித்தொழிய புள்பறந்து அற்றேஉடம்போடு உயிர் இடை நட்பு'' முட்டைக்கும் பறவைக்கும் உள்ள சம்பந்தமே உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்கின்றார்
வள்ளுவர். இருப்பினும் அனைவரும் சொர்க்கம் சொல்லவே விரும்புகின்றார்கள். ஆனால் எவரும்சாவதற்கு விரும்புவதில்லை. அப்படி இருக்க பரீட்சையில் தோல்வி, படிக்க முடியவில்லை, படிப்பினால் மன அழுத்தம், ஆசிரியர் திட்டினார், ஆசிரியர் அடுத்தவர்கள் முன் அவமானப்படுத்தினார், பெற்றோர் அவமானப்படுத்தினார், விரும்பிய படிப்பில் சேர முடியவில்லை எனப் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை காணும் போது மனம் பதைக்கிறது.
பட்டாம்பூச்சிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு இரையாவதும், துாக்கணாங் குருவிக் கூட்டைப் போல் உத்திரத்தில் தொங்குவதையும் காணும் போது குலை நடுங்குகின்றது.
ஞானம் புகட்டுவோம் : ''உடைந்து போன மனிதர்களைச் சரிசெய்வது கடினம். ஆனால்
மன உறுதியுடைய குழந்தைகளை உருவாக்குவது எளிது” என்கின்றார் பிரட்ரிக் டோலன். ஆனால் நம் குழந்தைகளில் சிலர் உறுதியற்றவர்களாக இருக்கின்றார்களே? குழந்தைகள் விருப்பப்படி வேடிக்கையாக கல்வி கற்றுக் கொடுக்கிறோம். ஆம்! நாம் குழந்தைகளிடம்
வேடிக்கை காட்டுகிறோம். ஆனால் வேடிக்கை செயல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை ஞானத்தை புகட்ட மறந்துவிட்டோம். வேடிக்கை செயல்களுக்குப் பின்னால் உள்ள ஞானம் முக்கியமானது.குள்ள சாமி என்பவர் வேடிக்கையான ஞானி. ஒருமுறை அவர் அழுக்கு மூடையைச் சுமந்து கொண்டே திரிந்தார். பார்க்கும் இடமெல்லாம் அப்படியே அலைந்தார். மாதக்கணக்கில்
திரிந்தார். இதை பார்த்த அனைவரும் திகைத்தனர்; எள்ளி நகையாடினர். அவரை அணுகி ஒரு பெரியவர் கேட்டார். “ஏன் அழுக்கு மூடையை சுமந்து கொண்டே திரிகின்றீர்கள்?”. அதற்கு சிரித்த குள்ள சாமி “அழுக்கு மூடையை.. நான் வெளியே சுமந்து திரிகின்றேன்.நீங்களோ உள்ளே சுமந்து திரிகின்றீர்கள்!” என்றார். கற்றலில் வேடிக்கை கொண்டு வந்தோம். ஆனால் வேடிக்கை செயல்களின் வழி ஞானத்தை உண்மையை கற்றுக் கொடுக்கவில்லையே!
கீதை சொல்வது என்ன : படிக்க கற்றுக் கொடுத்தோம்.மதிப்பெண் எடுக்க கற்றுக்
கொடுத்தோம். அதற்கு அப்பால் எதையும் கற்றுக் கொடுக்க வில்லையே! விளையாட்டு வேளை கூட படிப்பாகத்தானே இருந்தது.கல்வி என்பது மதிப்பெண் சார்ந்து மட்டுமே இருந்தது. மதிப்பெண்ணுக்கு அப்பால் உள்ள உண்மையை கற்றுக் கொடுக்க வில்லை. “செயல் என்பது உன் கையில். அதைச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் உன் விருப்பம். அப்படி ஒரு செயலை நீ செய்தால் அதற்கான எதிர் விளைவு நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். ஒரு காரியத்தை செய்வதில் லாபம் உண்டெனில் அதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதில் நன்மை உண்டெனில் தீமையும் இருக்க வாய்ப்பு உண்டு. இரண்டையும் ஏற்கத் தயாராக இரு” என் கின்றது கீதை. அதாவது கடமையைச் செய். பலனில் பற்று வையாதே.“உறங்குவது போலும் சாக்காடு;
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”சாவு துாக்கத்தையும் பிறப்பு துாங்கி விழிப்பதையும் போன்றது என்கின்றார் வள்ளுவர். நிலையாமை குறித்த அறிவை வளர்க்க தவறி விட்டோம். குழந்தைகளின் மனதை புரிந்து கொள்ளத் தவறி விட்டோம். குழந்தைகளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டோம். புத்தகம் மட்டுமே அறிவு என நம்பி விட்டோம். தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் பக்குவத்தை வளர்க்க தவறிவிட்டோம். மரணம் குறித்த முடிவில்லா
கேள்விகளுக்கு ஊகமாகவோ அனுமானமாகவோ பதில் கூறியிருந்தால் குழந்தைகள்
மனதில் தற்கொலை எண்ணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் பாட்டிக் கதைகளைக் கூற மறந்துவிட்டோம்.
