எண்ணங்கள் தான் வாழ்க்கை
டாக்டர். ஆர்.கார்த்திகேயன்
கலைஞர்கள் வறியவர்கள். செல்வம் சேர்ப்பதில் தோற்றுப் போனவர்கள். கலை விலை போகாது. நிஜமான கலை என்றால் அது வணிகத்திற்கு எதிரானது என்பது போன்ற கற்பிதங்கள் இங்கு புழக்கத்தில் உள்ளவை. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதிலும்.
தான் மடிந்து கலையை வாழவைத்த கலைஞர்களை காவியப்படுத்தி இருக்கிறோம். தோல்வியில் சுகம் கண்டிருக்கிறோம். ஒரு masochistic pleasure-ல் திளைக்கிறோம்.
சில நேரங்களில் அது எல்லை மீறி, வணிக வெற்றி பெற்றதாலேயே சில கலைஞர்களை உதாசீனப்படுத்தியும் இருக்கிறோம். பணம் பண்ணுபவன் எப்படி கலைஞன் ஆக முடியும்? ‘புரிகிற மாதிரி எழுதினால் அதை எப்படி சிறந்த இலக்கியம் என்று ஒப்புக்கொள்வது’ என்பது போல இது!
ஆனால் கலைஞனாகவும் இயங்கி செல்வமும் சேர்க்க முடியும் என்பதை பலர் நிரூபித்தும் அதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் உள்ளது. கலையை விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை செய்யணும் என்றாலே உடனே நாலாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் கொட்டும்: அதுல பணம் பண்ண முடியாது. பிராக்டிகலா யோசி. இது வாழ்க்கைக்கு உதவாது. லட்சியம் எல்லாம் பேச நல்லா இருக்கும். முதல்ல செட்டிலாக ஒரு வேலையை பிடிச்சிக்கோ. இதெல்லாம் எல்லாம் முடிஞ்ச பிறகு வெச்சுக்கோ.
கலை என்று இல்லை. மனதுக்கு பிடித்த எந்த வேலையும் (ஓ! அது தான் கலையோ?) ஆசைப்பட்டு செய்து, செல்வம் சேர்த்து சந்தோஷமாய் வாழலாம் என்கிறார் மார்க் ஆலன் The Millionaire Course புத்தகத்தில்.
ஒரு கலைஞனாய் வாழ்க்கையை வாழ தீர்மானித்து, பிறகு ஆன்மீகத் தேடலில் சில வருடங்கள் செலவிட்டு, எழுத்தாளனாய், பதிப்பாளனாய், வியாபாரியாய் அவதாரமெடுத்ததோடு, கலைஞனாய் தான் வேண்டுவன யாவும் பெற்ற கதை மார்க் ஆலனுடையது. அவர் எழுதிய இந்த புத்தகம் பணக்காரன் ஆவது எப்படி என்று சொல்வதை விட உங்கள் கனவுகளை மெய்ப்படுத்துவது எப்படி என்று சொல்கிறது. தலைப்பு ஒரு விற்பனை உத்தி தான்.
12 பாடங்கள். ஒவ்வொன்றும் நடைமுறைப்படுத்தக்கூடியவை. மிக எளிமையான மொழி. சொல்ல வருகிற விஷயத்தை விளக்க பைபிள், கீதை, ரமணர் உரையிலிருந்து ஸ்டீபன் கோவே, ஷக்தி கவைன், எகார்ட் டாலெ, தீபக் சோப்ரா என்று மிகச்சிலரின் வரிகளை சரியான இடங்களில் சேர்க்கிறார். தன் சொந்த வரிகளிலும் முக்கிய விஷயங்களை Keys என்று குறிப்பிட்டு மனதில் பதிய வைக்கிறார். மொத்தம் 163 சாவிகள். இந்த வடிவமைப்பு வாசிப்பை எளிமைப்படுத்துவதுடன் சுவாரசியப்படுத்துகிறது.
12 பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.
உங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஆதர்ஷ காட்சியை மனதில் பதிவு செய்யுங்கள். தன்னம்பிக்கை வார்த்தைகளில் அவற்றை உருவேற்றுங்கள். வெறும் கனவாக இல்லாமல், யதார்த்தம் போல நுணுக்கமாக காட்சிப்படுத்துங்கள்.
* உங்கள் திட்டத்தை மிக எளிமையாக எழுதுங்கள். யோசிப்பது நடக்காது. உட்கார்ந்து விரிவாக எழுதுவது நடக்கும்.
