சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா..? கீரைக்கு இணையான சத்து இதில் இருக்கு..!
உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது முதல் PCOS, செரிமானக் கோளாறுகளை சரி செய்வது வரை சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஒரு மேஜிக் போல செயல்படுகிறது
அதிக கலோரிகள், வாயு கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிழங்கு வகைகள் ஏற்படுத்தும் என்ற காரணங்களால் கிழங்கு வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், கிழங்கு வகைகளில் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. அவற்றில், சக்கரைவள்ளிக்கிழங்கு சத்து நிறைந்த கிழங்கு வகையாகும்.
உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது முதல் PCOS, செரிமானக் கோளாறுகளை சரி செய்வது வரை சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஒரு மேஜிக் போல செயல்படுகிறது என்று பிரபலங்களின் ஊட்டச்சத்து ஆலோசகரான ருஜுதா த்விவேகர் பரிந்துரைத்துள்ளார்.
நம் நாட்டில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காய்கறிகள் பழங்கள் மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களும் அதிகமாக விளையும். குளிர்காலத்தில் நோய் தடுப்பு சக்தி இயல்பாகவே குறைந்து காணப்படும். அதற்கு தீர்வாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுப்படுத்தும் உணவுகளான பாலக்கீரை, பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல்லி போன்ற பல்வேறு உணவுகளும் குளிர் காலத்தில்தான் அதிகமாக விளையும். இவற்றை எல்லாம் குளிர்கால உணவுகள் என்றே கூறலாம்.
நம் நாட்டின் பொங்கல் பண்டிகையில் மிகவும் முக்கியமாக இடம்பெறக்கூடிய காய்கறி வகைகளில் ஒன்றான சர்க்கரைவள்ளிக்கிழங்கு குளிர்காலத்தில்தான் அதிகமாக விளைகிறது. வெள்ளை, க்ரீம், ஆரஞ்சு, பிங்க் நிறம் என்று பலவகையான நிறங்களில், பல்வேறு சுவையில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உலகம் முழுவதும் விளைகிறது. வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சருமப் பாதுகாப்பு மற்றும் நோய்த்தொற்று எதிர்ப்பு : வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலிடத்தில் இருக்கிறது. உங்கள் பார்வை, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எல்லா வகையான நோய் தொற்றுகளையும் எதிர்த்து போராடி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
கரோட்டினாய்டு : கேரட்டுகளில் மட்டுமே கரோட்டினாய்டு இருக்கும் என்று பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது. ஆனால் கேரட்டில் இருப்பது போலவே சக்கரவள்ளிக்கிழங்கிலும் கரோட்டினாய்டு அதிகமாக இருக்கிறது. மேலும், இது ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கிழங்கு வகையாகும். எனவே, செல்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து, உடலில் ஏற்படும் அழற்சியையும் தவிர்க்கிறது.
குறைந்த GI கொண்ட உணவு : நீரிழயு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். ஆனால், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடக்கூடிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கிறது. மற்ற உணவுகளை விட இதில் குறைந்த GI இருப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது.
நார்ச்சத்து நிறைந்த கிழங்கு : கீரை வகைகளில் இருப்பதுபோல சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
உடனடி ஆற்றல் தரும் : நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு இன்ஸ்டன்ட் ஆற்றல் தரும். தினமும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான தின்பண்டமாக சாப்பிட்டு வரலாம்.
செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு : வயிறு உப்பசம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கும் சக்கரவள்ளி கிழங்கு ஒரு தீர்வாக அமைகிறது.
Source: https://go.ly/mpZCs
கருத்துகள்
கருத்துரையிடுக