மனநிம்மதி

மனநிம்மதி என்பது கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எது கிடைத்தாலும் கிடைக்கும், மனநிம்மதி கிடைப்பது அரிது என்பது நம்முடைய அனுபவம். பதவி உயர உயர நிம்மதி குறைவது இயல்பு. சொத்து, பதவி, அந்தஸ்தை எல்லோரும் விரும்புகிறார்கள். அத்துடன் இன்றுள்ள அமைதி அவை எல்லாம் கிடைத்தபின் இருக்குமா என்றால், இருப்பது கடினம் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

கடவுள் சிருஷ்டியை வர்ணிக்கும் செய்யுள் ஒன்று. கடவுள் மனிதனைச் சிருஷ்டிக்கின்றார். பின்னர் தன்னருகேயுள்ள பல பாத்திரங்களிலுள்ள செல்வங்களை அவன் மீது வர்ஷிக்கின்றார். முதலில் ஆரோக்கியம்' என்ற பாத்திரத்தை எடுத்து அவனுக்கு அபிஷேகமாகத் தலை மீது கொட்டினார். பின்னர் கல்வி', தைரியம்', செல்வம்', சந்தோஷம்' என அங்கிருந்த அத்தனைப் பாத்திரங்களிலும் உள்ளதை, ஒன்று போக, மீதியை அவனுக்குக் கொடுத்துவிட்டார். அருகே இருந்தவர், கடைசிப் பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்பட்டு, அதிலுள்ளது நிம்மதி' என்று அறிகிறார். கடவுள் அதை அவனுக்குக் கொடுக்கப்போவதில்லை என அறிந்த அவர், "ஏன் அதைக் கொடுக்கவில்லை?'' என்று கடவுளைக் கேட்டதாகச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. "அதையும் கொடுத்து விட்டால் மனிதன் என்னை மறந்துவிடுவான்'' என கடவுள் பதிலிறுத்ததாகச் செய்யுள் முடிகிறது. உலகத்தில் மனநிம்மதி பெறுவது அரிது என்ற கருத்தை ஆண்டவன் செயலாகவே வர்ணிக்கும் செய்யுள்

அது. நம்மை ஆழ்ந்து நோக்கினால், நாம் வாழும் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நினைத்துப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இது போன்ற பெரிய உண்மைகளை அன்னை எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அதையே முடிவானதாகக் கொள்ள மாட்டார். அன்னை இது சம்பந்தமாக நமக்கு அறிவுறுத்துவது வேறு. ஆரோக்கியம், சக்தி (energy), அறிவு, உணர்வு, உற்சாகம், சந்தோஷம் ஆகியவை நம் வாழ்வில் அளவிறந்து ஏற்பட்டுள்ளன. அதேபோல் மனநிம்மதியும் எல்லையற்ற அளவில் நம் வாழ்வில் இருக்கின்றது. நாம் வாழ்வை அமைத்துக்கொண்ட வகையால், இயற்கையையும், இறைவனையும் விட்டுக் கொஞ்சம் அகன்று வருவதால் ஆரோக்கியம், சந்தோஷம் ஆகியவை குன்றிவருகின்றன. அதேபோல் மனநிம்மதி குறைவதும் நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையால்தானே தவிர, நம் நிம்மதிக்குக் குறைவில்லை என்பது அன்னையின் கருத்து. தன்னிடம் வரும் அன்பர்களுக்கு இந்தக் கருத்தைச் செயலில் விளங்குவது போல் முதலேயே அன்பரின் மனத்தில் நிம்மதியை உற்பத்தி செய்து, அன்னையைப் பற்றி நினைத்தமாத்திரம் மனம் நிம்மதியடைகிறது' என்று சொல்லும் வகையில் மனத்தை மாற்றிவிடுகிறார். தாமிருக்கும் இடம் வந்தாலும், தம்மைப் பற்றிப் படிப்பவருக்கும், தன்னை மனதார நினைப்பவருக்கும் மனதில் உடனே நிம்மதியை உற்பத்தி செய்வது அன்னையின் இயல்பு.

சாதாரண மனிதன் எப்படி இந்த நிம்மதியைப் பூரணமாக, நிலையாகப் பெறலாம்? அவன் நிம்மதியிலிருந்து விலகுவது எதனால்? எப்படித் திரும்ப வரலாம்? அதை நிலைபெறச் செய்யலாம்? அறிவும், உணர்வும், செயலும், பிரார்த்தனையும், அன்னை நினைவும் அதற்கு எப்படி உதவி செய்யும் என்பதைப் பற்றியதே இக்கட்டுரை. 62 வயதான அமெரிக்கப் பெண்மணி தம் உறவினர்கள் ஆசிரமத்தில் வந்து கொஞ்ச நாள் தங்கியிருக்கின்றார்கள் எனக் கேள்வியுற்று, ஒரு மாதம் தம் வேலையிலிருந்து லீவு பெற்று, தாமும் ஆசிரமம் வர வேண்டும் என்று வந்தார். இங்குள்ள அமைதி அவரை

ஆட்கொண்டது. இது போன்ற அமைதியுணர்வை தம் வாழ்நாளில் ஒரு நிமிஷம்கூடக் கண்டதில்லை என்பதைப் பல முறை பலரிடம் சொன்னார். தம் 3 வருஷ சர்வீஸை முன்னதாகவே முடித்துக் கொண்டு, அமெரிக்காவிலுள்ள தம் வீட்டைக் காலி செய்து, நிரந்தரமாக அந்த அமைதியை அனுபவிக்க வேண்டி, பாண்டிச்சேரிக்கே வந்துவிட்டார். அவரைவிட வயது அதிகமான இந்தியப் பெண்மணி ஒருவர் மாதம் ஒரு முறை சமாதி தரிசனத்திற்கு வந்து, ஒவ்வொரு முறையும் சில நாள் தங்குவார். ஒரு முறை நெடுநாள் தங்கி, "கடந்த 25 வருஷகாலமாக நான் பெறாத நிம்மதி எனக்கு இப்பொழுது இங்கே கிடைக்கிறது. அளவுகடந்த நிம்மதியுடனும், சந்தோஷத்துடனுமிருக்கின்றேன்'' என்று மகளுக்குக் கடிதமெழுதினார். "நிம்மதியும், சந்தோஷமும் கிடைத்தற்கரியவை. செல்வமும், பதவியும்கூட கிடைக்கலாம். கிடைத்தற்கரியவை உங்களுக்குக் கிடைத்திருப்பது பாக்கியம்'' என மகள் பதிலெழுதினார். பொதுவாகத் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு இயல்பாக அன்னை அளிக்கும் நிம்மதி என்ற பரிசு இது.

பயம், கவலை, சோகம், வறுமை, ஏமாற்றம், விரக்தி, சந்தேகம், சோர்வு போன்ற உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து வரும். ஒன்று மற்றதை உற்பத்தி செய்யும். ஒன்று மற்றதை அதிகப்படுத்தும். நிம்மதியைக் குலைப்பது கவலை. எனவே முக்கியமாக நாம் கருத வேண்டியது கவலை. இது எப்படி ஏற்படுகிறது? இதை எப்படி அழிக்கலாம்? என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. என்றாலும், இரண்டாம்பட்சமாக மற்ற மேற்சொல்லிய குணங்களும் கலந்து வரும். அவற்றுள் பயம், சந்தேகம் முக்கியமானவை. நிம்மதியை ஏற்படுத்த முக்கியமாகக் கவலையையும், அடுத்தபடியாக பயம், சந்தேகம் ஆகிய இரண்டையும் எப்படி அழிப்பது என்று விளக்கமாகக் கருதுவோம். நிம்மதியை நேரடியாக அதிகப்படுத்தும் முறைகளையும், அதற்கு எதிரானவற்றை அழித்து, அதன் மூலம் அதிகப்படுத்தும் முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் சொல்லலாம். பல

நிகழ்ச்சிகளுக்குப் பொதுவான முறைகளை பொதுவாகவும், குறிப்பிட்ட உதாரணத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறைகளை அதனுடன் இணைத்தும் விளக்க முயல்கிறேன்.