ஆன்மிக கதை : ஆன்மாவை கதைகள் வாயிலாகவே பலப்படுத்த முடியும்.இங்கே பலப்படுத்த ஆன்மிக கதைகள் பல உண்டு. கூறினோமா?பாம்பு சீண்டி உயிரிழந்த அபூதி அடிகளாரின் மகனைப் பதிகம் பாடி உயிரித்தெழ வைத்த திருநாவுக்கரசர் கதை. தேவலோகத்திலிருந்து
பாரிஜாத மலரைக் கொண்டு வருவதற்காகக் கிளியின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த அருணகிரி நாதர் கதை. தான் மரித்த மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார் என்கின்ற பைபிள் கதை. அர்ஜூனனுக்கு ஆன்மா அழிவற்றது என்று போதிக்கின்ற ஸ்ரீகிருஷ்ணனின் கதை. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் கதை. முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்த பாரியின் கதை. புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுக்க முன் வந்த சிபி சக்கரவர்த்தியின் கதை. (தன்னுயிர் போன்று பிற உயிர்களை மதித்தல் வேண்டும் என கூறும் பல கதைகள்) இப்படிப்பட்ட கதைகள் வழியாக குழந்தைகளின் மனதை ஓரளவாவது நிம்மதியாக வைத்திருக்க தவறி விட்டோம்.“குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் இருந்தே சிரிக்க கற்று கொள்கின்றார்கள்” என்கின்றார் சினிஷி சுசூகி. ஆம்! குழந்தைகளிடம் தினமும் பேசுங்கள். அவர்களின் வகுப்பு நிகழ்வை பகிர்ந்து கொள்ளச்செய்யுங்கள். குழந்தைகளைத் தனிமையாக இருக்க விடாதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதியுங்கள். பெற்றோர் இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்கவும். குழந்தைகளுக்கு வெளிவுலக
தொடர்ப்பை ஏற்படுத்தி தரவும். அவர்களின் ஆளுமைத்திறன் வளர உதவுங்கள்.
உறவுகளை பேணுவோம் : குழந்தைகளை விரக்தி இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏமாற்றங் களைத் தாங்கி கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துங்கள். உறவுகளுடன் உறவை பேண அனுமதியுங்கள். உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கவும், நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடவும் அனுமதிக்க வேண்டும். பள்ளித்தேர்வுகள் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடப்பதல்ல
என்பதை உணர்த்த வேண்டும். இந்த தேர்வில் தவறி விட்டால் அடுத்த தேர்வில் எழுதி வெற்றி பெறலாம் எனக் கூறவும். அவமானங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும்.தற்கொலை எண்ணம் உடைய குழந்தை, தற்கொலை குறித்து நண்பர்களிடம் பேசி இருக்க வாய்ப்பு உண்டு. சாகப் போகின்றேன் என்று தொலைப்பேசியில் உரையாடலாம். விரக்தி
யில் சாவைப் பற்றி பேசலாம். துாக்கம் இன்றி அவதிப்படலாம்.பள்ளிக்கு செல்லாமல் ஊர்
சுற்றலாம். தலைவலி காய்ச்சல்எனக் கூறி பள்ளிக்கு செல்வதை தவிர்க்கலாம். தனிமையை
விரும்பலாம். யாருடனும் பேசாமல் தன்னைத்தானே சிறைப்படுத்தி கொள்ளலாம். நண்பர்களை தவிர்க்கலாம் என உளவியலாளர்கள் தற்கொலைக்கான அறிகுறிகளைப்
பட்டியலிடுகின்றனர்.“நான் இறக்கும் போது மலர்களை அனுப்பாதீர்கள். நீங்கள் விரும்பினால் நான் உயிருடன் இருக்கும் போதே அதனை அனுப்புங்கள்” என்கின்றார் பிரெய்ன் காப். குழந்தைகள் வாழும் போதே அவர்கள் விருப்பப்படி செயல்பட அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு
மன அழுத்தம் கொடுப்பதை தவிர்ப்போம்! நெருக்கடிகள் கொடுக்காமல் இருப்போம்.
வெற்றியாளர்கள் எல்லாம் தோல்வியில் இருந்தே சாதனைப் படைத்தவர்கள் என்ற கதைகளைக் கூறுவோம். மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் விதைப்போம்.
-க.சரவணன்
தலைமை ஆசிரியர்
டாக்டர் டி. திருஞானம்துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263
Source: http://www.dinamalar.com/special_detail.asp?id=2089696
கருத்துகள்
கருத்துரையிடுக