'ஜெயிப்பது இருக்கட்டும்... முதலில் களத்தில் இறங்குங்கள்'- ஒரு அனுபவக் கதை! #MotivationStory
ஒரு நாட்டில் அரசன் ஒருவன் நல்லாட்சி செய்து வந்தான். மக்கள் செல்வச் செழிப்புடனும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர். அமைச்சர்கள் அரசனுக்குச் சரியான முறையில் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அவற்றைக் களைய ஆர்வம் காட்டினர். அரசனுக்கு ஒரே ஒரு மனக்குறை. ஆண் வாரிசு இல்லை. முதுமையை நெருங்க நெருங்க அவனுக்குள் கவலைகள் வேர்விடத் தொடங்கின. தனக்குப் பிறகு, நாட்டை ஆள தீரமிக்க ஒருவன் தேவை என்பதை உணர்ந்தார். அதற்காக, தனது அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை செய்தார்.
`ஒரு போட்டி வைத்து, இளவரசரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றார்கள் அமைச்சர்கள். அதன்படி, `ஒரு சிறிய குளத்தை வெட்டி, அதில் விஷ ஜந்துக்களைப் போட வேண்டும். அந்தக் குளத்தில் குதித்து, யார் ஒருவர் நீந்தி மேலே வருகிறாரோ அவரே நம் இளவரசர். அரசர் அவருக்கு மகளை மணம் முடித்துத் தந்து அரசப் பட்டத்தையும் சூட்டுவார்’ என்றும் போட்டிக்கான விதிகளை வகுத்தனர். அரசனும் அவர்களின் ஆலோசனையை ஏற்றார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. எல்லா நாடுகளுக்கும் அறிவிப்பு ஓலையை அனுப்பி வைத்தார் அரசர்.
அரசனின் மகள் பேரழகி. அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் பல நாட்டு இளவரசர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பு அவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அரசர் வைத்துள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளதாக, அவர்களும் பதில் ஓலையை அனுப்பி வைத்தனர்.
போட்டிக்கான நாளும் வந்தது. ஒரு பெரிய மைதானத்தில் நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய புதிய இளவரசரைக் காண்பதற்காக ஆவலோடு திரண்டிருந்தனர். அந்த மைதானத்தின் நடுவே சுமார் 600 அடி நீளத்துக்கும் 500 அடி அகலத்துக்கும் 100 அடி ஆழத்திற்குப் பெரிய அளவில் குளம் வெட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் தண்ணீர் நிரப்பி, விஷ ஜந்துக்கள் விடப்பட்டிருந்தன. எது கிடைத்தாலும் அவற்றை ஒரேயடியாக விழுங்கிவிடக் கூடிய முதலைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருந்தன. மக்கள் அந்த ஜந்துக்களைப் பார்த்து பயந்தனர்.
அரசனும் அரசியும் அவர்களது மகளும் மைதானத்தின் முன்பக்கம் போடப்பட்டிருந்த மேடையின் மீது உட்கார்ந்திருந்தனர். அமைச்சர்களுடன் உடன் இருந்தனர். புதிய இளவரசருக்கான கிரீடம் நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டு, பட்டுத் துணி ஒன்றின் மீது எல்லோரது பார்வையும் படும் வகையில் உயரமாக அமைக்கப்பட்ட தூண் ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்தது.
தங்களது படை பரிவாரங்களோடு இளவரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு மைதானத்துக்கு வந்தனர். பலர் குளத்தில் பசியோடு அலையும் விஷ ஜந்துக்களைப் போட்டு வைத்திருப்பதை அறிந்துகொண்டு, பத்தடி தூரத்துக்கு முன்னாலே யு-டர்ன் போட்டுத் திரும்பி ஓடினர். அரசருக்கு மேலும் கவலையாகிவிட்டது.
திடீரென மக்கள் ஆராவாரத்துடன் சத்தம் எழுப்பினர். அரசனும் அரசியும் நிமிர்ந்து மக்களைப் பார்த்தனர். ஒருவன் மட்டும் பள்ளத்தை நோக்கி, முன்னால் வந்து நின்றான். அடுத்து, அவன் பள்ளத்தில் இறங்கியே ஆக வேண்டும். மக்கள் `முன்னேறிச் செல்லுங்கள்... முன்னேறிச் செல்லுங்கள்' என்று கோஷமிட்டனர். வேறு வழியே இல்லை. அவன் பள்ளத்தில் குதித்தே ஆக வேண்டும். அவன் அடுத்த அடியை எடுத்து, வைப்பதற்குள், அரசர் `அப்படியே நில்...’ என்று கட்டளையிட்டார்.
எல்லோரும் அமைதியாகி விட்டனர். `அரசருக்கு என்னாச்சு... போட்டியை எதற்காக நிறுத்தச் சொல்கிறார்' என்று அமைச்சர்களும் மக்களும் குழம்பினர். `போட்டி முடிந்துவிட்டது... நமக்கு இளவரசர் கிடைத்துவிட்டார்’ என்றார் அரசர்.
அரசிக்கு கோபம்... `போட்டியில் வெற்றிபெறுவதற்கு முன்னரே எப்படி அவர்தான் நம் இளவரசன் என்று முடிவு செய்தீர்கள்?’ என்று கேட்டாள். `போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல... பங்கேற்பதுதான் முக்கியம். எல்லோரும், பங்கேற்பதற்கு முன்னரே ஓடிவிட்டனர். ஆனால், தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்கேற்றதாலே அவரைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குத் தெரியும். அந்தப் பள்ளத்தில் விழுந்தால் ஒருவர் உயிரும் மிஞ்சாது’ என்றார். அரசி, அவரின் விவேகத்தைக் கண்டு வாய்பிளந்து நின்றாள்.
நீதி : போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டும்!
Source: https://go.ly/8DjGA
கருத்துகள்
கருத்துரையிடுக