ஒரு சாதாரண குடும்பத்துப் பெண் திருமணமாகி மாமியார் வீடு சென்றாள். மாமியாருக்கு மருமகளை அளவுகடந்து பிடித்து விட்டது. மற்ற 4 மருமகள்களையும் விட்டுவிட்டு மாமியார் தன் மகளிடம் செலுத்தாத அன்பையும் இந்த மருமகளிடம் காட்டினாள். கணவன், மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். 6 மாதம் கழித்து அப்பெண் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் இவற்றையெல்லாம் விவரித்துவிட்டு தனக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால், "நம் வீட்டில் இருந்த ஆழ்ந்த அமைதி மட்டும் ஏனோ இங்கில்லை'' என்று எழுதி இருந்தாள். அவள் குடும்பம் ஆழ்ந்த அன்பும், பண்பும் இயல்பாக நிறைந்துள்ள இடம். பல தலைமுறைகளாக முறையாக வாழ்ந்த குடும்பம் என்பதால் அன்பையும், பண்பையும் சிறப்பானதாகக் கருதாமல், இயல்பான ஒன்றாகக் கருதிய இடம். அக்குடும்பத்தினர் ஆழ்ந்த நிம்மதியைத் தாங்கள் அனுபவிப்பதை உணராமலேயே என்றென்றும் பெற்றிருந்தனர். அன்பு (affection) என்பது தெய்வீக இயல்பு. பாசம், பற்று என்பது மனித குணம். அன்புக்குரியது ஆன்மா எனப்படும் சைத்திய புருஷனேயாகும். சைத்திய புருஷனுக்கு அன்பு எப்படி இயல்பானதோ, அதேபோல் சாந்தமும் இயல்பானது. அன்பு நிறைந்த குடும்பம் அமைதி தவழும் இடமாகும்.

இந்தப் பெண் புகுந்த வீடு எல்லா வகைகளிலும் இவளுக்குப் பொருத்தமானதென்றாலும், உயர்ந்த குடும்பங்களுக்குரிய சிறந்த இலட்சணமான அன்பைப் பரம்பரையாகப் பெற்றதன்று. அவளுடைய அகவுணர்வு அதை அவளுக்குத் தெளிவாக உணர்த்திவிட்டது. "என் வீட்டில் சண்டை, சச்சரவு என்று நான் பார்த்ததேயில்லை'' என்று ஒருவர் தம் 30வது வயதில் சொன்னால், அவருடைய குடும்பம் அன்பான ஒன்று என்று அர்த்தம். நிம்மதியை நிலையாக வாழ்வில் அனைவரும் பெற வேண்டுமானால், குடும்பம் அன்புக்கும், பண்புக்கும்

உறைவிடமாக இருக்க வேண்டும். இது வாழ்வின் நியதி. இதை எட்டியவர்கள் உண்டு. நிலையான மனநிம்மதியை நிறைவாக அனைவரும் அன்னை வழிபாட்டின் பலனாகப் பெறுவதெப்படி என்று நாம் கருதும்பொழுது சிறப்பான சிலருக்கு மட்டும் பொருந்தும் உயர்ந்த நிலைகளை மட்டும் முறையாக வற்புறுத்த இயலாது. அனைவராலும் முடியக்கூடிய முறைகளையே நாம் குறிப்பிட வேண்டும்.

ஒரு நாள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், சலூனுக்குப் போய் தலைமுடியை அலங்காரம் செய்துகொள். ஒரு வாரம் சந்தோஷம் வேண்டுமானால் குதிரை வாங்கு. ஒரு மாத சந்தோஷத்திற்குக் கல்யாணமும், ஒரு வருஷ சந்தோஷத்திற்குப் புதிய வீடு கட்டுவதும், நிரந்தரமான சந்தோஷத்திற்கு நேர்மையைக் கடைப்பிடித்தலும் தேவை' என ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. நேர்மை நிலையான சந்தோஷத்தையும், அதன் அடுத்த பலனாக மனநிம்மதியையும் தவறாமல் கொடுக்கும் என்பது நெடுநாள் வாழ்ந்தவர்களுடைய அனுபவம். அதுவே இங்கிலாந்தில் பழமொழியாக வழங்குகிறது. இதில் உள்ள உண்மையை எவரும் ஏற்றுக் கொள்வார்கள். இதை மேலும் ஆழ்ந்து கருதவேண்டி, மனநிம்மதியின் தலையாய எதிரி யார் என்று ஆராய்ச்சி செய்தால், அது கவலை என்று தெரியும். கவலையை முக்கியமாக உற்பத்தி செய்யும் புற நிகழ்ச்சிகளைத் தற்சமயத்திற்குக் கருதாது, அதன் உற்பத்தி ஸ்தானம் அகவுணர்வில் எது என்று கவனித்தால், அது சந்தேகம் என்று தெரியும். எந்தக் கவலையையும் அலசிப்பார்த்தால், அதனடியில் ஒரு சந்தேகம் புதைந்திருப்பது உண்டு. மனநிம்மதியை அழிக்கும் கவலையை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை அதன் வேரிலேயே அழிக்கக்கூடியது ஒன்றுண்டு; அது நம்பிக்கை. நம்பிக்கையை முழுவதும் ஏற்படுத்துவது பெரிய வேலை என்பதால் அதை ஒதுக்கி, நமக்குள்ள சந்தேகத்திற்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்று முயன்றால், அது எல்லோராலும் முடியக்கூடியதாகும். எளிமையான மனிதனும் தன்னால் முடியாது என்று சொல்ல முடியாத

ஒரு முறையாகும். அதுவும் தெய்வ நம்பிக்கையாக அது இருந்தால் பலன் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கையில் வீடு, பாக்டரி, ஆபீஸ், பொதுவாழ்வு ஆகிய இடங்களில் உள்ள நிம்மதியைக் குலைக்கும் நிகழ்ச்சிகளை எடுத்து, அங்கு எப்படி நிம்மதியை ஏற்படுத்தலாம், அதன் அடிப்படையான சந்தேகத்தை அகற்றலாம், அதன் எதிரியான நம்பிக்கையை உற்பத்தி செய்யலாம் எனக் கருதும் முயற்சியே இது.

அன்னையின் அருளுக்கு மனிதனுடைய பிரச்சினை சிறியது. கவலையை ஒழித்து, நம்பிக்கையை ஏற்படுத்த பல பெரிய வழிகள் உண்டு. மனிதன் எளிமையானவன். பிரச்சினைகள் அவனுக்குப் பயங்கரமாக இருக்கலாம். அவற்றைத் தீர்ப்பது அவ்வளவு சிரமம் இல்லை. ஒரு வகையில் மனிதன் எளிமையானவனானாலும், மற்றொரு வகையில் மனிதன் எதிலும் பிடிபடாதவன். ஒருவரைத் திருப்தி செய்ய முயன்றால், அது எவ்வளவு சிரமம் என்றுத் தெரியும். எவ்வளவு வந்தாலும், எது வந்தாலும் திருப்திபடாத மனம் உண்டு. மேலும் எதிர்பார்ப்பவர்களுண்டு. மனிதன் திருப்திபட வேண்டுமானால், அளவுகடந்து அவன் பெற வேண்டும். 9,000 ரூபாயைக் காணிக்கையாகச் செலுத்தி ஒருவர், "ஆசிரமம் வந்தபின் வாழ்க்கை நல்லவிதமாக இருக்கிறது'' என்றார். அவர் சொல்லியதன் பொருளை அவருடைய நண்பர் பின்னொரு சமயம் விளக்கினார். "ஒரு சைக்கிள் வைத்துக்கொண்டு கடை, கடையாகப் போய்க்கொண்டிருந்தார். இங்கு வந்தார். சில வருஷங்களில் 20 இலட்சம் சம்பாதித்துவிட்டார்'' என்று அவருடைய நண்பர் சொன்னார். மனிதன் திருப்திபட வேண்டுமானால் அளவுகடந்து, அபரிமிதமாக அவனுக்குச் செல்வமும், வளமும் பெருக வேண்டும். 500 ரூபாயை மொத்தமாக ஒரு மாதத்தில் பார்க்காத குடும்பத்துப் பிரச்சினைகள் அனைத்தும் மாதம் ரூ.1,000 வந்தால் மறைந்துவிடும். மனநிலை லேசாக ஒரு படியுயர்ந்தால், கவலை ஒழிந்து நம்பிக்கை பிறந்துவிடும்; மனநிம்மதி ஏற்பட்டுவிடும். அன்னை அதை அபரிமிதமாக முதலிலேயே கொடுப்பார்.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும் நிலைமையில் மாற்றம் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? மனதை மாற்றிக்கொள்ள இடம் உண்டா? மனப்பாங்கை மாற்றிப் பலனடைய வழியுண்டா? என்று சிந்தித்து, அங்கெல்லாம் நம்மால் முடிந்தவற்றைச் செய்தால், அதற்குள் கெட்டுப்போன மனநிம்மதி மனதில் மலர ஆரம்பிக்கும். அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை முழுவதுமாகப் பலிக்கும். இன்றைய கவலை நாளைய நிம்மதியாகும். மாற்றம் வரும்பொழுது முதலில் கவலை ஒழிந்தது என்றாகும். அடுத்த நிலையில் நிம்மதி ஏற்பட்டது என்றுத் தெரியும். மூன்றாம் கட்டத்தில் சந்தோஷம் பிறக்கும். வேறு வகையாகப் பார்த்தால், நாம் எது செய்தாலும், செய்யா விட்டாலும் அன்னையை ஏற்றுக்கொண்டபின் அதே மூன்று நிலைகளும் ஆண்டுக்கு ஒன்றாகத் தானாக வருவதையும் காணலாம். வேறு கோணத்தில் பார்த்தால், நான் மட்டும் அன்னையை ஏற்றுக் கொண்டபொழுது முதல் கட்டமும், கணவனும் ஏற்றுக்கொண்டபின் இரண்டாம் நிலையும், குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில் மூன்றாவது பலனும் கிடைப்பதைப் பார்க்கலாம். செயலை தல் நிலையாகவும், உணர்வை இரண்டாம் நிலையாகவும், அறிவை மூன்றாம் நிலையாகவும் கருதினாலும், மேற்சொன்ன மூன்று கட்டங்களும் கவலை ஒழிந்தது, நிம்மதி ஏற்பட்டது, சந்தோஷம் உற்பத்தியாயிற்று என்ற மூன்று கட்டங்களும் படிப்படியாகத் தெரியும். நமக்குப் புரியாவிட்டாலும் நல்ல முறை என்று ஒருவர் சொல்வதை மனம் அறிந்துகொள்ளாவிட்டாலும், செயலால் செய்தால் முதல் நிலை பலனுண்டு. உணர்வு அம்முறையை ஏற்றுக்கொண்டு செய்தால் இரண்டாம் நிலை பலனுண்டு. அறிவும் அம்முறையைப் புரிந்து, மனமார ஏற்றுக்கொண்டபின், அம்முறையை மனமார, உளமார செயல்படுத்த முடியும். அந்நிலையில் கடைசி கட்டப் பலனாக சந்தோஷம் பிறக்கும். கவலையால் பீடிக்கப்பட்ட மனிதனுக்கு எந்தப் பலன் வந்தாலும் போதும்; கவலை அழிந்து நிம்மதி எந்த வழியில் வந்தாலும் போதும். அதற்குரிய முறைகளும், முயற்சியும் எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியவை; செயல்படுத்தக்கூடியவை.