* உங்கள் தொழில் / வேலை எது என்பதையும் அதற்கான சரியான நோக்கத்தையும் தெளிவுபடுத்துங்கள்.
* உங்கள் நெருக்கடிகளில் தென்படும் அனுகூலங்களை பட்டியல் இடுங்கள். இவை தான் நம்பிக்கை தரும் பாடங்கள். வெற்றிக்கான சிந்தனைகள்.
* கூட்டணிதான் வெற்றி பெறும். எல்லாரிடமும் கூடி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்.
* நல்ல திட்டமும் வெளிப்படையான நிர்வாகமும் நெருக்கடிகளைக் குறைக்கும். நெருக்கடிகள் குறையும்போது தான் அந்த சக்தியை ஆக்கத்திற்கு செலவிட முடியும்.
* மாறுதல்களை நேசியுங்கள்.
* உங்கள் ஆதார நம்பிக்கைகளை அடிக்கடி ஆராயுங்கள். தேவைப்படும்பொழுது அவற்றை மாற்றத் தயங்காதீர்கள்.
* அளவற்ற, குறையா செல்வத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப அது என்றும் கிட்டும் என்று நம்புங்கள்.
* கொடுப்பதில் அளவு வேண்டாம். கொடுப்பதே பெருகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள்.
* ஆன்மிக தேடல் உதவும். பிரார்த்தனையும் தியானமும் கை கொடுக்கும்.
* பிடித்ததை செய்யுங்கள். வெற்றி கிட்டும். உங்களுக்கும் உலகத்திற்கும்.
இவை பொது அறிவுரைகள் போல தோன்றினாலும் ஒவ்வொரு பாடமும் ஒரு அறிவியல் விளக்கப் பாடம் போல சொல்லப்படுகிறது.
செல்வம் மனப்பான்மை சார்ந்தது என்பதைச் சொல்லும் புத்தகங்கள் புதிதல்ல. நெப்போலியன் ஹில் இதன் பிதாமகர். செல்வந்தர் ஒவ்வொருவராய் பேட்டி கண்டு அவர்களின் எண்ணங்கள். வாழ்க்கை முறைகள், முடிவு எடுக்கும் திறன்கள் போன்ற உளவியல் சமாச்சாரங்களை எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதினார். அது பல வெள்ள மடைகளைத் திறந்து விட்டது.
இதற்கும் முன்னர் நம் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கை என எழுதி ஆங்கில “சுய உதவி” இலக்கியத்திற்கு வித்திட்டவர் ஜேம்ஸ் ஆலன்.
(இவர் இந்த நூலாசிரியர் மார்க் ஆலனுக்கு உறவினர் அல்ல!)
1904-ல் As a Man Thinketh என்று அவர் எழுதிய புத்தகத்தின் தாக்கம் இல்லாமல் இது வரை ஒருவரும் எழுதவில்லை. இந்த புத்தகமும் அதற்கு விதி விலக்கில்லை.
ஆனால் இந்த புத்தகத்தை நான் பரிந்துரை செய்யக் காரணம் இதன் தொனி. ஒரு நண்பனின் குரல் போல ஒலிப்பது. பிரசங்கம் இல்லை. பாசாங்கு இல்லை. சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் வலு சேர்க்கின்றன. இந்த பாடங்களால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் என அவர் சொல்லும் விஷயங்கள் யாவும் நமபத்தகுந்தவை.
அதுபோல வடிவமைப்பும் விற்பனை உத்திகள் கொண்ட மொழியும் ஒவ்வொரு எழுத்தாளனும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியவை. யாருக்கு இல்லை பணம் பண்ணும் ஆசை? பிடித்ததை ஆசையுடன் செய்து அதில் வசதியும் புகழும் செல்வமும் வந்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்? எம். எஃப். ஹுசைனும், அமீர்கானும், விக்ரம் சேத்தும், பிரணாய் ராயும், டெண்டுல்கரும், ஏ.ஆர். ரஹ்மானும் கலை, காசு இரண்டிலும் சாதிக்கவில்லையா?
மார்க் ஆலனாலும் இவர்களாலும் முடிந்தது உங்களாலும் என்னாலும் முடியாதா என்ன?
Source: https://goo.gl/CmUcGj
கருத்துகள்
கருத்துரையிடுக