’நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.
கோடைக் காலம் என்பது லெமனேட்கள், ஜில்லென்ற பழரசங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களையும் அதிகமாக உட்கொள்ளும் பருவமாகும். ஒரு சில இடங்களில் கோடைக் காலம் கொடுமையான சுட்டெரிக்கும் காலமாக மாறும் போது உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பல இடங்களில் வறட்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மக்கள் அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் சன்பர்ன் எனப்படும் சரும பாதிப்பு மற்றும் உடலில் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சென்ட்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன்) கூற்றுப்படி, 1999 மற்றும் 2010 க்கு இடையில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் 7,415 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் உடலில் நீர்ச்சத்து இருப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது என்பதைக் குறிக்கிறது.
ஆனால், தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா? இதற்கான பதில் ஆம் & இல்லை. வெறும் தண்ணீர் குடித்து மட்டுமே உடல் நீர்ச்சத்து தேவையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதலாக நிறைய வழிகளைப் பின்பற்றலாம். அதைப்பற்றி இங்கே காணலாம்.
நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம்:
நம்முடைய உடலுக்குத் தேவையான நீரில் 20% நீர் நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்து கிடைக்கிறது. வெள்ளரிக்காய், செலரி, முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய், தர்பூசணி, ஆரஞ்சு, கிரேப்ஃப்ரூட், போன்ற பழங்களும் காய்கறிகளும் நீர்ச்சத்து நிறைந்தவை. இவை அனைத்தும், 90% வரை நீர்ச்சத்தைக் கொண்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா பானங்களும் நல்லதல்ல:
திரவம் தானே, அதுவும் தண்ணீர் போலத்தான். என்ன பானம் குடித்தால் என்ன என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், சில பானங்கள் உண்மையிலேயே உங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும். குறிப்பாக, காஃபி, சர்க்கரை நிறைந்த சோடா, பீர், வைன், மற்றும் மதுபானம் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல. மேலும், லெமனேட், இனிப்பான தேநீர், எனர்ஜி பானங்கள், ஸ்மூத்தீஸ், மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்கள் அனைத்தும் உடலுக்கு கேடானவை. இவ்வகையான பானங்களில், அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் சுவை, நிறம், நறுமணத்துக்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், உடலில் உள்ள திசுக்களின் ஈரப்பதம் வற்றிவிடும். எனவே, இதைப் போன்ற நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுத்தும் பானங்களைத் தவிர்த்து, உடலில் நீரேற்றத்தைப் பாதுகாக்கும் பானங்களைத் தேர்வு செய்து அருந்தவும்.
குளிர்ந்த நீர் ஷவரில் குளிக்கலாம்:
கோடைகால வெப்பம் அதிகப்படியான வியர்வையை உண்டாக்கும். எனவே, வழக்கத்தை விட, வியர்வை வழியாக உடலின் நீர்ச்சத்தை அதிகமாக இழக்க நேரிடும். குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது குளிர் நீர் ஷவரில் சில நிமிடங்கள் நிற்பது, இழந்த நீரை உடலுக்கு மீட்டுத்தரும். தசைகளை தளர்த்தி, எண்ணங்களை மேம்படுத்தி, உடல் உள்ளும் புறமும் குளிர்ச்சியாகவும் உணரச்செய்யும்.
இன்ஃபியூஸ்டு நீர் அருந்தவும்:
பழங்களுடன் தண்ணீரை இன்ஃபியூஸ் செய்யும் இந்த நடைமுறை, கடந்த சில ஆண்டுகளில் நிறைய கவனத்தை ஈர்த்துள்ளது. வெறும் தண்ணீரைக் குடிக்க சலிப்பாக உணர்கிறீர்களா? தண்ணீருக்கு இயற்கையான முறையில் கூடுதல் சுவையூட்டி, மணமூட்டி, குடிப்பதற்கு எளிதாக்குவதற்கான சில எளிதான கலவைகள் இங்கே.
செயற்கை இனிப்புகள் அல்லது பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல், எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி, லைம், புதினா, வெள்ளரி மற்றும் பிற பழங்களை வெட்டி நீரில் சேர்த்துக் குடிப்பது, நீரின் சுவையை அதிகரிக்கும், புத்துணர்வூட்டும் உணர்வைத் தரும். இது வழக்கமான அளவை விட அதிகமான தண்ணீரைக் குடிக்கவும் உங்களுக்கு உதவும்.
தேங்காய்-இளநீர்:
கோடையில் ஏன் இளநீர் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், மற்ற பானங்களை விட, இளநீரில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும், மின்னல் வேகத்தில் உடல் திசுக்கள் ஈரப்பதத்தைப் பெற உதவுகின்றது. தேங்காய் மற்றும் இளநீரில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மற்றும் கேல்சியம் போன்ற தாதுகள் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் உடல் இழந்த நீரை எளிதில் சரி செய்கின்றன.
உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க பொட்டாசியம் என்ற தாது உப்பு மிகவும் அவசியம். தேங்காய், பொட்டாசியம் தேவையை நிறைவேற்றுகின்றது. பழச்சாறு அருந்துவதை விட, குறைவான கலோரிக்கள் மற்றும் அதிகப்படியான பொட்டாசியம் இருக்கும் காரணத்தால், இளநீர் சிறந்தது.
ஓட்ஸ் மற்றும் சியா விதைகள்:
காலை உணவு மிகவும் முக்கியமான மற்றும் இன்றியமையாதது. ஒரு கிண்ணம் ஓட்சை நீங்கள் தினமும் காலையில் சாப்பிடலாம். ஓட்ஸ் தண்ணீரை உறிஞ்சும்போது விரிவடைவதால், உங்களுக்கு சுவையான உணவும் கிடைக்கும், உடலுக்குத் தேவைப்படும் திரவங்களையும் பெறுவீர்கள்.
நீங்கள் சியா விதைகள், ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சேர்த்து ஓட்ஸ் உண்ணும் போது, உடலுக்குக் கூடுதலான தண்ணீர் கிடைக்கும். மேலும், மதிய உணவு நேரம் வரை உங்களுக்கு பசிக்காமல் இருக்கும்.
அறிகுறிகளைத் தவற விடாதீர்கள்:
உங்களுடைய சருமத்தில் வறட்சி, எரிச்சல், வீக்கம், அரிப்பு, தலைவலி, மயக்கம், சோர்வு அல்லது அதிகப்படியான சென்சிடிவிட்டி காணப்படுகிறதா? இது நீரிழப்பின் அறிகுறியாகும்.
உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உங்கள் சிறுநீரின் நிறம், ஒரு முக்கியமான அறிகுறியாகக் கட்டுகிறது. அல்லது, அது உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றுவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீர் தெளிவாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அடர் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
உடல் வறண்டு போகாமல் இருக்க அடிப்படையான விஷயம், தண்ணீர் குடிப்பது. கோடைக்காலம் முழுவதும், குறிப்பிட்ட இடைவேளைகளில், தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Source: https://go.ly/KNLlc
கருத்துகள்
கருத்துரையிடுக