நம் மீது அநியாயமான பழியைச் சுமத்தியவுடன் மனம் பதறுகிறது; துடிக்கின்றது; கொந்தளிக்கின்றது. நாடி ஜோஸ்யம் பார்த்தவுடன் போன ஜென்மத்தில் நாம் செய்ததன் பலன் அது என்று தெரிந்தவுடன் பதைப்பும், துடிப்பும் அடங்கி, மனம் அதை ஏற்றுக்கொள்கிறது. ஜோஸ்யத்தைப் பார்ப்பவன் கர்மத்தை ஏற்றுக் கொள்கிறான். அனுபவசாலி நாட்டிலுள்ள யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறான். படித்தவன் சட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக் கொள்கிறான். நமக்கு வந்த கஷ்டத்தைக் கண்டு பதறும் மனம், அதன் காரணத்தைக் கர்மமாகவோ, நடைமுறையாகவோ, சட்டமாகவோ உணரும்பொழுது பதட்டத்தை விட்டுப் பக்குவப்படுகிறது. அன்னை பக்தர்களுக்கும் அதே நியதியுண்டு. ஆனால் ஒரு மாற்றம், வாழ்க்கையில் தன் காரியத்தைத் தோற்று, அதற்குரிய காரணத்தைப் புரிந்து, மனம் அடங்குகிறது. அன்னை பக்தர்களுக்கும் மனம் அடங்கும். ஆனால் அந்த நிலை மூலமாக மனநிம்மதி ஏற்படும். தோல்வியை ஏற்றுக்கொள்வதே வாழ்க்கை அளிக்கும் விவேகம். வெற்றியை மட்டும் உறுதிப்படுத்துவதே அன்னை வழி. நம் காரியங்கள் கெட்டுப்போய் மனநிம்மதி அழிந்த நிலையில் அன்னையை நினைத்து, அவர் முறைகளைப் பரிசீலனை செய்தால், அவர் முறைகளைக் கடைப்பிடிக்கும்முன் நாம் சரி செய்யக்கூடியவற்றைச் சரி செய்தால், அந்தக் காரியம் எப்படிக் கூடிவரும் என்று நமக்குப் புரியும். கூடிவர ஆரம்பிக்கும். அதன் மூலம் நிம்மதி ஏற்படும். வெற்றி மட்டுமே உண்டு என்ற உண்மை அன்னை வாழ்வில் யதார்த்தமாகப் புரியும். அதன் மூலம் ஏற்படும் நிம்மதி, மேலும் நிலையான சந்தோஷத்தை உற்பத்தி செய்யும். வாழ்க்கையில் அனுபவசாலிக்கும், விவேகிக்கும், அறிவாளிக்கும் ஏற்படும் நிம்மதி தோல்வியை ஏற்கும் பக்குவத்தை அளிக்கிறது. அன்னை வாழ்வில் சாதாரண அன்பர்களுக்கு ஏற்படும் நிம்மதி வெற்றியை உறுதிபடுத்தி, மேலும் சந்தோஷத்தை உற்பத்தி செய்கிறது. மனித வாழ்வுக்கும், அன்னை நமக்களிக்கும் வாழ்வுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது. தெளிவில்லாமல் அன்னையை ஏற்றுக்கொண்ட நிலையிலும் கிடைக்கும் பலன் இது. இதைத்

தெளிவோடு பெற்று, நிம்மதியை நிலைநிறுத்தி, சந்தோஷத்தை நிரந்தரமாக்க அன்பர்களால் முடியும் என்பதைப் பல கோணத்தில் இருந்தும் விளக்கவே நான் முயல்கிறேன்.

கவலையும், பயமும் நிம்மதியின் எதிரிகள். போதுமான படிப்பு இல்லாதவனுக்கு நகர வாழ்க்கையின் அம்சங்கள் விவரம் புரியாததால் பயத்தை உண்டு பண்ணுவது வழக்கம். விவரம் தெரிந்தவுடன் பயமும், அதனால் ஏற்பட்ட கவலையும் போவதுண்டு. உடலைப் பற்றிய விவரங்கள் டாக்டருக்குத் தெரிவதுபோல் நமக்கும் தெரிய முடியாது. நமக்குப் பீதி உண்டுபண்ணக்கூடிய வியாதிகளை டாக்டர் விவரம் தெரிவதால் எளிமையாகக் கருதுகிறார். அவருடைய விளக்கம் நமக்குத் தெரிந்தவுடன் அறியாமையால் ஏற்பட்ட பயம் விலகி, மனம் நிதானமடைகிறது. சொத்து, சட்ட விஷயங்களிலும் அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் கலக்கம் வக்கீலைக் கலந்தவுடன் போய்விடும். அதேபோல் வயது முதிர்ந்தவர்களில் சிலர் விவேகியாக இருப்பார்கள்; அனுபவத்தால் வாழ்க்கையின் சூட்சுமங்களை அறிந்து இருப்பார்கள். நிலைகலங்கிய மனிதர்களுக்கு நிதானமாக அறிவுரை சொல்லி, நிமிஷத்தில் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் பழக்கம் அவர்களுக்குண்டு.

குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள், அனுபவசாலிகள், பழுத்த பழமாக வாழ்வின் கடைசி கட்டத்திலிருப்பவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மலைபோல வரும் கஷ்டங்களைத் தங்கள் அனுபவ முதிர்ச்சியால் பனி போல விலக்குவதுண்டு. அன்னாருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டு, அதன் பலனையடைய ஒரு பெரு முயற்சி தேவைப்படும். முயற்சி என்பது தெய்வீகம். பெரிய அறிவுரையைச் செயல்படுத்த ஏற்கும் முயற்சி அதனினும் சிறப்பானது. அன்னை முயற்சியைப் பெரிதும் பாராட்டுபவர். தெய்வீக முயற்சியைத் தவம் எனக் கருதுபவர். மனித வாழ்வில் ஏற்படும் தெய்வீக முயற்சிக்கு அபரிமிதமாக பலனை அளிப்பது அன்னையின் வழக்கம். நம் மனநிம்மதியைக் குலைத்த பிரச்சினையைத் தீர்க்க இது போன்ற

முயற்சியை மேற்கொண்டு, பின்னர் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால் நிம்மதி வரும்; பிரச்சினை தீரும். மேலும் ஒரு கட்டம். அனுபவசாலிகளாலும், விவேகிகளாலும், குருவாலும் அறிவுரை சொல்ல முடியாத கட்டங்கள் உண்டு. இதற்கெல்லாம் தீர்வு கிடையாது, அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர்கள் சொல்லும் பிரச்சினைகள் பல உள. அதுபோன்று எல்லா பிரச்சினைகளுக்கும் அன்னை தீர்வு காணும் முறையை வகுத்துள்ளார். அம்முறைகளைத் தெளிவாகப் பின்பற்றினால் முழுவதுமாகக் கவலையும், பயமும் நீங்கி, நிம்மதி ஏற்படுவதுடன் பிரச்சினையும் கரைந்துவிடும்.

