ஹைப்போடென்ஷன் என்றால் என்ன..? இதை இயற்கையாக கட்டுப்படுத்துவது எப்படி.!!
Hypotension : பொதுவான நம்பிக்கைக்கு மாறாக குறைந்த சோடியம் உணவுகள் ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ள அனைவருக்கும் ஏற்றது அல்ல.
நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் பற்றி தெரிந்திருந்தாலும் கூட, குறைந்த ரத்த அழுத்தம் எனப்படும் ஹைப்போ டென்ஷன் (Hypotension) பற்றி தெரியாமல் இருக்கலாம். ஹைப்போடென்ஷன் பொதுவாக குறைந்த ரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
தமனிகளில் ரத்த அழுத்தம் அசாதாரணமாக குறைவாக இருக்கும் ஒரு நிலை தான் ஹைப்போ டென்ஷன் ஆகும். லோ பிளட் பிரஷரின் விளைவாகவும் பல தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறைந்த ரத்த அழுத்தம் இன்று பலர் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.
குறைந்த ரத்த அழுத்தமானது 90/60 mm/Hg-க்கு குறைவாக இருக்கும் ரத்த அழுத்தமாக வரையறுக்கப்படுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் கொண்ட பலருக்கு அறிகுறிகள் எதுவும் சில நேரங்களில் இருக்காது. ஆனால் அறிகுறிகள் வெளிப்படும் போது தலைசுற்றல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பல தொந்தரவு அறிகுறிகள் ஏற்படும். சில சூழ்நிலைகளில் ஹைப்போ டென்ஷன் ஆபத்தானது. எனவே முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியமானது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களில் பலருக்கு தங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க மருந்துகள் அல்லது பிற மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படாது. என்றாலும் மறுபுறம் போதுமான ஓய்வு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும் இயற்கை முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்தல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
கூடுதல் உப்பு..
பொதுவான நம்பிக்கைக்கு மாறாக குறைந்த சோடியம் உணவுகள் ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ள அனைவருக்கும் ஏற்றது அல்ல. குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ள நபர்கள் தங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உப்பு உட்கொள்ளலை படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யலாம்.
மது பானங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்..
ரத்த அழுத்தத்தை ஆல்கஹால் மேலும் குறைக்கும் என்பதால், ஹைப்போடென்ஷன் சிக்கல் உள்ளவர்கள் அதிக அளவு ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நிறைய தண்ணீர்..
அதிக அளவு தண்ணீர் குடிப்பது ரத்தத்தின் அளவை அதிகரித்து குறைந்த ரத்த அழுத்தத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றை குறைக்க உதவும். தவிர உடல் டிஹைட்ரேஷனாவதை தடுக்கவும் உதவுகிறது.
கால் மேல் கால் போடலாம்..
உட்கார்ந்திருக்கும் போது கால் மேல் கால் போட்டு உட்காருவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது செட்டாகாது என்றாலும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த சிறிய முயற்சி அவர்களின் ரத்த அழுத்த அளவை அதிகரிக்க உதவும்.
பிரித்து உண்ணலாம்..
ஒரே வேளையில் அதிக உணவை சாப்பிடுவதை விட சீரான இடைவெளியில் அவ்வப்போது உணவுகளை பிரித்து பிரித்து சாப்பிடுவது குறைந்த ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சிறப்பாக உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வழக்கமாக சாப்பிடுவதை போல இல்லாமல் ஒரு நாளைக்கு சிறிய அளவில் 5 அல்லது 6 முறை உணவுகளை பிரித்து உண்பது ரத்த அழுத்த வீழ்ச்சியை பெரிதும் குறைக்கின்றன.
Source: https://go.ly/Z1J6x
கருத்துகள்
கருத்துரையிடுக