ஆன்மா தன் கவலைகளை மறந்தபொழுது, அவை கரைந்து விடுவதைப் பார்த்து திகைப்பதைக் கண்டு இறைவன் சிரிக்கின்றான் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லுகிறார். ஸ்ரீ அரவிந்தர் மனிதனை இப்படிச் சொல்லியிருந்தால் சரி; ஆன்மாவையே அப்படி வர்ணிக்கின்றார். பூவுலகத்தில் பிறப்பெடுத்தபின் ஆன்மாவுக்கும் மனித குணம் ஏற்படுகின்றதுபோலும். இதனுள் புதைந்துள்ள கருத்தே நமக்கு இங்கு முக்கியமானது. ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கவலைப்படும்வரை அப்பிரச்சினைக்கு வலுவிருக்கும். நாம் அப்பிரச்சினையை மறந்துவிட்டால், அப்பிரச்சினை கரைந்துபோகும் என்பதே இதன் கருத்து. சாதாரணமாக மனிதன் இக்கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம்; செயல்படுத்துவது அதிகக் கடினம். இக்கருத்தில் பொதிந்துள்ள உண்மையைச் செயல்படுத்துவதே நான் இதுவரை அன்னைமுறை என்று வர்ணித்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை உச்சக்கட்ட உதாரணமாகவும், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியை அனைவருக்கும் பொருந்தும் எளிய உதாரணமாகவும் எழுதினால், அதற்கிடைப்பட்ட அத்தனை நிலைகளும் இம்முறைக்குக் கட்டுப்படும் என்றாகும்.

5 குழந்தைகளுக்குத் தாயானவள், 6ஆம் குழந்தைப் பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்கு வந்திருந்தபொழுது, கணவனுக்குப் பிரமோஷன் வந்தது. அத்துடன் அவனுடைய பெற்றோர்களுக்கு,

அவனுக்கு இரண்டாம் திருமணம் செய்தால், புதிய உத்தியோகத்தால், அதிக சீர்வரிசைகள் கிடைக்கும் என்ற எண்ணமும் உற்பத்தி ஆயிற்று. கணவனும் சம்மதப்பட்டு, பெண் பார்க்கப் புறப்பட்டுவிட்டார். இந்நிலை மனைவிக்குப் புதியதில்லை. திருமண நிச்சயதார்த்தத்தில் இருந்து குதர்க்கமான செயல்களுக்குப் பலியானவளானதால், கணவன் போக்கு நிரந்தரமாகத் திகிலையும், ஆபத்தையும் உற்பத்தி செய்துவிட்டதை உணர்ந்தாள். இந்நிலையில் அன்னையை வழிபட்டால், அன்னை இருப்பதை அதிகமாக்கிக் கொடுப்பார்கள். அவர்களை வழிபட ஆரம்பித்த பின்னர் கணவனால் தொந்தரவு கொடுக்க முடியாது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டால், இருக்கும் வசதிகளை அதிகமாக்கும் அன்னை, குறைக்க முடியாதன்றோ? என்ற கருத்து பெண்மணியின் மனதைத் தொட்டது; நம்பிக்கை பிறந்தது; திகிலும், கவலையும் ஒழிந்தன. கணவர் திரும்பி வந்தார். கொஞ்ச நாள் கழித்துத் தாமும் அன்னை பக்தரானார். அதிருந்து 25 வருஷ காலம் அவர் உயிரோடிருந்தவரை, மனைவிக்கு அது போன்ற தொந்தரவைக் கொடுக்கவில்லை; வேறெந்தத் தொந்தரவையும் கொடுக்கவில்லை. இந்த மாற்றத்திற்கு வித்து அப்பெண்மணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை; அந்த நம்பிக்கையிலிருந்த உண்மை. நம்பிக்கை கவலையை அழிக்கும்; நிம்மதியைக் கொடுக்கும். "எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதனால் நிம்மதி வந்துவிட்டது'' என்று அவளால் சொல்ல முடிந்தது.

1929இல் உலகப் பொருளாதார நெருக்கடி நியூயார்க்கிலும், லண்டனிலும் ஆரம்பித்து, உலகம் பூராவும் பரவி, 1939இல் உலக யுத்தம் வரும்வரை வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சம், பட்டினியை அமெரிக்காவிலிருந்து எல்லா நாடுகளிலும் ஏற்படுத்தியது. அப்பொழுது பாங்கில் டெபாசிட் போட்டவர்கள், பாங்கை நம்பாமல் பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். ஓரிரு பேங்க் திவாலானவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை பேங்கிலிருந்து வாபஸ் செய்தார்கள். தினமும் 10, 20 நூறு பாங்குகள் திவாலாகிக்கொண்டு

இருந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஹூவர் மக்களை, "அப்படிச் செய்தால் நாடு திவாலாகிவிடும்'' என்று கேட்டுக்கொண்டார். மக்கள் அதைப் புறக்கணித்தனர். 1929ருந்து 1932 வரை இந்த நிலை நீடித்தது. ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலைமை மேலும் மோசமான நேரம். தொடர்ந்து மக்கள் பணத்தை வாபஸ் செய்தால் நாடு திவாலாகும். பாங்கில் உள்ள பணத்தை எடுக்காவிட்டால் பாங்க் திவாலானபின் எல்லாப் பணமும் போய்விடும். அந்த நிலையில் பணம் போட்டவர்களை எப்படி எடுக்காதே' என்று சொல்ல முடியும்? ரூஸ்வெல்ட் தினமும் ரேடியோவில் மக்களிடம் பேசினார். நாட்டின் நிலையை விளக்கினார். பாங்கைப் பற்றியும், மக்களுடைய பணத்தைப் பற்றியும் பேசுமுன் நாட்டின் பொருளாதாரத்- தைப் பற்றி மக்கள் அறிந்திராத உண்மையை எடுத்து விளக்கினார். "ஒரு நாட்டின் செல்வம் அந்த நாட்டு நிலங்களிலும், பாக்டரிகளிலும் மனித உழைப்பால் ஏற்படுகிறது. இதுவரை அமெரிக்கா செல்வர் நாடாக விளங்கியது, நம் நாட்டு விவசாயிகளாலும், தொழிலாளி- களாலுமன்றோ? இன்று அந்த நிலங்கள், தொழிற்சாலைகள், அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா? அல்லது மறைந்து விட்டார்களா? எல்லாம் அப்படியே இருக்கின்றன. அவையிருக்கும் பொழுது பொருளாதாரத்திற்கு நெருக்கடி எப்படி வரும்? நிலமும், தொழிலும், மனிதனும் இருக்கும்வரை நெருக்கடிக்கிடமில்லை. அவற்றைத் தாண்டி எழும் பிரச்சினைகள் அரசுக்குக் கட்டுப்பட்டவை'' என்ற விளக்கம் கொடுத்தார். கேட்ட இலட்சக்கணக்கானவர்களுக்கு மனதிலிருந்த குழப்பம் நீங்கியது; தெம்பு வந்தது. அதையுணர்ந்த ரூஸ்வெல்ட் "நீங்களெல்லாம் எடுத்த பணத்தை மீண்டும் பாங்கில் போட வேண்டும்'' என்றார். மறுநாள் வரிசை வரிசையாகப் பாங்கில் மக்கள் திரண்டு எடுத்த பணத்தை மீண்டும் டெபாசிட் செய்தனர். அதன்பின் பாங்குகள் திவாலாகவில்லை. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மக்கள் மனதிலுள்ள அறியாமையையும், குழப்பத்தையும் நீக்கியவுடன் அவர்களுக்குத் தெம்பு வந்தது. நாடு திவாலாகப்போவதைத் தடுக்க முடிந்தது.

ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பிக்கும் உற்சாகத்தில், அதை லட்சியமாய் நடத்த வேண்டுமென்ற ஆர்வத்தில், தலைவருக்குச் சிறப்பான இடமளிக்க விரும்பி, அது போன்ற ஸ்தாபனங்களில் இல்லாத ஒன்றைத் தலைவருக்குக் கொடுக்க விரும்பி, எல்லாவித உரிமைகளையும் அவருக்கே அளித்து, சட்டதிட்டங்களை இயற்றினார்கள். அதற்கமைந்த தலைவர் சாதாரண மனிதனுக்கு உள்ள நல்ல குணங்கள்கூட இல்லாதவர். ஸ்தாபனம் பெரும்புகழ் பெற்றது. எந்தப் பிரச்சினையும் இல்லை. பெருஞ்சொத்து ஏற்பட்டது. தலைவருக்கே உண்டான குதர்க்கபுத்தி செயல்பட ஆரம்பித்தது. ஸ்தாபனத்தை உடைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் ஸ்தாபனத்தின் மீது உயிரையே வைத்திருந்தனர். தலைவருடைய போக்கு விபரீதமாக இருந்தது. அனைவரும் அவரிடம் சென்று, "நாங்களெல்லாம் விலகிக் கொள்கிறோம். மற்றவர்களை நீங்களே நியமித்து, ஸ்தாபனத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்'' என்றார்கள். தலைவர் மறுத்தார். "ஸ்தாபனத்தைக் கலைத்து வேடிக்கைப் பார்க்கப்போகிறேன். எனக்கு அந்த அதிகாரம் உண்டு. என்ன செய்ய முடியும்?'' என்று சில்லறை மனிதனாகப் பேசினார். மற்ற அங்கத்தினர்கள் ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்தவர்கள். சர்வபரித்தியாகம் செய்தவர்கள். தங்கள் முழுச் சொத்தையும், உழைப்பையும் கொடுத்தவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளத் தயார். ஸ்தாபனம் உடைவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வக்கீலைக் கலந்தார்கள். "உங்கள் ஸ்தாபனம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது. இதுபோன்ற அதிகாரத்தை எந்த ஸ்தாபனமும் தலைவருக்குக் கொடுத்ததில்லை. நீங்களே அப்படிச் செய்தபின் சட்டம் எப்படி உதவும்'' என்றார். அனைவரும் வீடு திரும்பினர். மனம் உடைந்தனர். முக்கிய ஊழியர் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. "நான் முழுமனதுடன் செய்தேன். நல்லெண்ணத்துடன் இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்தேன். அந்த நல்லெண்ணத்திற்கு அடையாளமாகவே முழு அதிகாரத்தையும் தலைவருக்குக் கொடுத்தேன். அதனால் தவறு வாராது. என் எண்ணம் சட்டத்தைவிட

உயர்ந்தது. சட்டம் உதவாவிட்டால் வேறு வழியிருக்கும்'' என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் வக்கீலைப் பார்த்து, "தலைவர் அவர் போக்கில் சென்றால், சட்டப்படி மற்றவர்களுடைய பங்கை நிறைவேற்ற நாங்கள் தயார்'' என்று கூற வக்கீலைப் பார்த்தார். விவாதத்தைக் கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு வக்கீல், "தலைவருக்கு ஏகபோக அதிகாரத்தை நீங்கள் தானே கொடுத்தீர்கள். கமிட்டி முழுவதும் இங்கே இருக்கிறீர்களே, கொடுத்த அதிகாரத்தை வாபஸ் செய்ய உரிமை, கமிட்டிக்கு உண்டு'' என்று விளக்கினார். ஊழியர்களுக்குச் சட்டம் கைகொடுத்தது. தலைவர் தாமே விலகிப் போய்விட்டார்.

நம் மனத்தில் கோணலில்லாவிட்டால் மற்றெந்தக் குறையையும் விலக்க ஒரு மார்க்கம் கண்டுபிடிக்கலாம்; விலக்கலாம். அதன் வழியே சிக்கல் அவிழும். நம் மனத்தில் கோணல் இருந்தால், அதை நாமே விலக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்களால் விலக்க முடியாதது அது. கோணல் இல்லையென்றால், குறையை நிவர்த்தித்து, பின்னர் செய்யும் பிரார்த்தனை முழுவதும் பலிக்கும். பிரச்சினை தீர்வதற்கு ன் கவலை நீங்கி, மனம் நிம்மதியடையும். அந்த நிம்மதியே பிரச்சினையைத் தீர்க்கவும் உதவும்.

விற்க நினைத்ததைப்போல் 3 மடங்கு விலைக்கு பேரம் படிந்து, அக்ரிமெண்ட் பாதி எழுதியபின், தடை வந்தது. வந்த நல்ல விலை போய்விட்டது என்று கவலையடைந்தவர், "வந்தது போகாது. அதுவும் தரிசனம் மூலமாக வந்தது போகாது. முயன்றால் மீண்டும் கிடைக்கும். சமாதி தரிசனம் செய்தாலும் போதும்'' என்ற எண்ணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்றுக்கொண்டவுடன் தீராத கவலை மனதை விட்டு விலகியது; நம்பிக்கை ஒளி புறப்பட்டது. 4 மணி நேரத்தில் போனது திரும்பி வந்துவிட்டது. ஓர் உயர்ந்த கருத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததால் கவலையழிந்து, நம்பிக்கை ஏற்பட வழி ஏற்பட்டது. உயர்ந்த கருத்துக்கு அந்தத் திறனுண்டு.

டிபார்ட்மெண்டில் இரண்டு சான்ஸ் கொடுத்தும் அக்கௌண்ட் டெஸ்டில் தவறி, மேலும் இரு சான்ஸ் ஸ்பெஷலாக வாங்கி, அதிலும் பெயிலாகி, டிபார்ட்மெண்டிற்குத் தேவையான டெக்னிகல் பரீட்சையை இரு முறை எழுத, அதிலும் பெயிலானவர்க்கு, புதிய உத்தியோத்தில் சேர்வதற்குமுன் பழைய உத்தியோகத்தில் அதிக சம்பள உயர்வைச் சர்க்கார் ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற நிலையில், இதே கருத்தை ஏற்றால் பலனுண்டு என்று சொல்லியபொழுது, அவர் மிகவும் தயங்கினார். "வந்தது போகாது. அதுவும், ஸ்ரீ அரவிந்தர் அறையைத் தரிசனம் செய்தபின் வந்தது போகாது'' என்ற கருத்தை அவர் ஏற்றுக்கொண்டால், 4 முறை பெயிலான அக்கௌண்ட் டெஸ்டை அடுத்தாற்போல் ஒரே முறையில் பாஸ் செய்ய வேண்டும். அடுத்த டெக்னிகல் டெஸ்டையும் ஒரே முறையில் பாஸ் செய்ய வேண்டும். அவராலும் அந்த உயர்ந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தது. இரண்டு பரீட்சைகளையும் பாஸ் பண்ண முடிந்தது. உயர்ந்த கருத்தை மனம் ஏற்றுக்கொண்டால் கவலை கரையும்; நிம்மதி ஏற்படும்; பிரச்சினை தீரும்.

நல்ல சம்பளத்தையும், உத்தியோகத்தையும் விட்டுவிட்டுத் தொழில் (industry) ஆரம்பிக்க முயன்று, 6 வருஷ காலமாக உழன்றவர், கதிகலங்கிய நிலையில், இனி உருப்பட வழியேயில்லை என்ற நிலையில், "நீ உன் காணிக்கையை இந்தக் கஷ்டக் காலத்திலும் தொடர்ந்து தருகிறாய்; குறைக்காமல் செலுத்துகிறாய். எது கை விட்டாலும் காணிக்கை தன் கடமையைப் பூர்த்தி செய்யும், கவலையை விடு'' என்ற கருத்தை ஊன்றிக் கேட்ட அவரால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அன்னையை நினைத்துச் சிரிக்கவும் முடிந்தது. 7 நாளில் 3 புதிய வாய்ப்புகள் உற்பத்தியாகி கைகொடுத்தன. கவலை போய், நிம்மதி வந்தது. அவரும் பெரிய தொழிலதிபராகிவிட்டார்.

ஒரு தொழிலதிபருக்கு 3 தொழில்கள். எல்லாத் தொழில்களும் நல்ல முறையில் நடந்துவருகின்றன; ஆர்டருக்குக் குறைவில்லை; பணத் தட்டுப்பாடில்லை; உற்பத்தியில் தடையில்லை. தொழில்

இலாபம் வருவதைப் பார்த்த தொழிலாளர்கள் வேறுவிதமாக நினைத்தார்கள்; நினைவைச் செயல்படுத்தினார்கள்; சிறிய சிக்கல் ஏற்பட்டு, பெரிய சிக்கலாயிற்று; ஒன்று போனால் மற்றொன்று. லேபர் என்றால் அலர்ஜி என்ற நிலைமைக்கு வந்துவிட்டார். தொழிலை மூட மனமில்லை. வேறு வழியில்லாமல் நித்திய அவஸ்தையுடன் நிம்மதி இழந்த நிலையில், அவர் எடுக்காத முடிவைத் தொழிலாளர்கள் எடுத்து, எல்லாத் தொழில்களையும் மூடிவிட்டார்கள். இனி கவலைக்கே இடமில்லை. தொழில் இருந்தால்தானே கவலையை உற்பத்தி செய்யும்! நம் கையில் உள்ள பிடியைப் பெரிய மனது செய்து விட்டுக்கொடுப்பது அன்னை முறைகளில் ஒன்று என்று அறிந்து, அந்தத் தொழில் அதிபர் ஸ்டிரைக் நேரத்தில் வந்த ஒரு சந்தர்ப்பத்தில் தைரியமாக அம்முறையைக் கையாண்டார். ஸ்டிரைக் முடிந்தது. ஒரு மாதம் கழித்து அவர் எழுதினார். "இதுவரை லேபர் என்றால் எனக்குத் தலைவலி; இன்று லேபர் பிரச்சினையில்லை. இனி லேபர் பிரச்சினையாக வழியும் இல்லை. கவலை ஒழிந்து, பூரண நிம்மதி ஏற்பட்டுவிட்டது'' என்று அவர் எழுதினார்.

என் தொழில் வருமானம், மழையை பொருத்தது; மழை பெய்தால் உண்டு, பெய்யாவிட்டால் ஒன்றுமில்லை. அதனால் எனக்கு நிம்மதி என்பது எப்பொழுதுமே இருந்ததில்லை என்று ஒருவர் சொன்னால் அது முழு உண்மை. அவர் மழைக்குக் கட்டுப்பட்டவர். மழை அவர் கையில் இல்லை. அதனால் அவருக்கு நிம்மதி ஏற்பட வழியில்லை. இது ஒருவருடைய தொழில் நிலை. இவருக்கு நிம்மதி ஏற்பட முடியுமா? அன்னை நிம்மதி அளிப்பாரா? அப்படிப்பட்ட வழி ஒன்று இருந்தால் தெரிந்துகொள்ள எல்லோரும் விரும்புவார்கள் இல்லையா?

அவர் சொல்வது உண்மை. வாழ்க்கையில் அந்த உண்மை நின்று நிலைபெறுகிறது. அன்னையின் வாழ்வில், அதாவது அன்னை பக்தர்களுக்கு அளிக்கும் வாழ்வு அந்த உண்மைக்குக் கட்டுப்படாது. அன்னை வாழ்வில் நிம்மதி நிலையானது. மழைக்குத் தொழில்

கட்டுப்படலாம். அன்னை வாழ்வு மழையாலோ, மற்றதாலோ நிர்ணயிக்கப்படக்கூடியதில்லை. அன்னை வாழ்வு தன்னையே நிர்ணயித்துக்கொள்ளும் திறனுள்ளது. மழையால் நிர்ணயிக்கப்படக் கூடிய வருமானம், அன்னை வாழ்வில் நம் நம்பிக்கையால் நிர்ணயிக்கப் படும். இந்த உண்மையை அந்த அன்பர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்ற பல அன்பர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினால், அந்த அன்பர் அதை ஏற்றுக்கொண்டால், அவருக்கு நம்பிக்கை பிறக்கும். 45 வருஷமாக இல்லாத நிம்மதி அந்த நம்பிக்கை மூலம் ஏற்படும். தொழில் மழை என்பது முக்கியம். என்றாலும் மற்ற விஷயங்களாக விலை கிராக்கி, சர்க்கார் மான்யம் போன்ற வேறு பல அம்சங்கள் இருப்பதால், அன்னை ஓர் அம்சம் பொய்த்த காலத்து, மற்றோர் அம்சத்தின் மூலம் அதே வருமானத்தைக் கொடுப்பார். அன்பருக்குத் தேவையானது நம்பிக்கை. மழை மீதுள்ள நம்பிக்கையைத் தடம்புரட்டி அன்னை மீது வைக்க வேண்டும். அன்னை பல வகைகளில் செயல்பட முடியும். பலனை அன்னை நிர்ணயிப்பதால், அன்னை மீது நம்பிக்கையுள்ளவரை பலனுண்டு; நிம்மதிக்குப் பங்கம் வாராது.

"எனக்கும் வயதாகிறது. என்னைப் பார்த்தபின் எந்த வரனும் திருமணத்திற்குச் சம்மதித்ததில்லை'' என்று நம்பிக்கையை இழந்தவருக்கு நம்பிக்கையை இடம் மாற்றி வைத்தால் நல்லது என்ற எண்ணம் இதமாகப்பட்டது. தன் அழகை நம்புவதைவிட, அன்னையை நம்புதல் நல்லது என்ற எண்ணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையும், நிம்மதியும் பிறந்தன; கவலை அழிந்தது. அடுத்த வரன் சம்மதித்தார். அவர் மிராசுதாரர். திருமணம் நடந்தேறியது.

"என் வேலை நிலையில்லை. ஏனெனில் என்னுடைய டிபார்ட்- மெண்டே தற்காலிகமானது. நான் எப்படி நிம்மதியுடனிருக்க முடியும்?'' என்றவர் டிபார்ட்மெண்ட், சட்டம், இவற்றிலிருந்து நம்பிக்கையை அன்னையிடம் மாற்றியவுடன், டிபார்ட்மெண்டைக் கலைத்து விட்டார்கள். அவருடைய ஆரம்ப பயம் பலித்துவிட்டது. செய்வது

அறியாது திகைத்திருந்த நேரத்தில், நம்பிக்கையை இழக்காத காரணத்தால், டிபார்ட்மெண்டிலிருந்து எதிர்பாராதவிதமாகக் கடிதம் வந்தது. மாநில சர்க்கார் இந்த மத்திய சர்க்கார் டிபார்ட்மெண்ட் கலைக்கப்படுவதால், இதிலுள்ள எல்லா ஆபீசர்களையும் அதே சம்பளத்தில் தன் இலாக்கா ஒன்றில் எடுத்துக்கொள்ள சம்மதித்து இருப்பதாகவும், அதனால் புது போஸ்டிங் வரும் என்று கடிதம் கூறியது. அன்னையை முழுதும் நம்பிய அன்பருக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும் நேரத்தில், அவரை கெஜட் பதவிக்கு தேர்ந்தெடுத்து விட்டதாக மற்றொரு தகவல் கிடைத்து, நிலைமை மாறி உயர்ந்தது.

கணவனை நம்ப முடியாவிட்டால், பிள்ளைகளுக்குச் சொந்தமாக ஒரு கட்டுப்பாடில்லாவிட்டால், முதலாளிக்கு தமக்கென அபிப்பிராயம் இல்லாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்பவரானால், ஊன்றுகோலாகப் பற்றக்கூடிய மனிதரோ, சந்தர்ப்பமோ நம் வாழ்க்கையில் இல்லாமற் போனால், தொடர்ந்து கணவனை வெளியூருக்கு அனுப்ப வேண்டிய உத்தியோகமானால், செய்யும் உத்தியோகம் நிலையற்றதானால், நம் வாழ்வு பிறர் கையிலோ, மற்ற விஷயங்களால் நிர்ணயிக்கப்படு- மானால், நமக்கே (depression) சோகம் உடன்பிறந்ததானால், நம்மைச் சுற்றியுள்ளவர் அனைவரும் செய்யக்கூடிய காரியத்தை நம்மால் செய்ய முடியவில்லை என்றால், மார்க்கட் நிலவரம் விரைவாக மாறும் தொழிலிருந்தால், புதிய பொருள் எந்த நிமிஷமும் வந்து நம் தொழிலை மூடிவிடக்கூடுமானால், திருமணச் செலவைத் திரட்ட முடியாது என்று தெளிவாகப் புரியுமானால், சம்பளத்தில் நடத்த டியாத குடும்பத்தை அடுத்த மாதத்திலிருந்து பென்ஷனில் நடத்த வேண்டுமானால், ஒவ்வொரு வருஷமும் அதிர்ஷ்டத்தை நம்பியே பாஸ் பண்ணி வந்தால், பார்ட்னர் மிகவும் இரகஸ்யமானவரானால், வீடு சச்சரவு நிரம்பியதானால், குடும்பத்தில் ஒருவருக்கும் பாசம் என்றில்லை என்றால், நம்முடைய மனநிம்மதி கொடுமைக்கார மாமியார் ஆதிக்கத்திலுள்ள பெண்ணின் சந்தோஷத்தைப் பொருத்ததானால், புரளியும் வதந்தியும் நம் முக்கிய வேலைகளுக்கு

ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்றால், இரவு முழுவதும் வரும் கெட்ட சொப்பனம் பகல் முழுவதையும் பாழ்படுத்துமேயானால், எவரை நம்பியிருக்கிறோமோ அவருக்கு விஸ்வாசமில்லை என்றால், கணவனுக்குக் குடிப் பழக்கமிருந்தால், எந்த நிமிஷம் பையனுக்கு எந்தக் கெட்டப் பழக்கம் ஏற்பட்டது என்று செய்தி வருமோ என்ற நிலையிருந்தால், நம் அந்தரங்கங்களை நம்பிக்கையோடு பெற்றவர் எந்த நிமிஷமும் நம்பிக்கைத் துரோகத்திற்குத் தயாரானால், யார் வேண்டுமானாலும் என் மீது செய்வினை செய்ய முடியுமென்றால், நண்பன் எதிரியாகத் தயங்காதவனானால், நமக்குக் கீழ் வேலை செய்பவன் நம்மை எதிர்க்கக்கூடிய நிலையிருந்தால், பண்பற்ற மக்களிடையே இருப்பதால் யார் எந்த நேரம் எதைக் கிளப்புவார்கள் என்று சொல்ல முடியாது என்ற நிலைமையிருந்தால், ஏதாவது தீராத வியாதி வந்துவிடலாம் என்ற பயம் அஸ்தியிலிருந்தால், எதை நம்புவது என்றுத் தெரியாத நிலையென்றால், என் கிராமியப் பாணி போகும் இடமெல்லாம் வாய்ப்பை அழிக்கக்கூடியதென்றால், நான் பிறந்த ஜாதியே எனக்கு எதிரியாகிவிட்டது என்றால், என் வறுமை தீராததானால், சட்டம் சாதகமாக இருந்த நிலையில் ஆபீஸ் பழக்கம் எதிராக இருந்தால், பெற்றோர்களே பணத்தை மட்டும் கருதும் மனப்பான்மையுடையவரானால், நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளானால், இன்று வாங்கிய பெரிய கடன் எதிர்காலத்தில் பெரிய குழியைப் பறித்துவிட்டது என்றால், ஜாதகம் எச்சரிக்கிறது என்றால், எதிர்காலத்தில் எதிர்பார்க்க ஒன்றில்லை என்றால், முதலாளி துரோக மனப்பான்மையுடையவரானால், நாட்டின் நிலை மாறும் வகையும் வேகமும் நம்மை பூரணமாகப் பாதிக்கக்கூடியதானால், இன்று வாடிக்கையாளர்களை மோசம் செய்யும் பார்ட்னர் என்றைக்கும் என்னை மோசடி செய்வார் என்றால், நிம்மதி நிலையாக நம்மை விட்டுப் போய்விடும். அவர்களுக்கும் நிம்மதிக்கும் காத தூரம்; கூப்பிட்டால் விலகிப்போகும் என்பது உண்மை.

இவர்கள் அனைவரும் நிம்மதியைப் பெற முடியும். அதற்கான

வழியுண்டு. அவர்கள் செய்ய வேண்டியதை சுருக்கமாக மீண்டும் சொல்கிறேன். நாம் செய்த தவறு, நம்மிடம் உள்ள குறை, என்பவற்றை நிலைமையில் கண்டு ஆராய்ந்து, எவற்றை விலக்க முடியுமோ அவற்றைப் பூரணமாக விலக்க வேண்டும். இனி நான் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்று நாம் சொன்னால், நம்மையறிந்த மற்றவர்களும் அதை ஆமோதிக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டும். அதன்பின் அனுபவசாலிகளால் கிடைக்கக்கூடிய அறிவுரை என்று ஒன்று இருந்தால், அதையும் பூர்த்தி செய்துவிட வேண்டும். அறிவின் சிறப்பால் ஒரு புதிய விஷயத்தை அறிந்தால், அது முடியுமானால், அதையும் செயல்படுத்திவிட வேண்டும். அதாவது நம்மால் முடிந்ததை எல்லாம் முழுவதுமாகப் பூர்த்தி செய்துவிட வேண்டும்.

அதன் பிறகு நம் உணர்வைச் சோதனை செய்ய வேண்டும். அங்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும். மேற்சொன்னவற்றைச் செய்ததாலேயே உணர்வு ஓரளவு நம்பிக்கை பெறும். அறிவின் துணை கொண்டு, அல்லது அனுபவசாலியின் சொல்லைக்கொண்டு, அல்லது அன்னை மீதுள்ள பக்தியால் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தால் நம்பிக்கையை உணர்வில் பிரதிஷ்டை செய்துவிட வேண்டும். அப்படிச் செய்த சில உதாரணங்களை மேலே குறிப்பிட்டேன். எந்த வகையாலும் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று பெரும்பாலோர் சொல்ல முடியாது. ஒரு சிலர் அப்படிப்பட்ட நிலையிலுமிருந்தால், அவர்கள் அன்னையை முழுவதும் நம்ப முன்வர வேண்டும். எந்த வகையாலோ நம்பிக்கை ஏற்பட்டபின், அன்னைக்கு "நிம்மதி வேண்டும், நிரந்தரமாக வேண்டும், பூரண நிம்மதி வேண்டும்'' என்று இடைவிடாமல் 3 நாள் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தால், நிம்மதி பிறக்கும். பிறந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும். நிம்மதியைக் கெடுத்த பிரச்சினை விலகும்.

அப்படி மனதில் ஏற்பட்ட நம்பிக்கையை மேலும் வளர்த்து, உணர்விலும், உயிரின் ஆழத்திலும் நிலைபெறச் செய்தால், வாழ்நாள்

முழுவதும் நிம்மதி நின்று நிலைபெற்று, தன் ஆட்சிக்குள் நம் வாழ்வைக் கொண்டுவரும்.

மனித மனத்தின் ஆழத்தை அறிந்தவர் யார்? யார் மனதில் எந்த எண்ணம் குடிகொண்டுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? பைத்தியம் பிடித்து உளறும்பொழுதும், ஜன்னி வந்து பிதற்றும் பொழுதும், மனிதன் நிலைகுலைந்த அந்த நேரத்திலும் வெளியிடாத இரகஸ்யங்கள் உண்டு. அவற்றில் வேதனை தருபவையும் இருப்பது உண்டு. சந்தேகங்களாக ஏற்பட்டவை மனநிம்மதியை உள்ளிருந்து அரிப்பதுண்டு. எந்த (psychiyatrist) உளநூல் மருத்துவரிடமும் வெளியிடாத விஷயங்களில் கோளாறு ஏற்பட்டு, நிரந்தரமாக அது நிம்மதியை அழிப்பதுண்டு. இதுவரை சொல்லியவை எல்லாம் இப்படிப்பட்டவர்க்கு ஓரளவு நிம்மதி கொடுக்குமேயன்றி, பளிச்சென்று பகலவன் உதித்தாற்போல் பாரம் நீங்கி, மனம் நிம்மதியில் திளைக்காது. அவர்களும் ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டால், அதுபோன்ற பெரிய பலனையடையலாம். அவர்கள் செய்யக்கூடிய சிலவற்றைக் கீழே தருகிறேன்.

  • 1. முதற்காரியமாக அறிவுக்கும், உணர்வுக்கும், நடைமுறைக்கும் பொருந்தாதவற்றை விட்டொழிக்க முன்வர வேண்டும். இதைச் சரிவரச் செய்தால், ஓரளவு நிம்மதி பிறக்கும்.
  • 2. ஒவ்வொருவரும் தமக்கே ஏற்பட்ட முறையில் ஒரு தவறான கருத்தையோ, மனப்பான்மையையோ (attitude) பெற்றிருப்பது வழக்கம். அது போன்று நமக்குள்ள பழக்கம், நம் மனக் குறையை வலியுறுத்துகிறதா என்று சோதனை செய்து, அப்படி இருந்தால் அந்தத் தவறான கருத்தை இந்தக் குறையிலிருந்து பிரிக்க வேண்டும். இதைச் செய்தவுடன் பாதிக்கு மேல் பாரம் இறங்கியது தெரியும்.
  • 3. வயதும், அனுபவமும் அதிகமானதால் பல விஷயங்களில் அறிவோடு நடந்துகொண்டாலும், இந்தக் குறையுள்ள

விஷயத்தில் 12 வயதுப் பிள்ளை போலவே நடந்துகொள்வது உண்டு. அப்படியிருந்தால் அதை அறிவால் அகற்ற முடியாது. ஆனால் அது அகற்றப்பட வேண்டியதுதான் என்ற கருத்தை ஆழமாக, அழுத்தமாக மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • 4. அறிவாலும், உணர்வாலும் ஏற்பட்ட இருள் திரைகளை ஓரளவு நீக்கியபின் பிரச்சினையின் மீது அன்னை ஒளி பட வாய்ப்பு உண்டு. அதனால் 3 நாள் இடைவிடாமல் தீவிரமாக, நம் அந்தரங்கக் கவலை கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், 4ஆம் நாள் முடிவில் புனர்ஜன்மம் பிறக்கும்.

என் தகப்பனார் கூலி வேலை செய்தவர். நான் I.A.S. ஆபீஸர் ஆகிவிட்டேன். யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை என்றாலும், இடைவிடாது மனதை இந்த பாரம் அழுத்துகிறது. அதனால் என் வாழ்க்கையே சோபை இழந்துவிட்டது. செல்வத்தில் பிறந்து, பின்னர் அது அழிந்து, தாயார் வீட்டு வேலை செய்து எங்களைக் காப்பாற்றினார். தாய்மாமன் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருந்தார். நானே காலேஜில் காப்பியடித்து, 3 வருஷம் பரீட்சை எழுதக்கூடாது என்று விலக்கியபின், இன்று பெரிய வக்கீலாக இருக்கின்றேன். மனச்சாட்சியை உறுத்தும் நிகழ்ச்சிகளும், மானம் பறிபோகும் செயல்களும் ஒருவருடைய வாழ்வில் அவர் தவறாலோ அல்லது மற்றவர்கள் தவறாலோ இருந்தால், இது போன்ற பாரம் மனத்தை அழுத்துவதுண்டு. பிறப்பு, வளர்ப்பு, வறுமை, சிறுமை, தீராத வியாதி ஆகியவற்றால் மனம் இதுபோல் புழுங்குவதுண்டு. இவற்றுள் ஒன்றை உதாரணமாக எடுத்து, மேற்சொன்ன முறைகளை எப்படிப் பயன் தரும் வகையில் பின்பற்றலாம் என்று முடிந்த அளவுக்கு விளக்குகின்றேன்.

ஒருவர் தற்சமயம் நல்ல நிலைமையிலிருந்தாலும், சிறு வயதில் பெற்றோர்களை இழந்து, தாய்மாமனுடைய வளர்ப்பில், அவருடைய கடுமையும், மாமியின் கொடுமையும், ஊராரின் பரிதாப உணர்ச்சி,

ஏளனமான சொற்களையும் அனுபவித்தவராயிருந்தால், அந்த ஆழ்ந்த உணர்வுகள் தற்பொழுது மனதைத் தினமும் புண்படுத்துவதானால், அவர் இம்முறையைக் கையாண்டு பலன் பெறும் வழியை விளக்குகின்றேன். இவருக்கு எது இல்லையோ அதையே நினைத்து உருகும் ஒரு பழக்கம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். பொதுவாகப் பள்ளியில் ஒரு பாடத்தில் முதல் மார்க்கும், மற்ற எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க்கும், ஏதோ ஒரு பாடத்தில் குறைந்த மார்க்கும் வாங்கிய பொழுது, வகுப்பில் இரண்டாம் மாணவனாக கடந்த 5 வருஷ காலத்திலிருந்த 8ஆம் rank 10ஆம் rank விட்டு உயர்ந்த அன்றும், இன்று கிடைத்துள்ள அத்தனை உயர்வுகளையும் கருதாமல், ஒரு பாடத்தில் வாங்கிய குறைந்த மார்க்கையே எண்ணி, மனம் உருகி, உடையும் குணம் உடையவர் இவர். இந்தக் குணத்தை முழுவதும் விட்டுவிட்டு புதிய நல்ல குணத்தை ஏற்றுக்கொள்ளுதல் நலம். அது சிரமம். குறைந்தபட்சமாக இவருக்கு மனத்தை உறுத்தும் குறையைப் பொருத்தாவது, இல்லாததை நினைத்து உருகும் மனப்போக்கை அறவே நீக்க இவர் முன்வர வேண்டும். இது அவசியம். இது எல்லோராலும் முடியும். முயன்று இதைச் சாதிக்க முன்வர வேண்டும். தனக்குள்ள இன்றைய நிலையில் உயர்வை நினைத்துச் சந்தோஷப்படவும், அன்றைய தாழ்வை மனதால் புறக்கணிக்கவும் முடிவு செய்ய, அந்த முடிவைத் தன் மனத்தளவில் குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டும். மேலே சொல்லிய 2ஆம் விஷயத்தை இது பூர்த்தி செய்யும்.

பின்னர் அவர் தம்மையும், தம் வாழ்வையும், மனநிலையையும் கூர்ந்து சோதனை செய்தால், ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தால், தம் குறையை மீண்டும் மீண்டும் நினைக்கும் பழக்கம் ஒரு பொழுதுபோக்காகவே பல வருஷங்களாக தம் மனதில் இருப்பது தெரியும். வேலை முடிந்து தனித்து உட்கார்ந்தால், உடனே இந்த எண்ணம் உதித்து, அதைப் பலவாறு சிந்திப்பது தெரியும். அது உண்மையானால், அதுபோல் செய்வதாலேயே இந்த எண்ணம்

வளர்ந்திருக்கிறது என்றுத் தெரியும். இனி தனித்திருக்கும் சமயத்தில் இந்தத் தாழ்வு நினைவுகள் வந்தால், அவற்றை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். மனதைக் குடைந்தெடுக்கும் எண்ணத்திற்குப் பெரும்பாலும் வலிமை குறையும்.

மேலும், தன்னைக் கூர்ந்து பார்க்கும்பொழுது, தாய்மாமனுக்குக் காப்பி என்றால உயிர். அவர் மீதுள்ள வெறுப்பால் 15 ஆண்டுகளாகக் காரணம் புரியாமல் காப்பியை விலக்கியிருப்பது விளங்கும். தாய்மாமன் வீட்டில் உள்ள பெயர் உடையவர் எவரையும், தாம் தம் உத்தியோகத்தில் கடமையை நிறைவேற்ற, புது ஆள் நியமனம் செய்த இந்த 15 ஆண்டுகளாக நியமித்ததில்லை என்பது விளங்கும். அன்றைய வாழ்வின் அம்சங்கள், மனிதர்கள், செயல்கள், எண்ணங்கள், சந்தர்ப்பங்கள், அனைத்தின் மீதும் நம்மை அறியாமல் வெறுப்பு ஏற்பட்டு, இந்த பல ஆண்டுகளாக வீட்டிலும், ஆபீஸிலும், சொந்த வாழ்க்கையிலும் அவற்றையெல்லாம் கூடியவரை விலக்கியது தெரியும். இப்படி விலக்கிய செயலே நம்மை அந்தக் குறையுடன் இறுகப் பிணித்துள்ளது என்பதே உண்மை. இன்று அந்த உண்மையை உணர்ந்து, அவற்றையெல்லாம் மனதிலும் செயலிலும் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அந்த மாற்றத்தால், மனத்தின் ஆழத்தில் இருந்த பூதம் வலுவிழந்து, உயிரிழந்து, பிணமாகி அங்கேயே கிடக்கிறது என்ற நிலை ஏற்படும்.

தொழிலில் எல்லா மற்ற விஷயங்களிலும் அறிவுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொண்டாலும், பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தும் செயல் ஒன்று ஏற்பட்டால் சிறுபிள்ளைத்தனமாக அதில் நடப்பது விளங்கும். அவற்றை நினைவுபடுத்தி மனத்தை மாற்றிக் கொண்டு, இனி இது போன்ற சிறுபிள்ளைத்தனத்தை விட்டுவிட வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

இவையெல்லாம் நம் குறையின் வலுவைக் குறைக்கும். இதுவரை நம் அறிவும், உணர்வும், பழக்கமும் குறைக்குத் துணையாக

இருந்தன. அக்குறை மனத்தினுள் வளர உதவின. மேற்கூறிய மாற்றங்கள் அறிவின் உதவியையும், உயர்வின் பக்கபலத்தையும், பழக்கத்தின் திறனையும் ரத்து செய்வதால், குறைக்கு வலு குறைவு. அநேகமாக உயிர் இழந்துவிடும். இதுவரை இருந்த நம் பழக்கங்கள் இந்தக் குறையின் மீது போர்வையாகவும், திரையாகவும் இருந்ததால் நம் அன்னை வழிபாட்டால் உள்ளே வந்த ஒளி அதன் மீது பட முடியவில்லை. திரை விலகிய பின் ஒளி அதன் மீது படும்.

அன்னையின் ஒளி கர்மத்தையே கரைக்கக்கூடியது. இந்தக் குறை இந்தப் பிறவியில் ஏற்பட்டது. நாம் செய்த மாற்றங்களால் அது வலுவிழந்து நிற்கிறது. இந்நிலையில் 3 நாள் இடைவிடாத, தீவிர பிரார்த்தனையை மேற்கொண்டால், தீவிரம் அதிகமாகும்பொழுது ஒளி குறையைத் தீண்டும். தொடர்ந்து குறை மீது ஒளி விழுந்தால் அது கரைய ஆரம்பிக்கும். முழுவதும் இழந்த நேரத்தில் புனர்ஜென்மம் ஏற்பட்டுப் புதிய வேகம் உற்பத்தியாகி, நம்மை ஆட்கொண்டு, ஆட்டி வைத்த பூதத்திலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.


Source: https://go.ly/VG0dG

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்